மத்திய கிழக்கில் போர் பதற்றம் – துபாயில் அஜித் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
Share
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நேற்று ஈரான் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கின. ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுக்கவும், அதன் ஏவுகணைத் தளங்களை அழிக்கவும் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ என்றும், இஸ்ரேல் ‘ரோரிங் லயன்’ என்றும் பெயரிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளன. ஈரானின் அரசு ஊடகங்களும் இதை உறுதி செய்துள்ள நிலையில், அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஈரானும் நேற்று முதல் இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கக் கூட்டு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (துபாய், அபுதாபி) மீதும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. தொடர்ந்து இந்த நாடுகளில் ஈரானின் தாக்குதல் தொடர்கிறது. இந்நிலையில் தாக்குதல் நடைபெறும் நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் துபாயில் கார் பந்தயத்திற்காக தங்கியுள்ள நடிகர் அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அஜித், இன்று சென்னை திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதன் காரணமாக அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.




















