துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்
Share
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் துபாயில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. துபாய் விமான நிலையத்தின் மேல் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி கேட்டவுடன், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் பகுதி அளவு செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எமிரேட்ஸ் நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது. இதற்கிடையே துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்பை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நகரில் விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக சில தினங்கள் முன் ஈரான் நடத்திய தாக்குதலில் பாம் ஜுமேராவில் உள்ள சொகுசு குடியிருப்புப் பகுதி புர்ஜ் அல் அரப் ஹோட்டல் அமெரிக்கத் தூதரகம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அந்த நாடுகள் ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தாதவரை அந்த நாடுகள் மீது இனி நேரடி தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதி அளித்துள்ளார்.




















