மொன்றியலில் நடைபெற்ற ‘அன்புநெறி’ அமைப்பின் “நாதசங்கமம்” இசை நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது
Share
கடந்த ஞாயிற்றுக்கிழமை 12-10-20205 அன்று கனடா அன்புநெறி சமூக நலத்திட்ட மையத்தின் சார்பில் மொன்றியலில் நடைபெற்ற “நாதசங்கமம்” எனும் இசை நிகழ்ச்சி இசை அன்பர்களை மயக்கியதாக இருந்த்து.
எமது தாய் மண்ணாம் ஈழத்திலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற வீணை கலைஞர் என். எஸ். வாகீசன் அவர்கள் அருமையான வீணை கச்சேரியை வழங்கினார். அவருடன் ஈழத்திலிருந்து வந்த தினா என்ற புல்லாங்குழல் கலைஞரும், கனடிய இசைக்கலைஞர்களும் இணைந்து இசை நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

திரு வாகீசன் அவர்கள் தாமே இசையமைத்திருந்த பாடலுடன் தொடங்கி, பக்திப் பாடல்கள், கல்யாணி ராகத்தில் அமைந்த இளையராஜா படைப்புகள், 70, 80, 90களின் நினைவில் நிறைந்த திரைப்படப் பாடல்கள் முதல் சமீபத்திய படைப்புகள் வரை பல சிறந்த இசைப்பாடல்களை நிகழ்த்தினர். தாயகப் பாடல்களும் நிகழ்ச்சிக்கு தனிச்சிறப்பை தந்தன.
வாகீசன் அவர்களின் வீணை நாதம் மண்டபம் முழுவதும் ஒலிக்க, பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி ரசித்தனர். இடையிடையே அவர் பாடல்களின் ராகங்கள் மற்றும் தன் வீணை உருவான பயணம் பற்றியும் பகிர்ந்து கொண்டார். தினா அவர்களின் புல்லாங்குழல் இசைக்கும் பார்வையாளர்களிடமிருந்து பெரும் பாராட்டு கிடைத்தது.
நிகழ்ச்சி இரவு 11.30 வரை நீடித்து, இசை வெள்ளத்தில் மூழ்கியிருந்த பார்வையாளர்கள் “இன்னும் ஒரு பாடல்!” எனக் கேட்டுக் கொண்டே கச்சேரியை அனுபவித்தனர்.
இசை மற்றும் நடனக் கலைகள் கற்றுவரும் இளம் தலைமுறை மாணவர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் கேட்புத் திறனையும் இசை உணர்வையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என திரு வாகீசன் அவர்கள் கூறினார். “வீணை கற்கும் சிறார்கள் முதலில் மரபுத் தமிழ் இசையை நன்கு கற்றுக்கொண்டு, அதன் பின்னர் திரை இசை பாடல்களை இலகுவாக வாசிக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடைவேளையின் போது அன்புநெறி அமைப்பின் சமூகப் பணிகள் பற்றிய விளக்கமும் வழங்கப்பட்டது. இத்தகைய நிகழ்வுகளின் மூலம் கிடைக்கும் நிதி, ஈழத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மொன்றியாலைச் சேர்ந்த ஒரு அன்பர் உடனடியாகவே $30,000 நன்கொடை அளித்து, ஆறு வீடுகள் கட்டிட முன்வந்ததும் பாராட்டத்தக்கது.
இசை கலைஞர்களின் சமூகநலப் பங்களிப்பை ஊக்குவிக்கும் விதமாக இவ்வாறான நிகழ்வுகளுக்கு தமிழ் சமூகத்தின் இளம் சந்த்தையினர் எதிர்காலத்தில் மேலும் ஆதரவளிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.எனினும், நிகழ்வில் கலந்து கொண்ட பார்வையாளர்களில் இளம் தலைமுறையினர் அதிகம் இருந்தது நிகழ்ச்சியின் முக்கியமான நம்பிக்கையாக அமைந்தது.




















