LOADING

Type to search

சினிமா

விஜய்யின் “ஜன நாயகன்” ஓடிடி உரிமையை கைவிடும் அமேசான்?

Share

நடிகரும், த.வெ.க., தலைவருமான விஜய், ‘ஜன நாயகன்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை கே.வி.என். புரொடக்‌ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு தணிக்கை சான்று கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை வாரிய குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது. பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர். முன்னதாக தங்களது வாதத்தை கேட்காமல் தணிக்கை சான்று தர உத்தரவிட்டதாக தணிக்கை வாரியம் தரப்பு கூறிய வாதம் ஏற்கப்பட்டது. தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் கிடைக்காததால் கடைசி நேரத்தில் ‘ஜன நாயகன்’ வெளியீடு நிறுத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் என படத்தின் சான்றிதழுக்காக அலைந்த படக்குழு, இறுதியில் வழக்கை திரும்பப் பெற்று மறுதணிக்கைக்கு படத்தை அனுப்பிவைத்தது. மறுதணிக்கை குழுவினர் படத்தை பார்த்து சான்று அளிக்காமல் தாமதப்படுத்தி வரும் சூழலில், எப்போது வேண்டுமானாலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால் ‘ஜன நாயகன்’ திரைப்படம் தேர்தலுக்கு பின்னரே திரைப்படம் வெளியாகும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், படத்தின் ஓடிடி உரிமைத் தொகையை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படும் அமேசான் பிரைம் நிறுவனம், ஒப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தயாரிப்பு நிறுவனம் அல்லது ஓடிடி நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.