தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இருக்கிறாரா? -நயினார் நாகேந்திரன் விளக்கம்
Share
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:
கே: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து இருக்கிறார்களே? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு த.வெ.க. வருகிறதா? நேரடியாகவோ மறைமுகமாகவோ பேச்சுவார்த்தை நடத்தினீர்களா?
ப: அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. உங்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட எனக்கு அதில் விவரம் இல்லை.
கே: விஜய்யை பா.ஜ.க., சி.பி.ஐ. விசாரணைக்கு என்று அழைத்து மிரட்டி கூட்டணிக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே?
ப: எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம். எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன. அவ்வளவு பேரும் பொய் தான் சொல்கிறார்கள். தமிழகத்தில் தினமும் கொலைகள் நடக்கிறது. நாங்குநேரி, சிவகங்கையில் கஞ்சா போதையில் வருவோர் போவோரை எல்லாம் வெட்டுகிறார்கள். இதை ஆளும்கட்சிதான் செய்கிறது. அதற்கு காரணம் கஞ்சாதானே. நான் நாட்டு மக்களுக்கு என்னென்ன நடக்கிறது என்று சொல்கிறேன். உங்களுக்கு இருக்கிற ஒரே கவலை கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என்பதுதான்.
கே: உங்கள் கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என்று விரும்புகிறீர்களா?
ப: அதுபற்றி நான் கருத்து சொல்ல முடியாது.
கே: விஜய் முன்கூட்டியே இன்று டில்லிக்கு செல்வதால் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா?
ப: அவர் டெல்லிக்கு செல்வது எதற்காக என்று உங்களுக்கு தெரியும். அவர் எதுவும் முறையாக சொல்லவில்லை. கரூரில் நடந்த சம்பவத்துக்காக அவர் விசாரணைக்காக டெல்லி செல்கிறார். அதையும் இதையும் இணைத்து பேசுவது எந்த வகையிலும் சரியாக இருக்காது.
கே: விஜய் கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? இதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
ப: இது பற்றி இன்று என்னால் எந்த கருத்தும் சொல்ல முடியாது.
கே: எரிவாயு தோம்பு விவகாரம் தொடர்பாக கூட்டணி கட்சிகள் நாளை போராட்டம் நடத்துகிறார்களே?
ப: இன்று கப்பல் வந்துள்ளது. உலகம் முழுவதும் போர் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் எந்த போரும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் ஒரே அக்கப் போராக இருக்கிறது. போர் நடைபெறும் காலங்களில் என்னவெல்லாம் நடைபெறும் என்று உங்களுக்கு தெரியும். இது குறித்து பிரதமர் மோடி கூட்டம் போட்டு பேசியுள்ளார். எல்லோருக்கும் முறையாக கொடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு கண்ணும் கருத்துமாக இருக்கிறது. இவ்வளவு பேசுபவர்கள் எரிவாயு தோம்புக்கு 100 ரூபாய் குறைப்பேன் என்றார்களே, குறைத்தார்களா? பெட்ரோலுக்கு 10 ரூபாயும், டீசலுக்கு 5 ரூபாயும் குறைப்போம் என்று சொன்னார்களே, குறைத்தார்களா? காவேரி குண்டாறை இணைத்தார்களா? உங்கள் தொகுதியில் முதலமைச்சர், நான் முதல்வன் திட்டம் ஆகியவற்றில் எதையாவது நிறைவேற்றினார்களா? உலகத்தில் போர் நடைபெறும் சூழ்நிலையில் இதை எல்லாம் பெரிதுபடுத்தினால் எப்படி நியாயமாக இருக்க முடியும். தமிழகத்தில் எல்லா பெட்ரோல் பங்க்கிலும் கூட்டமாக இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அவர்களிடம் பணம் இருக்கிறது. அரசின் அதிகாரம் இருக்கிறது. என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் அதையெல்லாம் நினைத்துக் கொண்டு மாற்றி ஓட்டு போடுவார்கள்.
கே: தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. அதை எதிர்க்கின்ற அளவுக்கு மாற்று கூட்டணி உருவாகவில்லை என்று திருமாவளவன் கூறி உள்ளாரே?
ப: அவர்கள் எண்ணிக்கையில் கூடி இருப்பதால் வலு என்று சொல்ல முடியுமா? மக்களுடைய எண்ணம்தான் முக்கியம். மக்கள் மனம் மாறி இருக்கிறார்கள். கருணாநிதி இருக்கும் போதே நிறைய கட்சிகளை கூட்டணியில் சேர்த்தார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. எனவே கூட்டணி என்பது முக்கியமல்ல. நீங்கள் ஆட்சி செய்யும் போது மக்களுக்கு நன்மையை செய்தீர்களா? தீமையை செய்தீர்களா? என்பதை பார்த்துதான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.
கே: பீகாரில் நிதீஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலைமைதான் நாளை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் வைத்து உள்ளாரே?
ப: நிதீஷ்குமாருக்கு என்ன நிலைமை ஏன் என்பது உங்களுக்கு தெரியும்.
கே: சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கின்றன. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையே?
ப: தமிழக அரசு மீது மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.




















