வவுனியாவில் இடம் பெற்ற இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம்
Share
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார பிரிவுடன், Visions Global Empowerment, Sri Lanka – Ratnam Foundation, UK நிறுவனங்கள் இணைந்து, க.பொ.உயர்தர கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சியினை வவுனியாவில் சிறப்பாக நடாத்தியது.
வவுனியாவின் அமைந்துள்ள வடமாகாண தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப கேந்திர மத்திய நிலையத்தில் யூலை 17 முதல் 20ம் திகதி வரை நடாத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில்; வடமராட்சி மற்றும் தென்மராட்சி வலயங்களின் 17 பாடசாலைகளைச் சேர்ந்த 13 இளைஞர்கள் மற்றும் 27 யுவதிகள் நான்கு நாட்கள் கலந்துகொண்டு தலைமைத்துவம் சார்ந்த பங்கேற்றல் முறை செயற்பாடுகள் வழியில் பயிற்றுவிக்கப்பட்டனர்.
இளைஞர் மற்றும் யுவதிகளின் சுய விழிப்புணர்வு, தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்பல், தலைமைத்துவம், குழுச் செயற்பாடு, தொடர்பாடல், திட்டமிடல், நேர முகாமைத்துவம் மற்றும் முன்வைப்பு திறன் சார்ந்த திறன் விருத்திக்கு இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது எனலாம். இந்தப் பயிற்சிப் பட்டறையினை, தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்க்கும் தங்களை வெளிப்படுத்துவதற்கான சிறந்த களமாக பயிலுனர்கள் பயன்படுத்திக்கொண்டனர்.
தலைமைத்துவ பயிற்சியினைப் பற்றி உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாணவர் .அபிராம் அவர்கள் குறிப்பிடும்போது, “இந்தப் பயிலரங்கின் மூலம் நான் என்னை சிறப்பாக அறிந்து கொண்டேன். குறிப்பாக, எனது பலம், பலவீனம் மற்றும் தலைமைத்துவ திறன்களை தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. என்னைப் பற்றிய என் எண்ணங்களை திட்டமிட்டு வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக்கொண்டேன். நேர்மையாக பேசுவது, நேரத்தை திறம்பட நிர்வகிப்பது மற்றும் சிறிய செயல்களையும் திறம்பட மேற்கொள்ளும் ஆர்வத்தை இங்கே கற்றுக்கொண்டேன். முன்பு சவால்களைத் தவிர்க்க முயற்சித்திருந்த நான், இப்போது அவற்றை நேரடியாக எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையுடனும் தயாராகவும் இருப்பதை உணர்கிறேன்.”
விசன்ஸ் நிறுவனத்தின் வளவாளர்களால் வதிவிட முறையில் நடாத்தப்பட்ட இப்பயிற்சியில், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.பட்ரிக் டிரஞ்சன் அவர்கள் மூன்றாம் நாளில் கலந்து கொண்டு, மாணவர்களின் தலைமைத்துவ விருத்திக்கு ஆலோசனைகளை வழங்கியது பயிற்சிக்கு மென்மேலும் சிறப்பாக அமைந்தது.




















