நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள்
Share
– ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் நம்பிக்கை!
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் 24-10-2024 அன்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கட்சியின் கொள்கை நிலைப்பாட்டை வலுப்படுத்தி அதனூக மக்களின் நலன்களையும் அவர்களது எதிர்பார்ப்புக்களை நிறைவு செய்து கொள்வதற்காக நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் எமக்கு அதிகளவு ஆதரவை வழங்கவார்கள்.
அத்துடன் மக்கள் எமக்கு வழங்குகின்ற ஆதரவு பலத்தைக் கொண்டே நாம் மத்தியில் அரசமைக்கும் தரப்புக்கு ஆதரவு கொடுத்து, பேரம்பேசும் சக்தியாக அதில் பங்கெடுத்து மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொடுக்க முடியும்.
குறிப்பாக அரசியல் புலத்தில் மாற்றம் வேண்டும் என்று எண்ணிய மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைத்துவிட்டனர். அதேபோன்று தமிழ் மக்களின் மனங்களிலும் அந்த மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றம் ஈ.பி.டி.பியினராகிய எம்மை நோக்கியதாக இருக்கவேண்டும் என்றே மக்கள் உணர்ந்து கொண்டுவிட்டனர்.
இதேவேளை மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவின் அரசியல் கொள்கைக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் கொள்கைக்கும் இடையில் ஒற்றுமை இருக்கின்றது
ஏனெனில் அவர்களும் போராளிகளாக இருந்து பின்னர் நாடாளுமன்ற ஜனநாயக வழிமுறையூடாக வந்தவர்கள். அதேபோன்றே ஈ.பி.டி.பியும் இருக்கின்றது.
அத்துன் அவர்களும் இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் எமது கொள்கையும் இடதுசாரிக் கொள்கையாகவே இருக்கின்றது. அத்துடன் எமக்கும் அவர்களுக்கும் இடையே இருக்கின்ற அரசியல் ரீதியான கொள்கைகளும், பரஸ்பர புரிந்துணர்வும் சிறப்பானதாகவும் இருக்கின்றது.
இதேவேளை தேர்தல் வந்தபின்னர் தந்திரோபாயங்களை வகுத்து செயற்படுவது எமது கட்சியின் செயற்பாடு அல்ல. அத்துடன் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து வாக்குகளை அபகரிப்பதற்காக திட்டங்களை வகுப்பதும் எமது கட்சியின் கொள்கையும் அல்ல.
எமது கட்சி கிடைக்கின்ற அதிகாரங்களை கொண்டு, கடந்த காலங்களில் எமது சிறந்த பொறிமுறைகளூடாக பல்வேறு முயற்சிகளை செய்து பல சாதகமான அடைவுகளை, வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கின்றது. அத்துடன் ஜதார்த்தமான ஒரு பாதையை நோக்கியே தமிழ் மக்களை வழிநடத்தி வருகின்றது.
இந்நிலையில் தற்போதும் ஒரு அரசியல் மாற்றத்துக்கான சூழ்நிலை வந்துள்ளது. அந்த மாற்றம் ஈ.பி.டி.பியினரது எமது பக்கமாகவே இருக்கும் என நம்புகின்றோம்.
அந்தவகையில் தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைக் கொண்டு வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்தி அதனூடாக தமிழ் மக்கள் தமக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.