லண்டன் நாட்டிய உலகில் “நர்த்தன கலாலயம்”
Share
நாட்டிய உலகில் சிறப்பாக இங்கிலாந்தில் நாற்பது ஆண்டுகள் சிறந்ததும் அர்ப்பணிப்புள்ளதுமான நடனச் சேவையை வழங்கிவரும் நர்த்தன கலாலயம், தனது நாற்பதாவது ஆண்டின் அறுவடையாக நர்த்தன உற்சவம் என்ற நடன நிகழ்ச்சியை கடந்த 18.10.2025 சனிக்கிழமை எட்மன்ரன் சில்வர் வீதியில் அமைந்துள்ள மில்வீல்ட் தியேட்டரில் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடு சிறப்பாக நடாத்தியது.
நர்த்தன கலாலய அதிபரும் அதன் ஸ்தாபகருமான திருமதி பத்மினி குணசீலனின் நெறியாள்கையில் 70க்கும் மேற்பட்ட அவரது மாணவிகள், அந்த மாணவிகளின் மாணவிகள் என அரங்கம் நிறைந்த நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை குதூகலத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது.
மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து கர்நாடக இசையிலும் சிறந்தவரான சங்கீத வித்துவான் திருமதி பத்மினியின் மாணவர்களின் இசைக்கச்சேரியுடன் ஆரம்பமானது. கச்சேரி விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியரின் மாணவிகளும் தற்போது ஆசிரியர்களாகத் திகழும், சாரங்கா குணசீலன், அனுஷா சஜீவ், நிரூஜா குணரூபன், பானுமஞ்சரி கந்தஞானி, ஆகியோரின் மாணவிகளின் நடனங்கள் சிறப்பாக இளஞ்சிட்டுக்களின் வர்ண ஜாலங்கள்போல் கவர்ச்சிகரமாக இருந்தன.
முருகன் பாடல்களுக்கு சாரங்காவின் மாணவிகளின் நிகழ்ச்சி தொடர்ந்து நடனங்களில் நவரச பாவனைகள், விறுவிறுப்பான தில்லானா நடன நிகழ்ச்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்ததுடன் மேலைத்தேய நடனங்களுக்கு இணையாக சில இடங்களில் அவற்றையும் விஞ்சி அமைந்ததாக அவையோர் கருத்துப் பரிமாறியதை அவதானிக்கக்கூடியமாக இருந்தது.
இடைவேளையைத் தொடர்ந்து அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் புலவர் சிவநாதனின் எழுத்தாற்றலில் திரு இராமகிருஷ்ணன் அவர்களின் சிறந்த இராக அமைப்புக்களுடன், 58 நிமிடங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற நாட்டிய நாடகம் இடம்பெற்றது. எந்தவித இடைவெளியும் இன்றி நடனத்தாரகைள் மேடையின் இருபக்கங்களிலும் இருந்தும் சாரிசாரியாக தொடர்ச்சியாக நடனமாடி மகிழ்வித்தனர். மேடைத்திரையில் அழகழகாக அந்தந்த காட்சிகளின் வர்ணனைகள் கதைபேசிக்கொண்டு இருந்தன. கிரு~;ணரின் அனைத்து அவதாரங்களும் இரத்தினச் சுருக்கமாக மேடையின் நடனமாக வெளிவந்தவண்ணம் இருந்தன.
டனமாடிக்கொண்டிருந்த அதே மாணவிகள் வெவ்வேறு பாத்திரங்களில் நடனமாடியமை பார்வையாளர்களுக்கு விந்தையாகவும் பரவசமாகவும் அமைந்திருந்தன.
அதற்கும் மேலாக் குரு பத்மினி குணசீலன் மேடையேறி நடனமாடி மண்டபம் நிறைந்த கரகோசங்களைப்பெற்று மகிழ்வித்ததோடு தனது மாணவர்களுக்கும் ஆச்சரியத்தையும் அளித்தமை குறிப்பிடத்தக்கது.
திருமதி பத்மினி குணசீலன் அவர்கள் இந்தியாவில் நடனத்தைப்பயின்று இலங்கையில் 10 வருடங்கள் பல மாணவர்களுக்கு பயிற்றுவித்து 85ம் ஆண்டு முதல் இன்று வரை லண்டன் மாநகரில் விதைத்த விளைச்சலின் அறுவடையை அமோகமாகப் பெற்றுள்ளார் எனபது கண்கூடு. வாழ்க நர்த்தன கலாலயம். வாழ்க திருமதி பத்மினி குணசீலனும் அவர்தம் மாணவிகளும். நன்றி.
தகவல்: கவிஞர் பாலரவி




























