LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழரசு கட்சியின் வேட்பாளர்களின் ஒழுக்கம் தொடர்பில் மக்களுக்கு சந்தேகம் – மிதிலை தெரிவிப்பு!

Share

பு.கஜிந்தன்

தமிழரசு கட்சியில் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் சிலரின் தனிப்பட்ட ஒழுக்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த அபிப்பிராயம் இல்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் பெண் வேட்பாளர் மிதிலைச் செல்வி ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 02-11-2024 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் ஒரு ஊடக சந்திப்பில் தமிழரசு கட்சியில் பல வருடங்களாக அங்கத்தவர்களாகவும் பொறுப்பு மிக்க பதவியில் இருந்து வெளியேறியவர்களை கிண்டல் அடிக்கும் வகையில் இரு மாங்கனிகள் என தெரிவித்திருந்தார்.

நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன் தமிழரசு கட்சியிலிருந்து ஆளுமையான பெண்களை நீக்கி விட்டு காடு மேடு அலைந்து திரிந்து இரண்டு வெம்பல் மாம்பழங்களை அழைத்து வந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாது தமிழரசு கட்சியில் இப்போது வேட்பாளராக களம் இறங்கியவர்கள் சிலரின் ஒழுக்கங்கள் தொடர்பில் ஏற்கனவே சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டமை பலருக்கு தெரியும்.

நான் பிரசார நடவடிக்கைகளுக்கு செல்லும்போது தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் சிலரின் பெயர்களை கூறி அவர்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

குறிப்பாக நான் ஒரு பெண் வேட்பாளராக இருக்கின்ற நிலையில் பல பெண்கள் என்னிடம் நேரடியாகவே தெரிவித்தார்கள் தமிழரசு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் சிலரின் பெயர்களைக் கூறி அவர்கள் சுய ஒழுக்கம் அற்றவர்கள் எவ்வாறு அவர்களுக்கு ஆசனம் வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்கள்.

நான் அவர்களிடம் கூறினேன் தமிழரசு கட்சியின் நிலைமை அவ்வாறு தான் இருக்கிறது திறமையானவர்கள் நேர்மையானவர்கள் கட்சியில் இருந்து விலகி விட்டார்கள் என்றேன்.

அது மட்டுமல்லாது முன்னர் புலம்பி திரிந்த மதுபான அனுமதிப்பாத்திரம் தொடரில் தற்போது மீண்டும் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

மதுபானம் அருந்தி ஏற்படும் உடல் நல கேட்டுக்கு மேலாக தமிழ் மக்களை தமிழரசு கட்சியும் ஊடகப் பேச்சாளரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழினத்துக்கு கேடுகளை விளைவித்துள்ளனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக ஜெனிபாவில் கால அவகாசத்தை பெற்றுக் கொடுத்தனர்.

சஜித் பிரேமதாசாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரை திட்டத்துக்கு ஆதரவு வழங்கி அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை கோரினர்.

மேலும் அதன் மூன்றாம் திருத்தத்தை அமல்படுத்த விடாமல் குதர்க்கங்களை மேற்கொண்டதோடு புதிய எல்லை நிர்ணயத்தை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து மாகாண சபை தேர்தலையே நடத்த விடாமல் தடுத்ததில் இவர்களுக்கு பாரிய பங்கு உண்டு என அவர் மேலும் தெரிவித்தார்.