LOADING

Type to search

இலங்கை அரசியல்

முதுகெலும்பு இருந்தால் அர்ச்சுனா எம்.பி பகிரங்க விவாதத்துக்கு வருவாரா என்கிறார் உதவி தவிசாலர் கிஷோர் சவால்!

Share

பு.கஜிந்தன்

யாழ். இளைஞர்கள் அனைவரும் குடு பாவிப்பவர்கள் என்று கூறியதற்கு அருச்சுனா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முதுகெலும்பு இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருசுனா யாழ். இளைஞர்களுடன் பகிரங்க விவாதத்துக்கு வருவாரா என சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரச்சினையின்போது அருச்சுனாவுக்கு ஆதரவு வழங்கியவருமான ஞானப்பிரகாசம் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய ஒரு காணொளியில் யாழ். இளைஞர்கள் அனைவரும் குடு போதைப்பொருளை பாவிப்பதாகவும் தன்னால் மது அருந்தாமல் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருக்க முடியாது எனவும் அருச்சுனா கூறியுள்ளார். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

யாழ்ப்பாணத்தில் எத்தனை சதவீதமான இளைஞர்கள் போதைப்பொருள் பாவிக்கின்றார்கள் என்ற தரவுகள் அவரிடம் உள்ளதா? எழுந்தமானதிற்கு பேசுவதே அவரது தொடர்ச்சியான செயற்பாடாக காணப்படுகிறது.

அண்மையில் ஜெனீவா செல்லும்போது தான் பல மாதங்கள் செலவழித்து ஆதாரங்களை திரட்டி ஜெனிவாவிற்கு கொண்டு செல்வதாக கூறினார். தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பாகவே அவர் ஆதாரங்களை திரட்டி அங்கு செல்வதாக நாங்களும் நினைத்தோம். ஆனால் அவர் தன் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் தொடர்பாகவும், தனக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் ஆதாரங்களை திரட்டி ஜெனிவாவில் சமர்ப்பித்துள்ளார்.

தொடர்ச்சியாக ஜெனிவாவிற்கு செல்கின்ற எமது மக்கள் பிரதிநிதிகள் தமிழ் மக்களுக்கு நீதி வேண்டி, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களையே ஜெனிவாவில் சமர்ப்பித்து வந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சனா தனது சுயநலவங்களுக்காக புலம்பெயர் தேசத்து மக்களது நிதியை பயன்படுத்தி ஜெனிவாவிக்கு சென்றது வெட்ககேடான விடயம்.

புலம்பெயர் தேசத்து மக்களிடம் நாங்கள் கேட்பது யாதெனின் நீங்கள் உங்களது நிதியை வீண்விரயம் செய்யாதீர்கள். இங்கே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஜெனிவாவுக்கு அழைத்துச் சென்று அவர்களது பிரச்சினைகளை அந்த சர்வதேச அரங்கில் கூறுவதற்கு வழி சமையுங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா அண்மையில் கொழும்பில், வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனம் ஒன்று நிறுத்தி இருந்தார். இதன்போது அங்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தேர் அந்த இடம் வாகனம் நிறுத்துவதற்கு தடை எனக் கூறிய போது அவரை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெறும்போது அர்ச்சனாவின் தனிப்பட்ட ஆலோசகர் என்றும் சட்டத்தரணி என்றும் கூறப்படும் ஒரு பெண் அவரது அருகில் இருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு நடந்த சம்பவத்தை சிரித்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சாதாரண வீதி விதிமுற சட்டங்கள் கூட ஒரு சட்டத்தரணிக்கு தெரியாதா? அவர் தனிப்பட்ட ஆலோசகர் என்றால் அவர் செய்கின்ற தவறுகளை சுட்டிக்காட்டாமல் வேடிக்கை பார்ப்பாரா? அவர் இதுவரை எந்தவிதமான வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக எமக்கு தெரியவில்லை.

ஆரம்பத்தில் சாவகச்சேரி பிரச்சனையின்போது போது நாங்களே அவருக்கு பக்கபலமாக இருந்தோம். ஆனால் அவரது செயற்பாடுகள் பிழை என்பதால் நாங்கள் விலத்தி விட்டோம். மருத்துவ மாபியாக்களை ஒழிப்பதாகவும், ஊழல்களை ஒழிப்பதாகவும் கூறி நாடாளுமன்ற உறுப்பினராகியவர் இதுவரை எத்தனை மருத்துவ மாபியாக்களை ஒழித்துள்ளார்? எத்தனை ஊழல்களை ஒழித்துள்ளார்?

எனவே மக்களை பிழையாக வழிநடத்தும் இந்த வேலைகளை இருவரும் உடனடியாக நிறுத்த வேண்டும். தான் மதுபோதையிலேயே யாழ்ப்பாண இளைஞர்களை பற்றி தவறாக கூறியதாக பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். யாழ்ப்பாண இளைஞர்கள் அவருடன் பகிரங்க விவாதத்திற்கு தயாராக இருக்கின்றார்கள். முடிந்தால் அவரை இந்த விவாதத்தில் கலந்து கொள்ளுமாறு சவால் விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.