வடக்கு மக்களின் ”ஜனநாயகன் ”
Share
”நாடும் மக்களும் அநுரவோடு” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோஷம் தற்போது தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும் நிதர்சனமாகி வருகின்றது ஜனாதிபதி அநுரகுமாரவுடனான தமிழ் மக்களின் நெருக்கம் தனிப்பட்ட ஈர்ப்பு அல்ல. இது ஒரு அரசியல் மாற்றம். அநுரகுமார அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல்,பௌத்த, சிங்கள பேரினவாதம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தும் கூட வடக்குத் தமிழ் மக்கள் முண்டியடித்து ஜனாதிபதியை சொந்தம் கொண்டாடுகின்றார்கள் என்றால் எம்மில் என்ன தவறு உள்ளதென்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டியது கட்டாயம்”—–கே.பாலா
ஜே .வி.பி.-தேசிய மக்கள் ஆகியவற்றின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவின் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்ட வடக்கு மாகாணத்திற்கான 3 நாள் விஜயமும் அந்த விஜயத்தின்போது அவர் ஆற்றிய உரைகளும் வடக்கு மாகாண தமிழ் மக்களுடன் குறிப்பாக யாழ்ப்பாண மக்களுடன் அவர் நடந்து கொண்ட விதமும் தென்னிலங்கையிலும் வடக்கு மாகாணத்திலும் இரு வேறுபட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தை 14 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு முதலில் மன்னார் மாவட்டத்திற்கு சென்று காற்றாலை மின்திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். மறுநாள் 15 ஆம் திகதி வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் பொங்கல் விழா, மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய பொங்கல் விழா ஆகியவற்றில் பங்கேற்றார். மறுநாள் 16 ஆம் திகதி மீசாலை வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு,கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வு ஆகியவற்றில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகளில் அவர் பங்கேற்றபோது ஆற்றிய உரைகள்,தமிழ் மக்களுடன் நடந்துகொண்ட முறைகளே தென்னிலங்கையிலும் வடக்கு மாகாணத்திலும் இருவேறுபட்ட அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் ஜனாதிபதி ஆற்றிய உரைகள் தென்னிலங்கையில் உள்ள ,பௌத்த, சிங்கள இனவாதிகளிடம் கடும் விசனத்தையும் ,விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் ஏற்படுத்தி விட்டுள்ள நிலையில் மறுபக்கத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களுடன் நடந்துகொண்ட விதம், தமிழ் மக்கள் ஜனாதிபதியிடம் காட்டிய அன்பு,ஆதரவு தமிழ் அரசியல்வாதிகளிடம் கலக்கத்தை ,எதிர்காலம் பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் முதலாவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமிழ் மக்களுக்கு ஆற்றிய உரைகள்,பௌத்தத்திற்கும் சிங்களவர்களுக்கும் எதிராக ஜனாதிபதி செயற்படுகின்றார்,தமிழ் இனவாதிகளிடம் அடிபணிந்துவிட்டார்,பௌத்த மதத்திற்கு துரோகம் செய்து விட்டார், சிங்களவர்களைக் காட்டிக்கொடுத்து விட்டார் என்றெல்லாம் தென்னிலங்கை இனவாதிகளை, எதிர்கட்சிகளை, பிக்குகளை கொதிப்படைய வைத்தது ஏன் என்பதனைப் பார்ப்போம்.
ஜனவரி 16ஆம் திகதி யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றும் போது,”புனிதத் தலங்களை அடிப்படையாகக் கொண்டு மோதல்கள் நிலவுகின்றன , பௌர்ணமி தினங்களில் அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியையும் கடந்து யாழ்ப்பாணத்திற்கு வருகின்றனர். இங்கு வழிபட வருவதில் வெறுப்புணர்வே , இனவாதமே இருக்கின்றது. இல்லையென்றால் எதற்கு இந்தளவு விகாரைகளையும் கடந்து யாழ்ப்பாணத்திற்கு வழிபட வர வேண்டும்” என்று தையிட்டி திஸ்ஸ விகாரை சர்ச்சையை மையமாக வைத்துக் கூறியிருந்தார்.இதுதான் இன்று தென்னிலங்கை இன,மத வாதிகளை கொதிப்படைய வைத்துள்ளது
ஜனாதிபதியின் இந்த உரையானது வடக்கில் வரலாற்று பௌத்த வணக்கஸ்தலங்களை வழிபட செல்லும் பௌத்த மக்கள் தொடர்பில் தவறான கண்ணோட்டத்தை வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையிலும், வடக்கிற்கு வரும் பௌத்தர்கள் மீது வடக்கு மக்களுக்கு வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் அமைகின்றது. இதனால் வடக்கிற்கு யாத்திரை செல்லும் பௌத்தர்கள் இடையூறுகளுக்கு உள்ளாகும் அபாயமும் உள்ளது.ஜனாதிபதியின் உரையின் மூலம் வடக்கில் இருந்து இந்து ஆலயங்கள் பலவற்றை கடந்த கதிர்காமத்திற்கு வழிபாட்டுக்காக வரும் தமிழ் மக்கள் தொடர்பிலும் தெற்கு சிங்களவர்கள் மத்தியில் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தலாம். அத்துடன் தெற்கில் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களை கடந்து வடக்கிலுள்ள தேவாலயங்களுக்கு வழிப்பாட்டுக்கு செல்லும் கத்தோலிக்க மக்கள் மீதும் ஜனாதிபதியின் இந்த கருத்து பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.இதனால் ஜனாதிபதியின் இந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த நாட்டில் பௌத்த, இந்து, இஸ்லாம் மற்றும் கத்தோலிக்கம் உள்ளிட்ட சகல மதக் குழுக்களுக்கு இடையிலும் அமைதியின்மையை ஏற்படுத்தலாம் என்றவாறாக தென்னிலங்கை பௌத்த,சிங்கள இனவாதிகளினால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன .
அது மட்டுமன்றி இனங்களுக்கிடையே வெறுப்புணர்வையும் முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுவதாக கூறி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றும் செய்யப்பட்டுள்ளது.இதன்படி பதவிக்காலம் முடிவடைந்ததும் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவை கைது செய்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் கீழ் வழக்கு தொடருமாறு கோரி பிவித்துறு ஹெல உறுமயவின் இளைஞர் அணி செயலாளரான குமார ராஜரத்த என்பவரினாலேயே கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பௌத்த இனவாதிகளின் நோக்கத்தை ஜனாதிபதி அம்பலப்படுத்திவிட்டார் என்பதற்காக தென்னிலங்கை பௌத்த.சிங்கள பேரினவாதிகள் ஜனாதிபதி மீது கொதிப்பில் உள்ளதென்றால் தனது எளிமை,அரவணைப்பு ,அன்பின் மூலம் யாழ்ப்பாண மக்களின் -வடக்குமக்களின் ”ஜனநாயகன்”ஆக ஜனாதிபதி மாறிவிட்டதனால் வடக்கில் எதிர் காலத்தில் தமது அரசியல் இருப்பு,தமிழ் கட்சிகளின் அரசியல் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கலக்கத்தில் வடக்கு அரசியல் தரப்புக்கள் உள்ளன.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் தலைவராக மட்டும் இல்லாமல் மக்களுடன் நெருங்கிப்பழகும் சாதாரண மனிதனாக, ஒரு ஜனநாயகனாக தன்னை நிரூபித்து வருகின்றார். அத்துடன் நாட்டை இதுவரையில் ஆட்சி புரிந்த ஜனாதிபதிகளில் ஒரு திடமான, துணிவான, நேர்மையான, ஒழுக்கமுள்ள,தன் குடும்பத்தை போஷிக்காத, தனது உறவினர்கள், நண்பர்களுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவளிக்காத அல்லது சூறையாட அனுமதிக்காத, மக்களுடன் மக்களாக தோளில் கைபோட்டு அன்பு பாராட்டும் ஒரு தலைவராக இருப்பதே தமிழ் மக்களை அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் திருப்பி வருவதே தமிழ் அரசியல்வாதிகளுக்கு நெருக்கடியை, கலக்கத்தை கொடுத்துள்ளது
2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழினம் தமக்கான தலைமையை இழந்து விட்டது. தற்போதைய தமிழ் அரசியல்வாதிகளோ எந்நேரமும் எதிர்ப்பரசியல் செய்தும் , தமக்குளேயே வெட்டுக் குத்துக்களில், குழிபறிப்புகளில் ஈடுபடும், தரம் கெட்ட கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் அரசியல்வாதிகளாகவும் மக்களிடம் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்கள் தமக்கான மாற்றுத் தலைமை ஒன்றை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்,அதன் விளைவாகவே மக்கள் தம்மை அறியாமலேயே அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் ஈர்க்கப் பட்டு பாராளுமன்றத்தேர்தலில் அவரின் தேசிய மக்கள் சக்திக்கு வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள 6 பாராளுமன்ற ஆசனங்களில் 3 ஆசனங்களையும் வன்னி மாவட்டத்திலுள்ள 6 ஆசனங்களில் 2 ஆசனங்களையும் வழங்கி பேராதரவளித்தனர்.
தமிழர் தாயகமான கிழக்கு மாகாணம் சிங்கள,முஸ்லிம் அரசியல்கட்சிகளிடமும் வடக்கு மாகாணம் தேசிய மக்கள் சக்தியிடமும் பறிபோகக் கூடிய ஆபத்து இருந்தும் தமிழர்களுக்குத் தலைமையே இல்லாமல் போகக்கூடிய நிலைமை இருந்தும் இதன் பாரதூரமான ஆபத்து புரியாமல் தமிழ்கட்சிகள் செயற்பட்டு வருகின்றன . தமிழ் கட்சிகள் முதலில் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். மக்களுடன் இறங்கி வந்து பழக வேண்டும்,ஆனால் நாட்டின் ஜனாதிபதியை இலகுவாக சந்திக்கும் வாய்ப்பு தமிழ் மக்களுக்கு இருந்தும் தமது தமிழ் அரசியல் தலைமைகளை அவர்களினால் இலகுவில் நெருங்க முடியாதுள்ளது. தமது துன்ப ,துயரங்களை, விருப்பு. வெறுப்புக்களை, தேவைகளை தமது தலைமைகளுக்கு வெளிப்படுத்த முடியாதுள்ளது.
இன்றைய தலைமுறையினர் முன்னையவர்கள் போல் இல்லாமல் புதிய கண்ணோட்டத்தில் மக்களுடன் சகஜமாகப் பழகும் ஒரு தலைவனை எதிர்பார்க்கிறார்கள். அந்தவகையில் தம்முடன் இறங்கி ,நெருங்கி பழகும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கைகளைப் பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். தோளில் கைபோட்டு படம் எடுக்கின்றார்கள்,ஆண்,பெண் வித்தியாசமின்றி செல்பி எடுக்க முண்டியடிக்கிறார்கள் .தமது கவலைகளைகூறி கண்ணீர் வடிக்கின்றார்கள்.அவரும் அரவணைத்து ஆறுதல் கூறுகின்றார். சிரித்த முகத்துடன் அத்தனைபேருடனும் செல்பி எடுக்கின்றார். தாய், தந்தையரிடமிருந்து குழந்தைகளை வாங்கி கொஞ்சி மகிழ்கின்றார்.தனது கவர்ச்சிகரமான் பேச்சால் தமிழ் மக்களைக் கட்டிப் போடுகின்றார்.
ஆனால் இவ்வாறான ஜனாதிபதியின் வடக்கிற்கான -யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின்போது ஏற்பாடு செய்யப்பட்டு ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டங்களை, தமிழ் கட்சிகள் புறக்கணிக்கின்றன. அவரின் அழைப்பை நிராகரிப்பதாக அறிக்கை விடுகின்றன.பின்னர் தம்மை ஜனாதிபதி கூட்டங்களுக்கு அழைக்கவில்லை என ஒப்பாரி வைக்கின்றன.அந்தளவுக்கு தமிழ் கட்சிகள் குழம்பிப் போயுள்ளன.
”நாடும் மக்களும் அநுரவோடு” என்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கோஷம் தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் நிதர்சனமாகி வருகின்றது ஜனாதிபதி அநுரகுமாரவுடனான மக்களின் நெருக்கம் தனிப்பட்ட ஈர்ப்பு அல்ல. இது ஒரு அரசியல் மாற்றம். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தும் பௌத்த, சிங்கள பேரினவாதம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தும் கூட தமிழ் மக்கள் ,வடக்குத் தமிழ் மக்கள் முண்டியடித்துக் கொண்டு ஜனாதிபதியை வரவேற்கின்றார்கள் என்றால் எம்மில் என்ன தவறு உள்ளதென்பது தொடர்பில் தமிழ் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். அதற்கான இறுதி வாய்ப்பாகவே ஜனாதிபதியின் அண்மைய வடக்கு மாகாணத்திற்கான விஜயம் அமைந்துள்ளது. இதிலிருந்தும் தமிழ் கட்சிகள் பாடம் கற்கத் தவறினால் ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் காணாமல் போனதுபோல் அநுரகுமாரவின் ஆட்சியில் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் தமிழ் கட்சிகள் காணாமல்போகும். தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கும் பறிபோகும்.




















