LOADING

Type to search

உலக அரசியல்

ரஷிய – உக்ரைன் போர் 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் – டிரம்ப் எச்சரிக்கை

Share

அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் கடந்த மாதத்தில் மட்டுமே 25 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். வெடிகுண்டுகள் போடப்பட்டதில் மக்களில் சிலரும் கூட பலியாகி உள்ளனர். இந்த படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். அதனை நான் பார்க்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறோம் என கூறினார். இதுபோன்ற விசயங்களால் 3-ம் உலக போர் ஏற்பட்டு விடும். இதனையே நான் முன்பும் கூறினேன். இதுபோன்ற விளையாட்டுகளை ஒவ்வொருவரும் விளையாடி வருகின்றனர் என நான் கூறினேன். இது, மூன்றாம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும். அதனை நாம் பார்க்க விரும்பவில்லை என்று கூறினார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போர் முடிவுக்கு வருவதில் காணப்படும் மெதுவான முன்னேற்றம் டிரம்பை பெரிய அளவில் விரக்தியடைய செய்துள்ளது. இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, 4 ஆண்டு கால தொடர் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முதன்மை மத்தியஸ்தராக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. எனினும், எந்தவித முன்னேற்றமும் இல்லாத மற்றும் விரும்பிய முடிவுகள் கிடைக்காமல் வெறும் கூட்டங்கள் மட்டும் நடந்துள்ளதில் டிரம்ப் சோர்வடைந்து விட்டார். இரு தரப்பிலும் நடந்து வரும் இந்த போரால் டிரம்ப் பெரிய அளவில் மனமுடைந்து போய் உள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் காணப்படும் காலதாமதம் டிரம்பை விரக்தியடைய செய்து விட்டது. டிரம்ப், இனியும் இதுதொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என விரும்புகிறார். இந்த போர் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார் என லீவிட் கூறினார். இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் டிரம்ப் பேசினார். இதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன என வெள்ளை மாளிகையில் பேசும்போது அவர் குறிப்பிட்டார். இதேபோன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால், ரஷியாவோ போரை நிறுத்தும் முடிவுக்கு வரவில்லை. அதற்கான பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால், ரஷியா மற்றும் உக்ரைன் இடையே போரானது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3-ம் உலக போரில் கொண்டு சென்று விட்டு விடும் என டிரம்ப் எச்சரித்து உள்ளார்.