பட்டிருப்பு வலய மாணவர்களுக்கான ஸ்மார்ட் வகுப்பறை நிகழ்நிலை கற்றல் தொடக்கவிழா (14/7/2025)
Share
Online smart classroom inauguration.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பட்டிருப்பு வலயம் நகர்ப்புறம் சார்ந்த பகுதிகளைவிட தொலைதூர கிராமப்புறங்கள் அதிகமாகவும் பின்னடைவான பகுதிகளாகவும் இருப்பதால் சமமான கல்விவாய்ப்புக்காக மாணவர்கள் அங்கலாய்க்கும் நிலையே உள்ளது, பிரதானமாக கணித விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்கள் பெருமளவு பற்றாக்குறையாக உள்ளனர். இதனை நிவர்த்தி செய்யும் வகையில் கணித விஞ்ஞான ஆசிரிய்களில்லாத பத்து இடைநிலை பாடசாலைகளை நிகழ்நிலை டிஜிட்டல் முறையில் (Online digital ) இணைத்து ஸ்மார்ட் பலகையூடாக(smart board learning) கற்றல்கற்பித்தல் செயற்பாட்டை மேற்கொள்ள திட்டம் முன்வைக்கப்பட்டது.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பும்(IMHO-USA) ரட்ணம் நிறுவனமும்(Ratnam Foundation) இவ்வரிய செயற்பாட்டை செயற்படுத்த முன்வந்தமை சிறப்புக்குரியது. இதற்கான நிதிப்பங்களிப்பை தமது அன்புப்பெற்றோர். Drs பிரக்மன், விஜயலக்ஷ்மி சிவப்பிரகாசபிள்ளை ஆகியோரின் ஞாபகார்த்தமாக திருமதி தர்ஷனா சிவா அவர்கள் விருப்புடன் நல்கியுள்ளார்.
இதன்படி தெரிவுசெய்யப்பட்ட பத்து பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் டிஜிட்டல் பலகைகள்(smart board units)வழங்கப்பட்டதோடு நிகழ்நிலை கற்றலுக்கான நிலையத்துக்கும் ஒரு ஸ்மார்ட் பலகை வழங்கப்பட்டது. வளவாளர்களாக கணித,விஞ்ஞான துறை ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டு பத்து பாடசாலை மாணவர்களுக்குமான பொது நேரசூசியின் மூலம் தரம் 10,11 மாணவர்கள் நான்கு மணிநேர நிகழ்நிலை கற்றல் கற்பித்தலில் இணைக்கப்படுகின்றனர். இதன்உடனடி பலனாக ஆயிரத்துக்கு குறையாத மாணவர்கள் பயன் பெறுவதுடன் இருபது கணித விஞ்ஞான துறை ஆசிரியர்களது பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டு ஒரே விதமான ஆசிரியர்களது கற்பித்தல் அனுபவத்தை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகுத்துள்ளது.
14/7/2025 அன்று பட்டிருப்பு வலயகல்வித்திணைக்களத்தில் அமைந்துள்ள ஸ்மார்ட் ஆசிரிய வளநிலையத்தில் இத்திட்டம் சிறப்பாக தொடக்கிவைக்கப்பட்டது வலயக்கல்விப்பணிப்பாளர் சிறீதரன், IMHO பிரதிநிதி முத்து இராதாகிருஷ்ணன், IMHO கிழக்குமாகாண இணைப்பாளர் பிரதீப்காந், மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதிப்பணிப்பாளர்கள் என பங்குபற்றி இந்நிகழ்வை சிறப்பித்தனர்.




















