“நம்மை தாமதமாக வந்தடையும் முதுமை என்பது ஒரு பெருமைக்குரிய பராயம் என்பதை உணரவேண்டும்”
Share
மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்
” நாம் பிறக்கும் நாளிலிருந்து சில பராயங்;களைக் கடந்த வண்ணம் வாழ்க்கையை அனுபவித்து வாழும் நம்மை இறுதியில் அணைக்கின்ற பராயம் தான் முதுமை. இவ்வாறு பல வருடங்களைக் கடந்து தாமதமாக வந்தடையும் முதுமை என்பது ஒரு பெருமைக்குரிய பராயம் என்பதை உணரவேண்டும். காரணம் ‘மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் கனியும் முன்னால் கசக்கும் பின்னால் இனிக்கும்” என்ற கூற்றுக்கு இணங்க மூத்தோரின் அறிவுரைகளை நிதானமாகக் கேட்டு நடந்தால் நன்மையே நிகழும் தவிர தீது ஒன்றும் இல்லை.”
இவ்வாறு. 14ம் திகதி வியாழக்கிழமை மதியம் மார்க்கம் நகரில் அமைந்துள்ள ‘அனி’ சன சமூக நிலைய கூட்ட அறையில் மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கம் நடத்திய ஒன்றுகூடலில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் அங்கு கலந்து கொண்ட மூத்தோர் மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் மத்தியில் தெரிவித்தார்.
மார்க்கம் – மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கத்தின் தற்போதைய தலைவர் திரு டேவிற் தலைமையில் நடைபெற்ற இந்த ஒன்றுகூடலில் சுமார் 40 அங்கத்தவர்களின் கனடிய அரசின் நிதி ஒதுக்கீட்டில் சிறிய கைக் கணணிகள் ( Tablets) வழங்கப்பெற்றன. இந்த அன்பளிப்புக்கள் பெற்றுக்கொண்டவர்கள் மத்தியிலும் ஏனையோருக்கும் மத்தியில் பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது..
‘உதயன்’ லோகேந்திரலிங்கம் சிறப்புப் பேச்சாளராக அங்கு கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றுகையில் சில சந்தர்ப்பங்களில் முத்தோர் என்ற பராயத்தை அடையும் எம்மவர்களில் சிலருக்கு தலைமுறை இடைவெளி காரணமாக குடும்ப உறவுகள் மத்தியில் அல்லது நட்பு வட்டாரத்தில் கருத்து வேறுபாடுகள் பாதகமான விரிசல்களை ஏற்படுத்தினாலும் எமது மூத்தோர் பெருமைக்குரிய பராயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிரக்கின்றோம் என்று ஆறுதல் அடைய வேண்டும்” என்றார்.
நீண்ட காலமாக வெற்றிகரமாக இயங்கிவரும் இந்த மார்க்கம்- மிடில்பீல்ட் தமிழ் மூத்தோர் சங்கமானது தொடர்ச்சியாக பல நற்பணிகளை ஆற்றிவருவதும் பேச்சாளர்களை அழைத்து அவர்களின் உரைகளை கேட்டு உற்சாகமடைந்து செல்வது கடந்த பல வருடங்களாக இடம்பெறும் நிகழ்ச்சிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

























