மக்களவையில் ராகுல்காந்திக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
Share
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: இந்திய ஜனநாயகத்தின் உயரிய அவையாக கருதப்படும் மக்களவையில் இன்று நிகழ்ந்த சம்பவம் மிகவும் வேதனையளிக்கிறது. ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க நினைக்கும் அராஜக இந்த போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடைபெறும் முக்கியமான நேரத்தில், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுவதற்கான வாய்ப்பே வழங்கப்படாதது ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்பட்ட அவமதிப்பாகும். மக்களவையில் மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்துவது எதிர்க்கட்சியின் உரிமையும் கடமையும் ஆகும். குறிப்பாக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பேச வேண்டிய நேரத்தில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளை புறக்கணிக்கும் செயலாகும். கருத்துகளை கேட்கவே கூடாது என்று நினைக்கும் ஆட்சியாளர்களின் மனப்பான்மை, ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். நாடாளுமன்றம் என்பது அதிகாரத்தின் மேடை அல்ல. அது மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் புனிதமான அரங்கம். அந்த அரங்கில் எதிர்க்கட்சியின் குரலை அடக்க முயல்வது ஜனநாயகத்தின் குரலை ஒடுக்குகின்ற செயலாகும். இந்திய ஜனநாயக மரபுகளை மதித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவையில் உரிய முறையில் பேச வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




















