LOADING

Type to search

இலங்கை அரசியல்

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழர்களின் விபரங்களை பதிவு செய்த பொலிஸார்

Share

(08-01-2026)
தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட ராணுவ ஆதரவு பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரை எதிரான மாதாந்த போராட்டத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் விபரங்களை சேகரிக்க பொலிஸாரின் முன்னெப்போதும் எடுக்காத முயற்சி, உள்ளூர் தமிழ் ஆர்வலர்களிடையே எதிர்காலத்தில் சாத்தியமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

விகாரை அமைக்கப்பட்ட தமது காணியை மீளத் திருப்பித் தரக் கோரி போயா தினத்தன்று திஸ்ஸ ரஜமகா விகாரைக்கு வந்த வாகனங்களின் இலக்கத்தகடுகள் மற்றும் சாரதிகளின் சாரதி அனுமதிப் பத்திரங்களை பொலிஸார் பதிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லூர் சிவகுரு ஆதீனத்தை சேர்ந்த தவத்திரு வேலன் சுவாமி புத்தாண்டின் முதல் போயா நாளில் விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்க முச்சக்கர வண்டியில் வந்தார். அதன் இலக்கத் தகடு மற்றும் சாரதியின் சாரதி அனுமதிப் பத்திர விவரங்களை பொலிஸார் பதிவு செய்தனர்.

வேலன் சுவாமி பொலிாரிடம் பதிவுக்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, சீருடையில் இருந்த ஒரு அதிகாரி, ‘ஆர்ப்பாட்டம் நடக்கிறது தானே ஐயா, ஆகவே போற எல்லா வாகனத்தையும் எழுத சொல்லி சொல்லியிருக்கின்றார்கள். அவ்வளவுதான் வேறு எதுவும் இல்லை,” என பதிலளித்தார்.

நாட்டில் எந்த இடத்திற்கும் பயணிக்க மக்களுக்கு உரிமை உண்டு எனவும், பொலிஸார் இவ்வாறு தடுத்து வைத்து விசாரணை செய்வது எதற்காக எனவும் கேட்டபோது, மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே தாம் அதைச் செய்வதாக பொலிஸார் கூறியிருந்தனர்.

வேலன் சுவாமி, பொலிஸார் மக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டே அவர்களைத் துன்புறுத்துவதாகவும், பின்னர் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியிருந்தார்.

பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி மக்களை வேறொரு நேரத்தில் அடக்குமுறைக்கு உள்ளாக்கும் நோக்கம் பொலிஸாருக்கு காணப்படுவதாக தான் நம்புவதாக போராட்டத்தில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்திருந்தார்.

“பலரிடம் தேசிய அடையாள அட்டையை விட அவர்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தை பதிவு செய்துள்ளார்கள். இதற்கு பின்னால் ஒரு உள்நோக்கம் இருக்கிறது. சாரதி அனுமதிப்பத்திரம், அதனைவிட அவர்களுடைய வாகனம். ஆகவே அவர்கள் என்னென்ன வாகனத்தை பயன்படுத்த போகிறார்களோ, அவர்களை வேறு இடங்களில் வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கம் என்று நாங்கள் கருதுகின்றோம்.”

போராட்டம் நடத்திய மக்கள் ஆளில்லா விமான கமராக்கள் (ட்ரோன்) மூலம் கண்காணிக்க பட்டதாக போராட்டத்தில் பங்கேற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தலைவர் தியாகராஜா நிரோஷ் குற்றம் சாட்டியிருந்தார்.

“இலங்கையில் இருக்கும் நடைமுறைகளுக்கு மேலதிகமாக ட்ரோன் கமராக்கள் ஊடாக போராட்டக்காரர்கள் கண்காணிக்கப்பட்டனர். . போராட்டத்திற்கு வந்த ஒவ்வொரு பிரஜையின் தகவல்களும் பதிவு செய்யப்பட்டன.”

திஸ்ஸ ரஜமகா விஹாரை கட்டப்பட்டுள்ள தமது காணியை விடுவிக்கக் கோரி 2023ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திஸ்ஸ ரஜமகா விகாரை அருகே போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள், விகாரை அமைப்பதற்கு 16 தமிழ் குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 8.5 ஏக்கர் காணியை இராணுவம் வலுக்கட்டாயமாக கையகப் படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.