தமிழ் மக்கள் உயிரோடு ப(வி)தைக்கப்பட்ட பிரதேசம் செம்மணி பற்றிய ஆய்வு
Share
பொன்னையா சிந்துயன்
சட்டத்துறை இறுதியாண்டு மாணவன்
இங்கிலாந்து
யாழ்ப்பாணத்தின் ஆரம்ப பகுதியாக உள்ள செம்மணி அமைதியான மற்றும் அழகான நகரமாகும். ஆனால் இன்று சர்வதேச சமூகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாறியுள்ளது. காரணம் என்னவெனில் நிலத்தில் தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் குட்டிக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக, சகோதரர்களாக, சகோதரிகளாக இருந்தவர்கள் வன்புணர்வு செய்யப்பட்டு நிலையில், வாய்கள் மூடப்பட்ட நிலையில் எலும்புக்கூடுகள் கைகள் கட்டப்பட்ட கண்டுபிடிக்கப்படுவதாலாகும்.
இவ்வாறு இன்று உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ள செம்மணி புதைக்குழியின் கதை 1996 ம் ஆண்டு இடம் பெற்ற கிருஷாந்தி குமாரசாமி வழக்குடன் பின்னிப் பிணைந்துள்ளது. 1996 செப்டம்பர் 7ம் தேதி யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடியில் 18 வயது தமிழ் பள்ளி மாணவியான கிருஷாந்தி இலங்கை இராணுவத்தால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது தாயார், தம்பி மற்றும் ஒரு குடும்ப நண்பர் அவரைத் தேடிச் சென்ற போது அவர்களும் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். நான்கு உடல்களும் பின்னர் செம்மணியில் ஆழமற்ற கல்லறையில் புதைக்கப்பட்டனர்.
இந்த குற்றத்தின் மீதான சீற்றம் பல வீரர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியது. ஜூலை 1998ல் சோமரத்தன ராஜபக்ஷ உட்பட ஐந்து இலங்கை இராணுவத்தினர் கிருஷாந்தியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடைய கொலைகளுக்கு தண்டனை பெற்றனர். இந்த விசாரணை முடிவில் தான் ராஜபக்ஷ ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டான், கிருஷாந்தி வழக்கின் உடல்களைத் தாண்டி இன்னும் பல உடல்கள் செம்மணியில் இருப்பதாக கூறினான். தான் யாரையும் கொல்லவில்லை எனவும் கொல்லப்பட்ட உடல்களை மட்டுமே புதைத்தேன். செம்மணியில் “200 முதல் 400” பேர் புதைக்கப்பட்ட இடங்களை, குறிப்பாக 1995-1996 ல் இராணுவத்தின் பிரசாரத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை தன்னால் அடையாளம் காண்பிக்க முடியும் என அவன் கூறினான். இந்த ஒப்புதல் வாக்குமூலம் மனித உரிமை குழுக்களும், தமிழர்களும் பல ஆண்டுகளாக பேசி வந்ததை உறுதிப்படுத்தியது.
1996ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 600 பேர் வரை காணாமல் போனதாகவும் உடல்கள் “கழிவறை, குழிகள், பயன்படுத்தப்படாத கிணறுகள் மற்றும் ஆழமற்ற புதைகுழிகள்” ஆகியவற்றில் வீசப்பட்டதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை முன்னர் நம்பகமான ஆதாரங்களை அறிவித்திருந்தது. ராஜபக்ஷவின் சாட்சியம் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஒரு உறுதியான இடத்தை அளித்தது. ஆனால் கிருஷாந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் 2000ம் ஆண்டு பிணையில் வெளியே வந்து விட்டனர். கிருஷாந்தியினுடைய வழக்குக்கு மிகவும் அழுத்தம் கொடுத்த நபராக காணப்பட்ட S.T. ஞானநாதன் 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் இராணுவ முகாம் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர் செம்மணி, கிருஷாந்தி வழக்கு, சோமரத்னா வழக்கு என்பன என்ன நடந்தது? எப்படி போனது? எத்தனை பேர்? என யாரும் அதனைப் பற்றி பேசவில்லை.
இவ்வாறு இருக்கையில் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என 13 பெப்ரவரி 2025 அரியாலை சிந்துபதி மயானத்திற்கு கட்டுமான வேலையை மேற்கொள்வதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உடனடியாக வழக்கு நீதிமன்றம் செல்கின்றது. நீதிமன்ற உத்தரவின் பேரில் மீண்டும் தோண்டப்படுகின்றது. இன்றுவரை 33 மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 3 மற்றும் 1 வயது குழந்தைகளின் உடல்களும் பாடசாலை புத்தகப்பைகள் என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், இளைஞர்களும், தமிழ் மக்களும், மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் அவற்றின் தன்மையை காணாமல் செய்யவும், நீதிக்கான போராட்டத்தின் திசையினையும் போக்கினையும் மாற்றியமைக்க செயற்படுகின்றனர் சில தமிழின துரோகிகளும், இவற்றுக்கு காரணமான இனவாத அரசியல்வாதிகளும், இராணுவத்தினர்களும் தமிழ் இனப்படுகொலையில் உந்தையாக இருக்கும் திரனகம மற்றும் அகிலன் கதிர்காமர் நெட் வொர்க்குகள் என்பவற்றுடனும் இலங்கை இராணுவத்தினர் மற்றும் இலங்கை அரசுடனும், துணை ஆயுத குழுக்களுடன் தொடர்புடைய அருண் சித்தார்த், ஒரு பெண் மற்றும் சிங்கள யூடியூப்பர்கள் குழுவுடன் இணைந்து அரச ஆதரவுடன் இணைந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார். இந்தப் பிரச்சாரம் செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பான உண்மைகளை சிதைக்க முயல்கின்றது. இந்த செம்மணி மனிதப் புதைக்குழி இனப்படுகொலை போரின்போது அரசு மற்றும் அதன் துணை இராணுவப் படைகளால் நடத்தப்பட்ட நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் தமிழ் பொது மக்களின் பெருமளவிலான அடக்கங்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். அருண் சித்தார்த் குழுவின் ஒரு பகுதியாக, 1990 மார்ச் மாதம் தமிழ் பொது மக்களின் அடக்கத்திற்கு தமிழீழ விடுதலை புலிகள் (LTTE ] பொறுப்பு என்று குற்றம் சாட்டும் ஒரு தவறான கதையை இந்தக் குழு பிரச்சாரம் செய்கிறது.
இந்தப் பிரச்சாரத்தில் அருண் சித்தார்த்தின் மனைவி என குறிப்பிடப்படும் அந்தப் பெண் தனது தந்தையை மார்ச் 1990 இல் தமிழ் ஈழ விடுதலை புலிகள் கடத்தி, சித்திரவதை செய்து புதைத்ததாக குற்றம் சாட்டுகிறார். அந்த நேரத்தில் இந்திய அமைதி காக்கும் படை (IPKF) மற்றும் அதன் கூட்டணி துணை ராணுவ குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் செயல்பாட்டு இருப்போ, அல்லது முகாம்களோ இல்லை. மேலும் உள்ளார் சமூக உறுப்பினர்கள் விசாரித்த போது சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் தனக்கு ஆறு வயது தான் என அந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார். இது தான் ஒரு சாட்சி என அவர் வெளியிட்ட முந்தைய காணொளி அறிக்கைக்கு நேர் எதிரானதாகும். மாநகர, நகர, பிரதேச சபைகளில் ஆட்சியமைப்பதற்காக செம்மணி மனித புதைகுழியில் பல தமிழ் மக்கள் புதைக்கப்படுவதற்கு காரணமாக இருந்த அரச துணை ஒட்டுக் குழுவான ஈ.பி.டி.பி யின் அலுவலகம் சென்ற எம்.ஏ சுமந்திரன் செம்மணியில் இடம்பெற்ற சர்வதேச நீதிக்கான “அணையா தீபம்” போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தது அவரால் தமிழருக்கு எதிராக இழைக்கப்பட்ட மேலுமொரு துரோகச் செயலாகும்.

அகிலன் கதிர்காமர் இலங்கை அரசுக்கு சார்பாக சர்வதேச புலனாய்வு அமைப்புக்களுடன் சேர்ந்து செம்மணிப் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் காசா, இஸ்ரேல் தொடர்பான பல தகவல்களை வெளிப்படுத்தி தமிழ் மக்களுக்கு மேலுமொரு துரோகத்தை மேற்கொண்டு வருகின்றார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் அரசிடம் காசு பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (Jaffna University teachers Union) என்ற ஒன்றை உருவாக்கி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல நடவடிக்கைகளை இராணுவத்தினருடனும், ஒட்டுக்குழுக்களுடனும் இணைந்து மேற்கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற் கூறியல் (Anotamy) தலைவராக இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ரஞ்சனி திரணகம வினை (Ranjani thiranagama) EPRLF அமைப்பினை பயன்படுத்தி கொலை செய்ததுடன் அதனை விடுதலை புலிகள் செய்ததாக குற்றம் சுமத்தினார்.
இவ்வாறு எமது தமிழ் சமூகத்தில் காணப்படும் பல துரோகிகளும் செம்மணி மனித புதைக்குழி விடையத்தினை திசை திருப்பும் வகையில் பல நிகழ்வுகளையும், அரசியல் நாடகங்களையும் அரங்கேற்றி வருகின்றனர். “எதிரிகளை பிறகு பார்த்துக் கொள்ளலாம் முதலில் துரோகிகளை ஒழிக்க வேண்டும்” என்ற வகையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒரே பாதையில் இணைந்து போர் குற்றங்களை புரிந்த இலங்கை இராணுவத்தையும், இலங்கை அரசினையும் மஹிந்த, கோத்தபாய உட்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டு சித்திரவதை, வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவர்களையும் தமிழின துரோகிகளான சுமந்திரன், அருண் சித்தார்த், அகிலன் கதிர்காமர், டி.பி.எஸ் ஜெயராஜ், பாக்கிய சோதி சரவணமுத்து, ராஜன் ஹோல் (Rajan holle), EPDP, PLOT, TELO, EPRLF போன்றவர்களுக்கும் தகுந்த தண்டனையும் எமது உறவுகளுக்கான நீதியினையும் சர்வதேச விசாரணையும் பெற்றுக் கொடுக்கும் வரை போராட வேண்டும். செம்மணியில் எமது உறவுகள் உயிரோடு நிலத்தில் விதைக்கப்பட்டமைக்கான நீதி வேண்டி ஐக்கிய நாடுகள் சபை (United Nation organization) வரை தொடர்ந்து பயணிப்போம்.




















