சங்கு சின்னப் பிரச்சனை: சொல்லியது ஒன்று நடந்தது வேறு
Share
(கனடா உதயன் சிறப்பு கட்டுரை)
நடராசா லோகதயாளன்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல் ஆணையத்திடமிருந்து சங்கைப் பெற்றது பொதுக் கட்டமைப்பை சீற்றம்கொள்ள வைத்துள்ளது.
சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கியமையைக் கண்டித்து தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளராக களமிறக்கப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேந்திரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
செப்ரெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது பொதுக் கட்டமைப்பாக போட்டியிட்ட சமயம் எனக்கு வழங்கிய சங்குச் சின்னத்தை தனியான ஒரு கட்சிக்கு வழங்க வேண்டாம் என்றே அந்த சட்டத்தரணியூடாக அரியநேந்திரன் கடிதம் அனுப்பியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்திற்கு வாக்களித்த 2 லட்சத்து 26 ஆயிரம் மக்களும் ஓர் பொதுவான நிலைப்பாட்டில் அல்லது தமிழின உணர்வில் அந்த முடிவினை மேற்கொண்டனரே அன்றி ஓர் அரசியல் கட்சிக்காக வாக்களிக்கவில்லை என்பதனால் உடனடியாக அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலிற்கு அந்தச் சின்னத்தை பயன்படுத்த எந்தக் கட்சியினையும் அனுமதிக்க வேண்டாம் என்றே கோரப்பட்டுள்ளது
இருந்தபோதும் அரசியல் கட்சிகளிற்கான சின்னங்களை வழங்குவது முழுக்க முழுக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற் துணிவிற்கு உட்பட்ட விடயம் என்ற வகையில் அந்தச் சின்னம் தற்போது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வசமாகி விட்டது. இதனால் பொதுக் கட்டமைப்பில் இருந்த சிவில் சமூகம் சார்பிலும், ஏற்கனவே பல்கலைக் கழக சமூகம் சார்பிலும் சங்குச் சின்னத்தை ஓர் அரசியல் கட்சி தமதாக்கியமை தவறு என தெரிவித்து விட்டனர். இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலின்போது சங்குச் சின்னத்தை ஆதரித்த 34 சிவில் அமைப்புக்களும் விழி பிதுங்கி நிற்கின்றனர் அவர்களும் இந்த அறிவப்பை வெளியிட்டாலும் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
இதேநேரம் சங்குச் சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக் குழுவில் கேட்ட மறுதினம் சி.வி.விக்கினேஸ்வரன் அண சார்பிலும் சங்குச் சின்னத்திற்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவினாலேயே நிராகரிக்கப்பட்டு விட்டது.
இதிலும் ஓர் நகைச் சுவை என்னவென்றால் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி சார்பிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் தேர்தல்கள் ஆணைக் குழு நிராகரிக்கும் வரையில் இந்தக் கோரிக்கை தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரனே அறிந்திருக்கவில்லை என்பதே பெரிய வேடிக்கை.
இவ்வாறு சங்குச் சின்னத்திற்கு வாக்குச் சேகரிக்கின்றோம் என்ற பெயரில் தமக்கு விளம்பரம் தேடிய அரசியல்வாதிகள் தொடர்பில் இவர்களிற்காக பாடுபட்ட சிவில் செயல்பாட்டாளர்கள் பெரும் கோபத்தில் இருக்கும் அதே நேரம் எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.
இந்த நிலைமைதான் பொது கட்டமைப்பின் ஊடாக இதில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியினர் செய்வார்கள் என்பதனை ஜனாதிபதித் தேர்தலின் முன்பு யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியில் உள்ள ராஜா கிறீம் கவுஸ் மண்டபத்தில் யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்கள் பலரை பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேந்திரன், எழுத்தாளர் நிலாந்தன், பொ.ஐங்கரநேசன், இந்திரன் ஆகியோரும் பங்கு கொண்டிருந்த சமயம் கட்டுரையாளரான என்னால் பகிரங்கமாக கூறியபோது தமிழ் மக்கள் பேரவையின் மூலம் சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினரான விடயம் இனி நடக்காது என்றனர். உடனேயே என்னால் கூறப்பட்டது பின்பு அதில் சட்டத்தையே கூறுவர் என. இன்று அவ்வாறே இடம்பெற்று விட்டது. தனி ஒருவரான என்னால் இதை சிந்தித்தபோது கட்டமைப்பினர் சிந்திக்கத் தவறியமை துரதிஸ்டவசமானதே.
இங்கே அரசியல் கட்சிகள் ஏமாற்றியதனை பொறுக்க முடியாத அரியநேந்திரன் ஓர் புது வியூகம் வகுப்பதாகவே தெரிகின்றது. அது நிச்சயமாக இந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியினருக்கு ஓர் தலையிடியாகவும் மாறக் கூடும். பொதுக் கட்டமைப்பில் எட்டிய தீர்மானங்களை அரசியல் கட்சகள் மீறியதனால் அதனை மதித்த அல்லது முரண்படாத வேட்பாளர் இருவரின் நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பா.அரியநேந்திரன் மேடை ஏறுவார் என தற்போது அறியக் கிடைக்கின்றது.
அது நிச்சயமாக சிவஞானம் சிறிதரன் மற்றும் சிறிநேசன் ஆகியோரது மேடைகளாகவே இருக்கும என தற்போதே கூறி வைக்கலாம்.
சங்கு சின்னத்தை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்கியமையைக் கண்டித்து தேர்தல்கள் ஆணைக் குழுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் கண்டிப்பாக சிவில் சமூகம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியை ஆதரிக்காது என்ற நிலையில் இவர்களின் பார்வை தற்போது மன்னார் ஆயர் இல்லத்தின் பக்கம் திரும்பி அவர்களின் தயவைப் பெறுவதற்கு கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றின் மூலம் முயற்சிக்கப்படுகின்றது. அது எந்த அளவிற்கு வெற்றியளிக்கும் என்பது அடுத்து வரும் வாரங்களிலேயே கண்டுகொள்ள முடியும்.
இதேநேரம் ஜனாதிபதித் தேர்தலில் சங்கு பெற்ற வாக்கையேனும் 5 கட்சியின் கூட்டணி பெறுமா இல்லையா என்பது இக்கூட்டணி தொடர்பான பார்வையுள்ளது.
இந்த நெருக்கடியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுரேன் குருசாமி ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது,
கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சங்குச் சின்னத்தில் தமிழ் தேசியத்தின் திரட்சிக்காக பொது வேட்பாளர் களம் இறக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அவருக்கு அமோக ஆதரவை வழங்கினார்கள்.
அந்த ஆதரவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சங்க சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் சங்கு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.
ஜனாதிபதி தேர்தலில் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் மக்களுக்கான மாற்றம் கிடையாது, அதனை அரசாங்கம் ஜெனிவா தொடர்பில் வெளியிட்ட கருத்து தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.
இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிராகரிக்கிறோம், உள்நாட்டு பொறிமுறை மூலமே பிரச்சனைகளுக்கான தீர்வு என தெரிவித்திருக்கின்ற நிலையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியத்தின் பால் பயணிக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து சங்குச் சின்னத்தில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தி எமது பலத்தை காட்டியுள்ளோம்.
அதே சங்கு சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஓரணியில் பயணிக்கின்ற தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளது.
சங்குச் சின்னம் தமிழ் தேசிய உணர்வுடன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பயணிக்கும் சின்னமாக காணப்படுகின்ற நிலையில் சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்வதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பயணத்தை தொடர முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். இவற்றின் பெறுபேறு நவம்பர் 15 ஆம் திகதியே அறியக் கிடைக்கும்.
அடுத்த வாரம் மற்றுமோர் கட்சி தொடர்பில் பார்வை அமையும்.