LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் நாரந்தனை பகுதியில் தமது பிள்ளைகள் மூவரையும் இழந்து தவிக்கும் பெற்றோர்!

Share

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு!

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்ட்பட்ட நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியில் 01-06-2024 மாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

நேற்று மாலை அருகிலுள்ள வீடொன்றிற்கு பால் வாங்குவதற்காக சென்ற இரு சிறுமிகளையும் காணவில்லை என பெற்றோர்கள் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன்போது பால் வாங்குவதற்காக இரண்டு சகோதரிகளும் துவிச்சக்கர வண்டியில் சென்ற நிலையில் துவிச்சக்கர வண்டி கைவிடப்பட்ட குளக்கரையிலே காணப்பட்டது. இந்நிலையில் குளத்திலே தேடுகின்ற முயற்சியின் போது இரண்டு சகோதரிகளும் சடலமாக நேற்று இரவு மீட்கப்பட்டனர்.

கைவிடப்பட்ட குளத்தின் அருகாமையில் செல்லும் ஒற்றையடிப் பாதையில் காணப்படும் கல்லொன்றில் தடக்கி வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தந்தையும் தாயும் கூலி தொழிலாளர்களாக காணப்பட்ட நிலையில் வீட்டிலே அவர்கள் இல்லாத நிலையில் இவர்கள் பால் வாங்க செல்லும் வழியில் சூர்யவத்தைப் பகுதியில் காணப்படுகின்ற தனியாருக்கு சொந்தமான கைவிடப்பட்ட நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

வழமையாக பயன்படுத்துகின்ற வீதியில் திரிகின்ற கடிநாய்களுக்கு பயந்தே இந்த ஆபத்தான பாதையை பயன்படுத்தியதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நிரஞ்சன் நிருசா வயது – 11 நிரஞ்சன்
அனுஷ்கா வயது- 06 ஆகிய இரு சிறுமிகளுமே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

மிகவும் வறுமையான நிலையில் காணப்படும் இவர்களின் 3 பிள்ளைகளில் இரண்டாவது மகள் கடந்த வருடம் தண்ணீர் பவுசரில் ஏறியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் நேற்றையதினம் மற்றைய இரண்டு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர்.

தமது மூன்று பிள்ளைகளையும் இழந்த நிலையில் ஏற்பட்ட அதிர்ச்சியினால் தாய் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து பொலிசாரின் உதவியுடன் சடலங்கள் குளத்தில் இருந்து மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவல்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்