போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வங்கதேச நபர் கைது
Share
குருகிராமில் உள்ள பல பள்ளிகளுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறி, 30 வயதான ஒரு வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். மைக்கேல் என்றும் அழைக்கப்படும் சௌரப் விஸ்வாஸ் என்ற அந்த நபர், சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்து, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் வசித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜனவரி 28 அன்று, நகரில் உள்ள பல பள்ளிகளின் வளாகங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி மின்னஞ்சல்கள் வந்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாக செயல்பட்ட- மோப்ப நாய் படை, வெடிகுண்டு அகற்றும் பிரிவு மற்றும் தீயணைப்பு படை உள்ளிட்ட காவல் குழுக்கள், பள்ளி வளாகங்களை சோதனையிட சென்றன, ஆனால் அங்கு எந்த வெடிபொருட்களையும் கண்டுபிடிக்கவில்லை. அந்த மின்னஞ்சல்களின் மூலத்தைக் கண்டறிய சைபர் சவுத் குருகிராம் காவல் குழு விசாரணையை தொடங்கியதாக கூறினார். மார்ச் 19-ஆம் தேதியன்று, அவர்கள் குஜராத்தில் வைத்து குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையின் போது, விஸ்வாஸ் இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததும், ஆரம்பத்தில் ஒரு கார் தயாரிப்பு நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணிபுரிந்ததும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காலப்போக்கில், அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கிராபிக்ஸ் துறைகளில் திறன்களை பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த துறையில் சுயதொழில் செய்து வந்தார். விஸ்வாஸ், மமுனூர் ரஷீத் என்ற வங்கதேச நபருடன் தொடர்பு கொண்ட ஒரு வலைத்தள குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார். அமெரிக்க டாலர் வடிவிலான கிரிப்டோகரன்சிக்கு ஈடாக ஜிமெயில் ஐடிகளை வழங்குமாறு ரஷீத் அவரிடம் கேட்டுக்கொண்டார். விஸ்வாஸ் சுமார் 300 ஜிமெயில் கணக்குகளை வழங்கியதாகவும், அதற்கு ஈடாக தோராயமாக 250 அமெரிக்க டாலர்களை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அவர் வழங்கிய அந்த ஜிமெயில் கணக்குகளில் ஒன்றுதான், பின்னர் குருகிராமில் உள்ள பள்ளிகளுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்ப பயன்படுத்தப்பட்டது.




















