ஊழல் அரக்கனை வெற்றிகரமாக எதிர்த்து போராடிய அநுரகுமார அரசாங்கத்தின் ஒரு வருட பயணத்தின் பூர்த்தி
Share
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செப்டெம்பர் 21 அன்று ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது ஆட்சியில் முதல் ஆண்டை நிறைவு செய்கிறார். முந்தைய ஜனாதிபதிகள், குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷ உட்பட்டவர்கள் தங்கள் பதவியேற்பு ஆண்டு நிறைவைக் கொண்டாட கோடிக்கணக்கான பொதுப் பணத்தைச் செலவிடும் முன்னுதாரணத்தை நிறுவியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரை தனது முதல் பதவியேற்பு விழா குறித்து எதையும் அறிவிக்கவில்லை. அனுபவமற்ற ஜனாதிபதியும் அனுபவமற்ற பாராளுமன்றமும் நீண்ட காலம் நீடிக்காது என்று ஜனாதிபதியின் அரசியல் எதிரிகள் கூறி தங்களை தாங்களே திருப்திப் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் ஆண்டு நிறைவைக் கொண்டாடவில்லை,
ஏனெனில் இது தேவையற்ற செலவாகக் கருதப்படுகிறது. ஆனால் நாட்டின் வங்குரோத்து நிலைக்கு முக்கிய காரணங்களாக இருந்த ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாதாள உலகத்தின் செயற்பாடுகளை ஒழிப்பதில் இந்த அரசாங்கம் சிறப்பாகச் செயற்பட்டுள்ளது என்பது பொதுமக்களின் கருத்தாகும். நாடு வங்குரோத்தாவதற்கு அரசியல்வாதிகள் மக்களுக்குப் புரியாத காரணங்களை அப்போது கூறினர். ஆனால் இப்போது அதற்கான காரணம் ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாதாள உலகத்திற்கு இடையே உடைக்க முடியாத அரசியல் ஆதரவு வலையமைப்பு இருந்தது என்பவைதான் காரணம் என்பது புரிகிறது. நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து காப்பாற்றுவதில் ரணில் விக்கிரமசிங்க பெரும் பங்களிப்பு செய்ததாக நன்கு கற்றவர்கள்கூட கூறி வந்தனர். ஆனால் நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வருவதற்கு ரணில் முக்கிய காரணங்களில் ஒருவர் என்பதை யாரும் வலியுறுத்தவில்லை.
நாட்டின் மக்கள், குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள், தங்கள் உயிரைப் பராமரிக்க இரத்தக் கண்ணீர் சிந்திய நேரத்தில், ரணில் விக்கிரமசிங்க தனது இரண்டு நாள் வெளிநாட்டுப் பயணத்திற்கு ஒன்றரை கோடி ரூபாய் செலவிட்டார் என்பது இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ‘ஊழலுக்கு ஏழைகள் தான் பணம் செலுத்துகிறார்கள்’ என்று போப் பிரான்சிஸ் கூறியது எவ்வளவு உண்மை என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.
எனவே இந்த நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் முதன்மையான நடவடிக்கை ஊழலை ஒழிப்பதாகும். ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் நம் நாட்டின் கலாச்சாரமாக மாறிவிட்டாலும், இந்த அரசாங்கம் வங்குரோத்து நிலைக்கு மூல காரணமான ரணில் விக்கிரமசிங்க அல்லது மஹிந்த ராஜபக்ஷ மீது அல்லது அவர்களது குடும்பத்தினர் மீது கை வைக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குதர்க்கமாக கூறி வந்தனர். அரசாங்கம் அவ்வாறு செய்யத் துணிந்தால், முழு நாடும் அரசாங்கத்திற்கு எதிராக பற்றி எரியும் என்று எச்சரிக்கை விடுத்தார்கள். ஆனால் உண்மையில் அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக் ஷ குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்து தடுத்து வைத்தபோது, குறிப்பிடத்தக்க எதிர்பபைக் காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் அந்த நடவடிக்கைக்காக அரசாங்கத்தைப் பாராட்டினர். அபிவிருத்திப் பணிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் நாட்டில் ஊழல் மற்றும் தொடர்புடைய பிற குற்றங்களை ஒழிப்பதற்கும் கொடுக்கப்படும் என்பதை ஜனாதிபதி நிரூபித்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து அரசாங்கத்திற்கும் காவல்துறைக்கும் வெளிப்படையாக சவால் விட்ட பாதாள உலகக் கும்பல்கள் இப்போது தடுப்புக்காவலில் உள்ளதுடன் மற்றைய பாதாள உலகக் கும்பல்கள் மற்றும் அவர்களின் அரசியல் தொடர்புகள் பற்றிய அதிர்ச்சியூட்டும் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். பாதாள உலக வலையமைப்பு இப்போது அதிர்வடைந்துள்ளது. பாதாள உலக அமைப்பு விரைவில் அல்லது காலப்போக்கில் முற்றாக ஒழிக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
ஊழலை ஒழிக்க முடியாது என்ற கருத்து மக்களிடையே ஆழமாக வேரூன்றியிருந்தது. மேலும் இந்த விடயத்தில் மக்கள் ஆர்வம் காட்டாததால் அது ஊழல் வளர வழிவகுத்தது. ‘மக்களின் அலட்சியமே ஊழல் வளர சிறந்த விளை நிலமாகும்’ என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் தலைவர் டெலியா ஃபெரீரா கூறியிருக்கிறார்.
ஊழலை ஒழிப்பதில் மக்கள் பங்களித்தால், தாங்கள் பாதுகாக்கப்படுவார்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கருத்தும் நம்பிக்கையும் மக்களிடையே படிப்படியாக வளர்ந்து வருகிறது. ஊழல் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட இந்த நாட்டில் இது மிகவும் பாராட்டக்கூடிய நேர்மறையான மாற்றமாகும். ‘ஒரு ஊழல் நிறைந்த அமைப்பை மாற்ற முடியும் என்பதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்’ திரும்பவும் அழுத்திக் கூறுகிறார் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின் ஆரம்ப நிறுவுனர் பீட்டர் ஐஜென்.
முந்தைய அரசாங்கங்களால் முன்வைக்கப்பட்ட எந்தவொரு நல்ல கொள்கையையும் அல்லது நடவடிக்கையையும் மக்களும் அரசியல்வாதிகளும் ஒருபோதும் ‘ஒரு தேசிய கொள்கை அல்லது தேசிய நிகழ்ச்சி நிரலாக’ பார்க்கவில்லை, மாறாக ‘அரசாங்க நிகழ்ச்சி நிரலாகவே’ பார்த்தார்கள். இதற்குக் காரணம் கடந்த அரசாங்கங்களின் அணுகுமுறையும் அவர்களின் நடத்தையுமே ஆகும். எனவே அவர்கள் ஊழல் ஒழிப்பில் பங்களிக்க முன்வரவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியல் ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவத்தையும் அழுத்தமாக வலியுறுத்துகிறது. அதே வேளையில் அரசாங்கமும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த கருத்தியலை கடைப்பிடித்து முன்னுதாரணத்தைக் காட்டி வருகிறார்கள். எனவே இது ஒரு தேசிய நிகழ்ச்சி நிரல் அல்லது கொள்கையாகக் கருதப்பட வேண்டும். கிளீன் ஸ்ரீலங்கா என்பது அரசாங்கத்தால் மேலிருந்து கீழாக செயற்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டம் மட்டுமல்ல, அது மக்களாலும் சமூகங்களாலும் கீழிருந்து மேல் வரை செயற்படுத்தப்பட வேண்டிய ஒரு திட்டமாகும்.
எனவே ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாதம் 21ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு, மக்கள் அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள், ஊழலை ஒழிப்பதன் முக்கியத்துவம் மற்றும் நெறிமுறை நடத்தையை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
இவை கிளீன் ஸ்ரீலங்காக கருத்தியலின் முக்கிய அம்சங்களாகும். 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மத நிறுவனங்கள் வெறும் வழிபாட்டிற்கு அப்பால் சென்று ‘நெறிமுறை நடத்தையின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்கலாம். உண்மையில் நெறிமுறை நடத்தை என்பது ஒரு ஆன்மீகக் கருத்தாகும். செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினமாகவும் கருதப்படுகிறது. தோட்ட கிராம கல்வி அபிவிருத்தி அமைப்பு பிரிடோ நிறுவனம் (PREDO) கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியலை ஒரு தேசிய வேலைத் திட்டமாகப் பார்க்கிறது. மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியிலும் ஊழல் எதிர்ப்பு உணர்வு கட்டியெழுப்பப்பட வேண்டும் என பிரிடோ கருதுகிறது. தோட்ட மற்றும் கிராமப்புறங்களில் பணி புரியும் ஒரு சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் PREDO அதன் கிராம அபிவிருத்திக் குழுக்கள், பெண்கள் மற்றும் இளைஞர் அமைப்புகளை ‘ஊழலை ஒழித்தல் மற்றும் நெறிமுறை சமூகத்தை உருவாக்குதல்’ என்ற சுலோகத்தை பரப்புவதற்கும் 21 ஆம் திகதி தொடங்கி ஒரு வாரத்திற்கு தொடர்புடைய செயற்பாடுகளை நடத்துவதற்கும் அணிதிரட்டும். கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியலின் நான்காவது அம்சமான சுற்றாடல் நிலைபேறான தன்மை என்ற விடயத்திற்கும் முக்கியத்துவம் அளித்து சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடும். அதே நேரத்தில், அக்கரப்பத்தனை பகுதியில் உருவாக்கப்பட்ட பெண்கள் குழு கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியலை அதன் யாப்பின் ஒரு பகுதியாக உள்ளடக்க திட்டமிட்டுள்ளது.
மேலும் நாட்டின் பொதுத் தேர்தல் முறையைப் பின்பற்றி பெண்கள் குழு உத்தியோகத்தரை தேர்ந்தெடுக்க இந்த மாதம் 21ஆம் திகதி (இன்று) ஒரு ஜனநாயகத் தேர்தலை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இவை அனைத்தும் நமது சமூக கலாச்சாரத்திலிருந்து ஊழலை ஒழிக்க முடியும் என்ற கருத்தையும், அடிமட்டத்திலிருந்து ஒரு ‘நெறிமுறை சமூகத்தை’ முறையாக உருவாக்க முடியும் என்ற கருத்தையும் பரப்பும் முயற்சியின் ஒரு பகுதியாகும். கிளீன் ஸ்ரீலங்கா கருத்தியலை விசேடமாக ஊழல் ஒழிப்பில் அரசாங்கமும் அரசாங்க அதிகாரிகளும் மட்டுமல்ல, ‘இந்த நாட்டின் ஒவ்வொரு அடிமட்ட அமைப்பும், ஒவ்வொரு தனிநபரும் பங்களிக்க முடியும், பங்களிக்க வேண்டும். நாட்டின் எதிர்கால சுபீட்சத்துக்கு இது மிகவும் அவசியமாகும். இறுதியாக, பத்மே அமிதாலர் ஸ்டார் வார்ஸ் என்பவரின் கூற்றை உங்களுக்கு நினைவூட்டி முடிக்கிறேன். ‘ஊழலை ஒழிக்க பாடுபடுபவர்கள், அது சாத்தியம் என்பதை நம்புபவர்கள், இன்னும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பது தான் ஒரு நம்பிக்கை தரும் செய்தி




















