LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ்க் கட்சிகள் வாய் திறக்குமா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு என்று அழைக்கப்படும் ஓர் அமைப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் பிரகடனப்படுத்தப்பட்ட பொழுது அதில் உரையாற்றிய அரசியல் விமர்சகர் ஒருவர் பின்வருமாறு சொன்னார்….” பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீனாவின் தத்துவஞானியாகிய லாவோட் – Lao Tzu பின்வருமாறு கூறுவார்…. மக்களிடம் செல்லுங்கள். மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். மக்களோடு வாழுங்கள். மக்களுக்கு என்ன தெரியுமோ அதிலிருந்து தொடங்குங்கள். மக்களிடம் என்ன இருக்கின்றதோ அதிலிருந்து கட்டி எழுப்புங்கள். காரியம் முடியும் பொழுது; இறுதி இலக்கு எட்டப்படும் பொழுது ; தலைவர்களுட் சிறந்தவர்களான மக்கள் சொல்வார்கள் நாங்களே அதைச் செய்தோம்என்று.

பொதுக் கட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்தியது. அப்பொது வேட்பாளர் தமிழ் தேர்தல் வரலாற்றில் இதுவரை யாரும் பெறாத ஆகக்கூடியபட்ச வாக்குகளைப் பெற்று முதற்கட்ட வெற்றியை மக்களுக்கு பெற்றுக் கொடுத்தார். ஆனால் ஜனாதிபதி தேர்தல் முடிந்த சில நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது மக்கள் அமைப்புக்கு சவாலாக மாறியது. அடுத்தடுத்து தேர்தல்கள் வரும் பொழுது மக்கள் அமைப்பு என்ன செய்யலாம் என்ற விவாதம் அமைப்புக்குள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.இரு வேறு கருத்து நிலைகள் காணப்பட்டன

ஒரு தரப்பு கூறியது,பெற்ற வெற்றியை அடுத்த கட்டத்திற்கு மடைமாற்றி மக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று. திரட்டப்பட்ட மக்களை கைவிட முடியாது, தேரை இழுத்துக் கொண்டு வந்து தெருவில் விடக்கூடாது, பொது வேட்பாளரை நோக்கி குவிக்கப்பட்ட மக்கள் உற்சாகமாகவும் ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காணப்படுகிறார்கள், அவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும்.அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நிகழ்காலத்தைக் கையாளா விட்டால் எதிர்காலத்தைக் கையாள முடியாது….என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

அந்த வாதத்தை மறுத்துப் பேசிய மற்றொரு தரப்பினர் ஒரு மக்கள் அமைப்பின் வேலை தொடர்ச்சியாக தேர்தலில் ஈடுபடுவது அல்ல, ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்களின் கூட்டுவிருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு பயிற்சிக் களமாகவே மக்கள் அமைப்பு கையாண்டது. அதை ஒரு தேர்தலாகக் கையாளவில்லை. அங்கு நிறுத்தப்பட்ட வேட்பாளர் ஒரு குறியீடு. அவர் தேசத்தை திரட்டுவதன் குறியீடு. எனவே பொவேட்பாளரை நோக்கி வாக்குகளை திரட்டுவது இலகுவானது. அந்த விடயத்தில் இணைக்கக்கூடிய கட்சிகளை இணைத்து கட்சிகளைக் கடந்து வாக்குகளை திரட்டுவதும் இலகுவானது. அதைத்தான் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு செய்தது. ஆனால் தொடர்ந்து தேர்தல்களை எதிர்கொள்வதற்கு கட்சிகளால் முடியும். மக்கள் அமைப்பினால் அது முடியாது. அதற்கு பின்வரும் காரணங்கள் உண்டு

மக்கள் அமைப்பானது தேர்தல்களில் ஈடுபடுவதை மட்டும் தனது செயல்வழி ஒழுக்கமாகக் கொண்டிருக்கவில்லை. தேசத்தைக் கட்டி எழுப்புவது என்பது தேர்தல்களின் மூலம் மட்டும் செய்யப்படக்கூடிய ஒரு விடயம் அல்ல. அது தேர்தல்களுக்கும் அப்பால் ஆழமானது, நீண்ட கால நோக்கிலானது. இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம், ஒரு மக்கள் அமைப்பானது கட்சிகளைப்போல செயல்படுவது என்றால் அந்த அமைப்பிடம் அதற்குரிய கட்டமைப்புகள் இருக்க வேண்டும். ஆனால் ஆறு மாதக் குழந்தையான மக்கள் அமைப்பிடம் அதற்குரிய பலம் இருக்கவில்லை. அதனால் ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வெற்றிகளை ஒரு நாடாளுமன்ற தேர்தலில் போட்டு உடைக்கக் கூடாது என்ற ஒரு வாதம்.

மேலும், ஜனாதிபதி தேர்தல் வேறு நாடாளுமன்ற தேர்தல் வேறு. ஜனாதிபதி தேர்தலில் ஒரு வேட்பாளர், அவரும் குறியீடு. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள். அனைவருமே வாக்கை வேட்டையாடும் வெறியோடு களத்தில் இறங்குபவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் பிரச்சாரத்திற்கான சுலோகம்நமக்காக நாம்”. நாடாளுமன்றத் தேர்தலில் அவ்வாறல்ல. “எனக்காக நான்”.  ஜனாதிபதித் தேர்தலில் சுயநலம் ஒப்பீட்டளவில் குறைவு. நாடாளுமன்ற தேர்தல் முழுக்க முழுக்க தனி நபர்களின் வாக்கு வேட்டைக் களம். எனவே நாடாளுமன்றத் தேர்தலை அதற்குரிய ஏற்பாடுகளின்றி கையாள முடியாது என்று மக்கள் அமைப்பில் ஒரு பகுதியினர் தெரிவித்தார்கள்.

அதைவிட முக்கியமாக இங்கு யாரும் தேரை இழுத்துக் கொண்டு வந்து தெருவில் விடவில்லை என்று ஒரு அரசியல் விமர்சகர் சொன்னார். தேரானது, தேர் முட்டியில்தான் நிறுத்தப்பட்டுள்ளது. அது தெருவில் நிறுத்தப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் என்ற கைங்கரியத்தைத் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. ஆனால் அந்த வெற்றியை ரசிக்கவும் கொண்டாடவும் முடியாதபடி அடுத்த தேர்தல் வரிசைகட்டி வந்து நிற்கிறது.இதுதான் பிரச்சனை.

எனவே மக்கள் அமைப்பு நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி அவர்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு திரட்டுவதில் தனக்குள்ள சவால்களை மக்களுக்கு வெளிப்படையாக ஒரு ஊடகச் சந்திப்பின்போது தெரிவித்தது.மக்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாமல் போனதையிட்டு வருத்தம் தெரிவித்தது. சில கிழமைகளுக்கு முன் தேசமாக திரட்டப்பட்ட மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளாகவும் சுயேச்சைகளாகவும் சிதறடிக்கப்படுவதையிட்டும் மக்கள் அமைப்பு மக்களிடம் மன்னிப்பு கேட்டது.

இம்முறை தமிழர் தாயகத்தில்,யாழ்ப்பாணத்தில் ஆறு ஆசனங்களுக்கு 396 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வன்னியில் ஆறு ஆசனங்களுக்கு 459 வேட்பாளர்கள். மட்டக்களப்பில் ஐந்து ஆசனங்களுக்கு 392 வேட்பாளர்கள். திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்கு 217 வேட்பாளர்கள். அம்பாறையில் ஏழு ஆசனங்களுக்கு 640 வேட்பாளர்கள்

இப்புள்ளிவிபரம் எதைக் காட்டுகின்றது?சில கிழமைகளுக்குமுன்   ஆகக்குறைந்தபட்சம் தேசமாகத்  திரட்டப்பட்ட மக்கள் இப்பொழுது தேர்தல் களத்தில் சிதறுதேங்காயாக சிதறடிக்கப்படுகிறார்கள். பொதுக் கட்டமைப்பு தேர்தலில் ஈடுபட்டு கட்சிகளையும் சுயேச்சைகளையும்  ஒருங்கிணைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பரவலாக உண்டு. இந்த விடயத்தில் தமிழ்மக்கள் பொதுச்சபையின் அறிவிப்பு மக்கள் மத்தியில் சலிப்பையும்  விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதனால்தான் தமிழ் மக்கள் பொதுச்சபையின் பிரதிநிதிகள் யாழ் ஊடக அமையத்தின் அது தொடர்பாக  விளக்கம் அளித்துள்ளார்கள்.

மக்கள் சிதறுவதற்கு தமிழ் மக்கள் பொதுச் சபை காரணமே இல்லை. கட்சிகள் தான் காரணம். ஆனாலும் சில கிழமைகளுக்கு முன் மக்களை ஆகக் குறைந்தபட்சம் திரட்டிக் காட்டிய ஒரு கட்டமைப்பு, அடுத்து வந்த   தேர்தலை ஏன் கையாளவில்லை என்பதற்கு விளக்கம் கூறியபோது மக்களுடைய உணர்வுகளை மதித்து அதற்கு மன்னிப்புக் கேட்டது. ஆனால் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியது கட்சிகள்தான். பொதுச்சபை அல்ல.

பொது வாழ்வில் மன்னிப்பு கேட்பது என்பது மாண்பு மிகுந்தது. பொது வாழ்வில் ஈடுபடும் பெரும்பாலான பிரமுகர்கள் மக்களுக்கு பொறுப்பு கூறுவதில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் எத்தனை தேர்தல்களை எதிர்கொண்டுள்ளன?எத்தனை தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியுள்ளன? அந்த வாக்குறுதிகளில் எத்தனை இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன? ஏனைய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியவில்லை? அதற்கு யார் பொறுப்பு? அதுமட்டுமல்ல,மக்கள் பிரதிநிதிகளாக வர விரும்பும் அனைவரும் தங்களுடைய சொத்து விவரங்களை மக்களுக்கு வெளிப்படுத்தத் தயாரா? இவற்றுடன் மேலும் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளலாம்,ரணில் விக்கிரமசிங்கவோடு ரகசியமாக உறவுகளை வைத்துக் கொண்டவர்கள், பெட்டி கை மாறியவர்கள், டீலுக்குப் போனவர்கள், மதுச் சாலை அனுமதிகளைப் பெற்றவர்கள்….என்று குற்றஞ்சாட்டப்படும் அனைவரும் மக்களுக்கு தன்னிலை விளக்கத்தைக் கொடுத்து பொறுப்புக் கூற வேண்டும்.

நிறைவேற்றப்பட்ட தமது தேர்தல் வாக்குறுதிகளுக்கு உரிமை கோரும் அரசியல்வாதிகள், அந்த வெற்றிகளைப் பிரகடனம் செய்யும் அவர்களுடைய விசுவாசிகள், தோல்விகளுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக தமிழ் அரசியலை கடந்த 15 ஆண்டுகளிலும் தேங்க வைத்தமைக்கு அதற்கு பொறுப்பான அனைவரும் பொறுப்புக் கூற வேண்டும். பன்னாட்டு விசாரணைள் முடிந்து விட்டனவா? தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டம் இப்பொழுது எங்கே நிற்கின்றது? போன்ற கேள்விகளுக்கு தமிழ் அரசியல்வாதிகள் பதில் கூற வேண்டும்.

அனைத்துலக சமூகத்திடம் தமிழர்களுக்கான நீதியை கேட்டு போராடும் பொழுது, இலங்கை அரசாங்கங்கள் இன அழிப்புக்கு பொறுப்பு கூற வேண்டும் என்று கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள், தமது வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். தாங்கள் நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகளுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தனது செயல்களுக்கு பொறுப்பு கூறும் துணிச்சல்  மக்கள் அமைப்பிடம் உண்டு என்பதனால் அது நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சிதறடிக்கப்படுவதற்காக மன்னிப்பு கேட்டது. உண்மையில் அதற்கு மக்கள் அமைப்பு பொறுப்பில்லை. கட்சிகள்தான் பொறுப்பு. கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் மக்களைச் சிதறடித்தது கட்சிகள்தான். ஆனாலும் கட்சிகளின் பொறுப்பின்மைக்கு மத்தியில் ஜனாதிபதி தேர்தலில் மக்களை ஒன்று திரட்டிய மக்கள் அமைப்பானது நாடாளுமன்ற தேர்தலின் போதும் அதைச் செய்ய முடியாமல் போனதற்கு பொறுப்பு கூறியது. மன்னிப்பு கேட்டது. இந்த முன்னுதாரணத்தை பின்பற்றி தமிழ் கட்சிகள் தமது இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறுமா?