LOADING

Type to search

இலங்கை அரசியல்

புயலுக்குப் பின்னரான ஒரு போராட்டம் ? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

Share

தையிட்டி விகாரை சட்டவிரோதமானது என்று ஒரு தீர்மானத்தை வலிகாமம் வடக்கு பிரதேச சபை அண்மையில் எடுத்திருந்தது. அது சட்டவிரோதமான ஒரு விகாரை என்பதனை மூன்று மொழிகளிலும் எழுதி அங்கே காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.மேலும் அந்த விகாரையின் அதிபதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் பதவி உயர்வு ஒன்று வழங்கப்பட இருப்பதாக வந்த செய்திகளின் அடிப்படையில் அந்த நாளில் அந்த விகாரைக்கு எதிராக ஒரு போராட்டத்தில் நடாத்துவதற்கு வலி வடக்கு பிரதேச சபை முடிவெடுத்தது. அந்த அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அங்கே ஒரு போராட்டம் பெரும்பாலான எல்லா தமிழ்த் தேசியக் கட்சிகளாலும் முன்னெடுக்கப்பட்டது.

வழமையாக ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர்தான் தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் என்று கேட்டு போராடி வந்திருக்கிறார்கள்.அந்தப் போராட்டம் பெரும்பாலும் சிறிய கவன ஈர்ப்புப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறது.எனினும் அது ஒரு தொடர்ச்சியான போராட்டம். ஒவ்வொரு பௌர்ணமி நாளும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்களும் தொண்டர்களும் தையிட்டி விகாரைக்குப் போகும் வழியில் நின்று போராடுவார்கள்.

இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர்கள் தமிழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஒரு பின்னணியில், தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் இணைந்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் அங்கேகாணப்பட்டார்கள். குறிப்பாக சஜித் பிரேமதாசாவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவரும் அங்கே காணப்பட்டார்.ஆளும் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைத்தவிர, ஏனைய தமிழ் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அந்தப் போராட்டத்தில் காணப்பட்டார்கள்.

அந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என்று கூறி போலீசார் அதனை அடக்க முற்பட்டார்கள். அதன் விளைவாக நல்லூர் சிவகுரு ஆதினத்தின் முதல்வராகிய சாமியாரும் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இப்போராட்டத்தை முன்னெடுத்தது தையிட்டி விகாரை அமைந்திருக்கும் பகுதிக்குரிய பிரதேச சபைதான். எனவே இது மக்கள் ஆணையைப் பெற்ற உள்ளூர் ஆட்சி சபையால் முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்டம். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மத்தியில் குறிப்பிட்ட பிரதேச சபையின் தவிசாளர் இருக்கவில்லை.போலீசார் பலத்தைப் பிரயோகிக்க முற்பட்ட வேளை சில தவிசாளர்கள் அந்த பகுதியிலிருந்து நழுவி விட்டதாகத் தெரிகிறது.அதே சமயம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீரீதரன் அங்கே காணப்பட்டார்.கைது நடவடிக்கைகளின் போது அவரும் போலீசாரால் அவமதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

போராட்டம் நடந்த அன்று சிறீதரன் தையிட்டியில் நின்றார்.அதே நாள் பிற்பகல்,அவருடைய கட்சியின் பதில் தலைவராகிய சிவஞானம் கைநொச்சியில் நின்றார்.கிளிநொச்சியில் அவர் சந்திரகுமாரை சந்தித்து உரையாடியதாக படங்கள் வெளி வந்தன. சந்திரகுமாரை சிறீதரன் தனது உள்ளூர் எதிரியாகக் கருதுகிறார். ஆனால் சந்திரகுமாரை அவருடைய கட்சியின் பதில் தலைவர் அவருடைய அலுவலகத்திற்குத் தேடிச்சென்று சந்தித்திருக்கிறார்.அதுவும் எப்பொழுது என்று பார்த்தால் அவருடைய கட்சியை சேர்ந்தவர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்திற்கு அமைய, தையிட்டியில் ஒரு போராட்டம் நடந்த அன்று.அந்தப் போராட்டத்தில்,நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கலந்து கொண்டு போலீசாரின் பலப் பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்த ஒரு நாளில் அந்தச் சந்திப்பு நடந்திருக்கிறது.

கிளிநொச்சியில் சிறீதரனுக்கும் சந்திரகுமாருக்கும் இடையிலான முரண்பாட்டை சுமந்திரன் ஏற்கனவே கையாண்டு வருகிறார். சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இப்பொழுது அங்கம் வகிக்கின்றது.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அண்மையில் தமிழரசுக் கட்சியை சந்தித்திருந்தது. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க நேரம் கேட்டன.ஒருபுறம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சந்திரகுமார் காணப்படுகிறார்.அதேசமயம் உள்ளூரில் அவர் சிறீதரனுக்கு எதிராகவும் காணப்படுகிறார்.

தையிட்டி போராட்டம் நடந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் “காலைக் கதிர்” பத்திரிகையிலும் கொழும்பிலிருந்து வெளிவரும் “வீரகேசரி” மற்றும் “சண்டே டைம்ஸ்” ஆகிய பத்திரிகைகளிலும் சிறீதரனைக் குற்றஞ்சாட்டும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு முன்மொழியப்பட்ட இராணுவ அதிகாரிக்கு அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்ற சிறீதரன் வாக்களித்துள்ளதாக அச்செய்திகள் கூறுகின்றன.அது உண்மையான தகவல் அல்லவென்றும், அரசியலமைப்பு பேரவை கூடியபோது அதில் தான் நேரடியாக கலந்துகொள்ளவில்லை என்றும்,சூம் செயலி மூலமே அதில் பங்குபற்றிதாகவும்,அந்த ராணுவ அதிகாரியின் நியமனத்துக்கு எதிராகவே தான் வாக்களித்ததாகவும் சிறீதரன் கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கும் ஒரு யூடியூப்பருக்குக் கூறியிருக்கிறார்.

ஆனால் கட்சிக்குள் அவருக்கு எதிராக காணப்படும் சுமந்திரன் அணி இந்த விடயத்தை பெரிதாக்கி சமூகவலைத் தளங்களில் பரப்பி வருகிறது.அந்த ராணுவ அதிகாரியை நியமிக்கும் விடயத்தில் சிறீதரன் ஆதரவாக வாக்களித்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.சிறீதரன் அவ்வாறு வாக்களிக்கவில்லை என்றால் தனக்கு எதிராக எழுதியிருக்கும் மேற்படி பத்திரிகைகளுக்கு எதிராக வழக்குத் தொடுக்கலாம். அவர் அதைச் செய்து தன்னுடைய நேர்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் உண்டு. இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் சிறீதரன் தையிட்டியில் காணப்பட்டார்.அவரையும் போலீசார் மரியாதையாக நடத்தவில்லை.

அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் சாமியாரை போலீசார் கையாண்ட விதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. இதே இடத்தில் ஒரு பௌத்த மதகுரு இருந்திருந்தால் போலீசார் அவ்வாறு நடந்திருக்க மாட்டார்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. காவி உடை அணிந்த ஒரு பௌத்த மத குருவுக்கு கொடுக்கப்படும் மரியாதைக்கும் காவி உடை அணிந்த இந்து ஆதீன முதல்வருக்குக் கொடுக்கப்படும் மரியாதைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அது காட்டுவதாக தமிழ் சமூகவலைத்தளங்களில் சுட்டிக்காட்டப்படுகிறது. நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளன என்பதனை இது மீண்டும் நிரூபித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஒரு புயல் தாக்கிய பின்னரான அரசியல் சூழலில் நிகழ்ந்த முதலாவது போராட்டம் இதுவாகும். நாடு இப்பொழுதும் புயலின் அழிவுகளில் இருந்து முழுவதுமாக விடுபட்டிருக்கவில்லை. மலையகத்தில் இப்பொழுதும் பாதைகள் முழுமையாகச் செப்பனிடப்படவில்லை.இடம்பெயர்ந்த எல்லாருமே முழுமையாக தங்கள் இடங்களில் மீளக் குடிமரவில்லை. அரசாங்கம் அறிவித்த இழப்பீடுகள் முழுமையாக மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் மேற்படி போராட்டம் தையிட்டியில் வெடித்திருக்கிறது.

புயலுக்குப் பின்னரான அரசியல் சூழலிலும்கூட அரசாங்கம் தையிட்டி விவகாரத்தில் விட்டுக்கொடுப்போடு நடந்து கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் அந்த விகாரைக்கு பொறுப்பாக இருக்கும் விகராதிபதிக்கு அண்மையில் ஒரு பதவி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இந்தப் பதவி உயர்வும் மேற்படி போராட்டத்திற்கு ஒரு காரணம்.சட்டவிரோதமாக நிறுவப்பட்டிருக்கும் ஒரு விகாரையின் அதிபதிக்கு பதவி உயர்வு வழங்கியதன் மூலம் அரசாங்கம் அவருக்கு அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாக வலி கிழக்கு பிரதேச சபை குற்றம் சாட்டுகிறது.

தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது என்பது இலங்கையில் புதியது அல்ல.ஆயுதப் போராட்டத்திற்கான உணர்ச்சிகரமான சூழலை உற்பத்தி செய்த சம்பவங்களில் ஒன்றாகிய தமிழராட்சி மாநாட்டுப் படுகொலைகளுக்கு பொறுப்பாக இருந்த போலீஸ் அதிகாரிக்கும் பின்னர் ஏ.எஸ்.பி பதவி உயர்வு வழங்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அப்படித்தான் இப்பொழுது தையிட்டி விகாரதிபதிக்கும்.

கடந்த பல மாதங்களாக தையிட்டிட்டியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் போராடி வந்திருக்கிறது அப்போராட்டங்களில் சிலசமயம் போலீசார்ரோடு முரண்பாடுகள், தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டிருக்கின்றன.இம்முறை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் தமிழகத்தில் ஒரு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கும் காலகட்டத்தில், தமிழரசு கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் காணப்பட்டார்கள்.

போலீசார் ஏற்கனவே அந்தப் போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தடை உத்தரவுகளை பெற்றிருக்கிறார்கள்.அந்த தடை உத்தரவின் அடிப்படையில்தான் அவர்கள் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்கள் மீது பலப் பிரயோகத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பேரிடருக்கு பின்னரான அரசியல் சூழலில்,போலீசார் இவ்வாறு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களையும் அரசியல்வாதிகளையும் சாமியார்களையும் கையாண்ட விதம் ஒர் அடிப்படை உண்மையை தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் உணர்த்துகிறது.போராடவில்லை என்றால் சிங்கள பௌத்த அரசு கட்டமைப்பின் உண்மையான முகம் வெளியில் தெரியவராது என்பதுதான் அது.

இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நாட்டில் இனவாதம் இல்லை என்றும், தான் இனவாதத்துக்குத் தலைமை தாங்கவில்லை என்றும் கூறிக்கொள்கிறது. தனக்கு முன்பு ஆட்சி செய்த மேட்டுக்குடி அரசியல்வாதிகள்தான் இனவாதத்தை ஓர் அரசியல் முதலீடாகப் பயன்படுத்தினார்கள் என்றும் அரசாங்கம் கூறிவருகிறது. அரசாங்கம் இவ்வாறு கூறுவதை ஒரு பகுதி தமிழ் மக்களும் நம்புவதாகத் தெரிகிறது. அப்படி ஒரு சிறு பகுதி நம்புகிறதோ இல்லையோ தமிழ் மக்கள் அவ்வாறு நம்புகிறார்கள் என்று நம்பத்தக்க விதத்தில் அரசாங்கத்தின் சமூக வலைத்தள பிரச்சாரங்கள் காணப்படுகின்றன.

இப்படிப்பட்டதொரு பின்னணியில், தையிட்டி போராட்டமானது போலீசாரின் மெய்யான முகத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறது.ஒரு புயலுக்குப் பின்னரும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் செயல்பாடுகளில் மாற்றம் இல்லை என்பதனை அது நிரூபித்திருக்கிறது. இதன் ஊடாக தமிழ் மக்கள் ஓர் அடிப்படை விடயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.எதிர்ப்புக் காட்ட வில்லையென்றால், போராடவில்லையென்றால், இனவாதத்தை அம்பலப்படுத்த முடியாது என்பதே அது.ஒரு பேரிடருக்குப் பின்னரும் மாறாத இலங்கைத் தீவின் அரசியல் யதார்த்தம் அது