LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு முதலமைச்சர் பதவிக்கு சுமந்திரன் பொருத்தமானவரா …?

Share

”வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றேன்.எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது. என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்கு நான் முழுமையாகக் கட்டுப்படுவேன்” என்கின்றார் சுமந்திரன்

கே.பாலா

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அடுத்து பல வருடங்களாக நடத்தப்படாதுள்ள மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்குமா ,நடக்காதா என்ற எதிர்வு கூறல்களுக்கு மத்தியில் ”வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட நான் தயார் ”என்ற அறிவிப்பை விடுத்து தமிழ் தேசிய அரசியல் பரப்பை குறிப்பாக வடக்கு அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளார் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன்.

”வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றேன். இந்த விடயத்தை நான் முறையாக கட்சிக்கு அறிவிக்கவுள்ளேன். எனினும், எனது வேட்புமனுவை அங்கீகரிப்பதோ அல்லது நிராகரிப்பதோ கட்சியின் முடிவைப் பொறுத்தது. என்னை விட பொருத்தமான ஒரு வேட்பாளரை வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு கட்சி அடையாளம் கண்டால் கட்சியின் முடிவுக்குநான் முழுமையாகக் கட்டுப்படுவேன்.” என்று அண்மையில் நடந்த தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தின் பின்னர் சுமந்திரன் கூறியுள்ளார்.

மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமா இல்லையா என்பதற்கு அப்பால் அப்படி ஒரு வேளை நடத்தப்பட்டால் அதில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொது செயலாளரான சுமந்திரன் தகுதியானவரா? சர்ச்சைகளுக்கு பெயர்போன சுமந்திரனை களமிறக்க தமிழரசுக்கட்சி முன்வருமா?அவ்வாறு அவர் களமிறங்கினால் அவருக்கு வடக்கு மக்கள் வாக்களிப்பார்களா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.

இதில் வடக்கு முதலமைச்சர் பதவிக்கு சுமந்திரன் தகுதியானவரா என்ற கேள்விக்கு கண்ணை மூடிக்கொண்டு ”ஆம் தகுதியானவர்”என்று பதில் கூற முடியும். சுமந்திரன் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி. இலங்கை சட்டத்தரணிகளில் பிரபலமானவர். சட்டத்தின் சகல சந்துபொந்துகளையும் நன்கு அறிந்தவர். சட்ட சாணக்கியம் மட்டுமன்றி அரசியல் சாணக்கியமும் கைவரப் பெற்றவர்.அரசியலிலும் அனைத்துலகிலும் அனைவரினாலும் நன்கு அறியப்பட்டவர். ஆங்கில, சிங்கள மொழியறிவு கொண்டவர்.தான் எடுத்த காரியத்தை முடிக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய தைரியம் கொண்டவர்.ஆகவே அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் சாதிப்பதனை விட ஒரு மாகாண முதலமைச்சராக பல விடயங்களை சாதிக்க முடியும். அதனை சாதிக்க சர்வாதிகாரத்தனமும் சாணக்கியமும் தற்றுணிவும் அவசியம். இவை சுமந்திரனிடம் தாராளமாகவேயுள்ளன. எனவே சுமந்திரன் முதலமைச்சராக வருவாரேயானால் வடக்கு மாகாணத்தில் ஒரு ”தரமான”ஆட்சி கட்டுக்கோப்புடன் நடந்தேறும் என்பதனை முழுமையாக நம்பலாம்.

சர்ச்சைகளுக்கு பெயர்போன சுமந்திரனை களமிறக்க தமிழரசுக்கட்சி முன்வருமா? என்ற அடுத்த கேள்விக்கு ” வேறு வழியில்லை” என்பதே பதிலாக இருக்கும். தமிழரசுக் கட்சியில் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவராகவும் வடக்கு முதலமைச்சராக போட்டியிட வேண்டுமென எதிர்பார்க்கப்படுபவருமாக தற்போதைய யாழ் மாவட்ட எம்.பி. யான சிவஞானம் சிறீதரன் உள்ளார். ஆனால் அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவுள்ளார். அதனை பல தடவைகள் பொது வெளிகளிலும் பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகவே அவர் முதலமைச்சர் வேட்பாளருக்கான பட்டியலில் இல்லை.

அவருக்கு அடுத்ததாக தமிழரசுக்கட்சியில் பிரபலமிக்கவர்களாக பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ,பதில் பொது செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரே உள்ளனர்.இவ்விருவரில் சி.வி.கே. சிவஞானம் ஏற்கனவே வடக்கு மாகாண அவைத்தலைவராக பதவி வகித்தவர். வயது முதிர்ந்தவர். அண்மையில் ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் தமிழரசுக்கட்சி கூட்டு சேர்ந்த விடயத்தில் முக்கியமானவராக இருப்பதால் மக்கள் வெறுப்புக்குள்ளாகி இருப்பவர். அதனால் இவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினால் தோல்வியடைவது நிச்சயம்.இது சிவஞானத்திற்கும் நன்கு தெரியும் என்பதனால் அவர் களமிறங்க மாட்டார். ஆகவே அடுத்த தெரிவில் உள்ளவர் சுமந்திரன் மட்டும்தான். ஆகவே தமிழரசுக்கட்சி சுமந்திரனை களமிறக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது .

அடுத்த கேள்வி முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் களமிறங்கினால் அவருக்கு வடக்கு மக்கள் வாக்களிப்பார்களா?என்பது. சுமந்திரன் தமிழ் தேசியத்திற்கு எதிரானவர்.பேரினவாத தலைவர்களின் விசுவாசி,இராணுவம் மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்படுமெனில் விடுதலைப் புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென பகிரங்கமாக கூறியவர். இனப்படுகொலை நடக்கவில்லை என்று கூறியவர், வடக்கு முதலமைச்சராக நீதியரசர் விக்னேஸ்வரன் இருந்தபோது அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர பின்னணியில் இருந்தவர்,வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழின படுகொலை தொடர்பான தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தவர், தமிழ் பொது வேட்பாளரை கடுமையாக எதிர்த்து சிங்கள வேட்பாளரான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளித்தவர், தமிழரசுக்கட்சியின் தலைவராக பொதுக்குழு வாக்கெடுப்பில் சிவஞானம் சிறீதரன் வெற்றிபெற்றபோதும் தனது விசுவாசிகளை வைத்து வழக்குத் தாக்கல் செய்து சிறீதரனை இன்று வரை பதவியேற்க விடாது தடுத்து வைத்திருப்பவர், தற்போது தமிழரசின் பதில் பொது செயலாளராகி கட்சியிலிருந்து சிறீதரன் எம்.பி.உள்ளிட்ட தமிழ் தேசிய உணர்வாளர்களை வெளியேற்றும் முயற்சியில் இருப்பவர் என்பனவற்றால் சுமந்திரன் தமிழ் மக்களின் வெறுப்புக்குள்ளாகி இருப்பவர்.அதனால்தான் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அவர் தமிழ் மக்களினால் தோற்கடிக்கப்பட்டார்.

இவ்வாறான நிலைமைகள் இருந்தாலும் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் களமிறங்கினால் விரும்பியோ விரும்பாதோ சுமந்திரனை ஆதரிக்க வேண்டிய நிலை தமிழ் மக்களுக்குள்ளது. ஏனெனில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்தவரையில் தமிழரசுக் கட்சிதான் தாய்க் கட்சி. பெரிய கட்சி. அதற்கு அடுத்ததாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது. ஆனால் தற்போது 3 ஆவது சக்தியாக சிங்கள பேரினவாத கட்சியான ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி கூட்டு வடக்கில் உருவாகி வருகின்றது ஆகவே தமிழரசு அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் ஒன்றின் முதலமைச்சர் வேட்பாளரையே தமிழ் மக்கள் ஆதரிப்பர்.இதில் முதல் தெரிவாக தமிழரசுக்கட்சிதான் உள்ளது. ஆகவே சுமந்திரன் போட்டியிட்டால் தமிழ் மக்கள் ஆதரவளிப்பர். ஆதரவளிக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்ட தேர்தல் தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பில் சிறீதரன்,சுமந்திரன் இணைந்து போட்டியிட்ட நிலையிலேயே சுமந்திரன் தோல்வியை தழுவினார். சிறீதரனுக்கு வாக்குகள் சென்றன. ஆனால் மாகாண சபைத் தேர்தலில் சிறீதரன் போட்டியிடாத நிலையில் சுமந்திரன் மட்டும் போட்டியிடுவதினால் வாக்குகள் பிளவடையாது. அத்துடன் சிறீதரனும் அவரது அணியினரும் கட்சி என்ற ரீதியில் சுமந்திரனுக்கு ஆதரவாக தீவிர பிரசாரங்களில் ஈடுபடுவர். ஆகவே தமிழரசுக்கட்சி ஓரணியாக செயற்படும்போது மக்கள் நிச்சயம் வாக்களிப்பர். அதிலும் ”படித்தவர்”,”மொழியாற்றல்”என்ற மயக்க நிலை ஒன்று வடக்கு தமிழரிடம் இருப்பதால் அது இரண்டும் கொண்ட சுமந்திரனுக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்.

தமிழ் தேசிய உணர்வாளர்களினாலும் பெரும்பாலான தமிழ் மக்களினாலும் சுமந்திரன் வெறுக்கப்படுபவர். அதனால் அவர் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினால் நிச்சயம் தோற்கடிக்கப்படுவார். இதனால் தமிழரசுக்கட்சியும் படுதோல்வி அடையும் என சிலர் எதிர்வு கூறுகின்றனர்.வெற்றிபெறக்கூடிய ஒரே வேட்பாளர் சிறீதரன். ஆனால் அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்பதில் உறுதியாகவுள்ள நிலையில் சுமந்திரனுக்கு பதிலாக யாரை களமிறக்கினால் தமிழரசுக்கட்சி வெற்றிபெறும் என்பதனை சுமந்திரனை எதிர்ப்போரினால் கூற முடியாதுள்ளது.

எனவே வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக சுமந்திரன் களமிறங்குகின்ற நிலையில் அவர் மீதுள்ள வெறுப்புக்கள்,குற்றச்சாட்டுக்களை காரணம் காட்டி வடக்கு தமிழ் மக்கள் சுமந்திரனை புறக்கணிப்பார்களாயின் அது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவியை ,வடக்கு தமிழ் மக்களை ஆளக்கூடிய அதிகாரத்தை சிங்கள பேரினவாத கட்சி ஒன்றுக்கு கொடுக்கக் கூடிய நிலைமையைக் கூட ஏற்படுத்தி விடும். இதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை குறைத்து மதிப்பிடவில்லை ஆனால் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளை அவதானித்தால் ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் ஒரு அச்சுறுத்தல் நிலையில் வளர்ந்திருப்பதை புறக்கணிக்க முடியாது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கின் தலைநகரான யாழ் மாநகரசபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சி 13 ஆசனங்களையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி 12 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 4 ஆசனங்களையும் ஈ.பி.டி.பி. 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 1 ஆசனத்தையும் பெற்றுள்ள நிலையில் சிங்கள பேரினவாத கட்சியான அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களை பெற்றிருந்தது. இது ஒரு அச்சுறுத்தலான நிலைமை. எனவே. மாகாணசபைக்கான தேர்தல் நடக்கும்போது வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதனை விட மாகாணசபையின் ஆட்சியே முக்கியம் என்பதனை தமிழ் மக்கள் நன்குணர வேண்டும்.அவ்வாறு உணரும் பட்சத்தில் தமிழ் மக்கள் நிச்சயம் சுமந்திரனுக்கு வாக்களிப்பார்கள். வாக்களிக்க வேண்டும்