LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா, எமது மரபுரிமைச் சொத்தாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்

Share

– இயற்கை நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள்!

யாழ்ப்பாணம் பழைய பூங்கா மரபுரிமைச் சொத்தாக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என இயற்கை நண்பர்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இயற்கை நண்பர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தாவரவியல் பரிமாணம், அரிதாகிச் செல்லும் பாரம்பரிய முதுமரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுரிமை நடைமுறைகளில் ஒன்று.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் வானளாவ வளர்ந்து நிற்கும் முதுமரங்கள் பல யாழ்ப்பாணத்தில் இப்பொழுது உயிருடன் இருக்கும் எல்லோரையும் விட வயதில் மூத்தவை. வாகன நெரிசல் மிக்க யாழ். நகரின் கரிக்காற்றை உறிஞ்சிச் சுத்தம் செய்யும் காபன் வடிகட்டியாக பழைய பூங்காவில் உள்ள மரங்கள் செயற்பட்டு வருகின்றன.

அபிவிருத்தி செயற்பாடுகளின் போது இயற்கையை பாதிக்காத வகையில் குறிப்பாக முதுமரங்களைப் பேணிப் பாதுகாப்பது என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்ட மரபுரிமை நடைமுறை.

போர்க் காலத்திலேயே பராமரிக்கப்பட்ட ஒரு மரபுரிமைப் பிரதேசத்தை அபிவிருத்தியின் பெயரால் அழியச் செய்யும் செயற்பாடுகள் அனைத்தும் பண்பாட்டு இன அழிப்பு என்பதாகவே பலரால் கூறப்படுகின்றது. இது தொடர்பாக இயற்கையை நேசிப்பவர்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

தற்போது உள்ள தலைமுறையை விட வயதால் மூத்த அந்த மரங்களை வெட்டுவதை மெளனமாக இருந்து ஆதரித்து – தமது வேர்களைப் பாதுகாக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் திரண்டு ஒரு தேசமாக நிமிர முடியாது.

எனவே மரபுரிமைச் சொத்துக்களை பேணிப் பாதுகாக்க வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாநகர சபை முதல்வர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.