LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தானில் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதல் – 30 போராளிகள் சுட்டுக்கொலை

Share

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு எல்லையோர பகுதியில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து இருப்பதாக பாகிஸ்தான் கருதுகிறது. குறிப்பாக தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகவும், இதனால் ராணுவ முகாம், போலீஸ் நிலையங்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்துவதாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டுகிறது. இதனையடுத்து எல்லையோர மாகாணங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்தவகையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் ஒராக்சாய் பகுதி அருகே கடந்த 7-ந்தேதி ராணுவ வீரர்கள் முகாமிட்டு இருந்தனர். அப்போது ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் 11 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் எல்லை பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில் ஒராக்சாய் பிராந்தியம் ஜமால் மாயா நகரில் பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை கண்டதும் பயங்கரவாதிகள் பலர் தப்ப முயன்றனர். ஆனால் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களிடம் இருந்த துப்பாக்கி, வெடிமருந்து போன்றவை காவல்துறையால் கைப்பற்றப்பட்டன.