மனிதத்தை வாழ்விக்கும் பரோபகாரி
Share
(நா.தனுஜா)
இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக்கொண்டவரும், தன் கடின உழைப்பால் கொழும்பில் பெருவர்த்தகராகத் தன்னை நிலைநிறுத்தியவருமான கணேசன் சுகுமார், நாட்டின் போர் சூழ்நிலை மற்றும் அதனால் வர்த்தக நடவடிக்கைகளில் ஏற்பட்ட எதிர்மறைத்தாக்கங்களின் விளைவாக 1992 ஆம் ஆண்டு அவரது மனைவி ஷீலாவுடன் கனடாவின் டொரன்டோ நகருக்குக் குடிபெயர்ந்தார்.
தன்வசமிருந்த ஆற்றலினாலும், தீரா உழைப்பினாலும் கனடாவில் மீண்டும் பூச்சியத்திலிருந்து தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பிய சுகுமார், இன்றளவிலே கனடாவிலும் இலங்கையிலும் பலராலும் நன்கறியப்படும் ஒரு பரோபகாரியாகத் திகழ்கிறார்.
சுகுமார் மற்றும் ஷீலா ஆகிய பெயர்களின் முதல் எழுத்துக்களை இணைத்துப் பெயரிட்டு பெருநிறுவனமாகக் கட்டியெழுப்பப்பட்ட ‘சுக்ஷி’ நிறுவனக்குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சுகுமார், இச்சமூகத்திடமிருந்து தான் பெற்றவற்றை சமூகத்துக்குத் திருப்பிச்செலுத்தவேண்டும் எனும் கொள்கையில் அதீத ஈடுபாடுடையவராக இருக்கிறார். அதுவே பல பில்லியன் மதிப்புமிக்க சொத்துக்களுக்குச் சொந்தக்காரரான ஒரு பெருவணிகரை, சமூகத்தின் சுகாதாரம், கல்வி, சமூக அபிவிருத்தி உள்ளிட்ட அவசிய தேவைப்பாடுகளைத் தீர்ப்பதற்கு கோடிகளை அள்ளி வழங்கும் ஒரு பரோபகாரியாக மாற்றியிருக்கிறது.
இளைஞர், யுவதிகளை குறிப்பாக பெண்களை வலுவூட்டுவதிலும், எச்சந்தர்ப்பத்திலும் அவர்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்குவதற்கு ஏதுவானவகையில் அவர்களை ஊக்குவிப்பதிலும் மிகையான ஆர்வத்தைக் கொண்டிருக்கும் சுகுமார், அதனை முன்னிறுத்தியும், அதற்கு அப்பால் சமூகக்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கிலும் இலங்கைக்கு, குறிப்பாக வட மாகாணத்துக்குப் பல்வேறு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கியிருக்கிறார். அதனை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் முனைப்பைக் கொண்டிருக்கும் அவர், அக்டோபர் மாதம் அவரது நிதியுதவியுடன் வடக்கைத் தளமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் செயற்திட்டத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகைதந்திருந்தார்.
ஊடகங்களுக்கு நேர்காணல்களை வழங்குவதில் அதிகம் ஆர்வம் காண்பிக்காத அவரைச் சந்தித்து, அவரது நிதியுதவியுடன் வடக்கில் புதிதாக முன்னெடுக்கப்படவிருக்கும் செயற்திட்டங்கள் பற்றி மாத்திரம் கலந்துரையாடினோம்.
கேள்வி – வட மாகாணத்தில் பல்வேறு விதத்திலும் பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் நோக்கில் உங்களது நிதியுதவியுடன் புதியதொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். அத்திட்டம் பற்றி எம்மோடு பகிரமுடியுமா?
பதில் – கனடாவைப் பொறுத்தமட்டில் பெண் பிள்ளைகள் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக வளர்க்கப்படுகின்றனர். துரதிஷ்டவசமாக அவர்களது வாழ்க்கை தடம் மாறும் சந்தர்ப்பங்களில் கூட, ‘இத்தோடு எனது வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்று அவர்கள் ஒடிந்துபோவதில்லை. மாறாக தற்றுணிவுடனும், தன்னம்பிக்கையுடனும் அதனைக் கடக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் இலங்கையில் இந்நிலைமை முற்றிலும் மாறானதாக இருக்கிறது. பல குடும்பங்களில் வீட்டு வன்முறைகளும், பொருளாதாரப்பிரச்சினைகளும் நிலவுகின்றன. அதேபோன்று குடும்பமொன்றில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாகப் பிறந்தால், அந்தக் குழந்தையின் தந்தை அக்குடும்பத்தையே கைவிட்டுச்செல்லும் சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அந்தக் குடும்பத்தின் ஒட்டுமொத்த சுமையையும் சுமக்கவேண்டிய நிலைக்கு தாய் தள்ளப்படுகிறார். சிலவேளைகளில் அச்சுமையினால் உருவாகும் அழுத்தத்தினாலும், இயலாமையினாலும் அவ்வாறான பெண்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கும் துணிகிறார்கள்.
எனவே நான் கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்திருந்தபோது இவற்றைப் பார்த்து, ஆராய்ந்து தெரிந்துகொண்டேன். இவ்வாறு நிர்க்கதி நிலையில், இயலாமையின் விளிம்பில் இருக்கும் பெண்கள் மத்தியில், அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பக்கூடியவகையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என சிந்தித்தேன். வாழ்வில் எதிர்பாராமல் ஏற்படும் திருப்பத்துடன் அவ்வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை எனும் எண்ணத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் மத்தியில் விதைக்க விரும்பினேன். அதுவே இச்செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
கேள்வி – இச்செயற்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசித்திருக்கிறீர்கள்?
பதில் – இதனூடாக வடமாகாணத்தில் வாழ்வாதார உதவிகள் தேவைப்படும் நிலையில் இருக்கும் பெண்களைத் தெரிவுசெய்து, அவர்களுக்கு வட்டி இல்லாத கடனையும், தொழிற்பயிற்சியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இதற்கென முதற்கட்டமாக 50 இலட்சம் ரூபாவை வழங்கியிருக்கிறேன். இதனை வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஊடாகவே ஒருங்கிணைப்புச் செய்கிறேன். அதன்படி வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் சுயதொழில் செய்ய விரும்புகின்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கடன் நிதியானது கிராமிய வங்கியொன்றின் ஊடாகவே வழங்கப்படும். சிறுவர், மகளிர் விவகார அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களத்தின்கீழ் இயங்கிவரும் பெண் பொலிஸ் பிரிவு ஆகிய கட்டமைப்புக்களால் விசேட தேவையுடைய, மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்ற, கடந்த காலங்களில் துஷ்பிரயோகங்களுக்கோ அல்லது குடும்ப வன்முறைகளுக்கோ உள்ளான பெண்கள் உள்ளடங்கலாக சுயதொழிலை முன்னெடுப்பதற்கான இக்கடன்நிதி உதவி தேவைப்படும் நிலையிலுள்ள பெண்கள் தெரிவுசெய்யப்படுவர்.
அவர்களது பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் குறித்த கிராமிய வங்கிக்கு அனுப்பிவைக்கப்படும். அவ்வங்கியின் ஊடாக மேற்கூறப்பட்ட முறையில் தெரிவுசெய்யப்பட்ட பெண்களுக்கான வட்டி இல்லாத கடன் நிதி வழங்கப்படும். அதேபோன்று இவ்வனைத்து விபரங்களும் அடங்கிய பட்டியலொன்று வங்கியினால் எனக்கும் அனுப்பிவைக்கப்படும். மேலும் இவ்வாறு வழங்கப்படும் நிதி முறையான விதத்தில் பயன்படுத்தப்படுகிறதா என அவ்வப்போது கண்காணிக்கப்படுவதுடன், கனடாவில் இருந்து வருகைதரும் பயிற்சியாளர்களால் சீரான கால இடைவெளியில் அப்பெண்களுக்கு அவசியமான தொழிற்பயிற்சி மற்றும் வழிகாட்டலும் அளிக்கப்படும். இச்செயற்திட்டத்தின் வாயிலாக முதற்கட்டமாக 100 பெண்கள் தெரிவுசெய்யப்படவிருப்பதுடன், எதிர்வருங்காலங்களில் இதனை நாட்டின் ஏனைய மாகாணங்களுக்கும் விரிவுபடுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறேன்.
கேள்வி – நீங்கள் கடந்த காலங்களில் இலங்கைக்கு வருகைதந்திருந்தபோதும் சமூகத்தைக் கட்டியெழுப்பும் விதமாக பல்வேறு நன்கொடை உதவிகளை வழங்கியிருந்தீர்கள் அல்லவா?
பதில் – ஆம், கடந்த 2022 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு வருகைதந்திருந்தபோது யாழ் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவுக்கு அவசியமான உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக 50 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தேன். அதேபோன்று இவ்வருடம் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அவசியமான டயலிஸிஸ் இயந்திரங்களைப் பெற்றுக்கொடுத்தேன்.
கேள்வி – யாழ் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சைப்பிரிவுக்கு நீங்கள் வழங்கிய நன்கொடையின் ஊடாக பெரும் எண்ணிக்கையான நோயாளர்கள் பயனடைந்திருப்பதாக அறியமுடிகிறதே?
பதில் – கடந்த முறை யாழ் வைத்தியசாலைக்குச் சென்றிருந்தபோது கண் மருத்துவ நிபுணர் மலரவன், அவர்களது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை அறையை வந்து பார்வையிடுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார். மனித உடலில் மிகமுக்கிய அங்கமாக இருக்கக்கூடிய கண்ணுக்கு சத்திரசிகிச்சை செய்யும் அறையில், சத்திரசிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் கட்டில் முறையற்ற விதத்தில் இருப்பதை அவதானித்தேன். அதனையடுத்து அவர்களது தேவைப்பாடுகள் என்னவென்பதைக் கேட்டறிந்து, 40 இலட்சம் ரூபா பெறுமதியான அந்த உபகரணங்களை இந்தியாவிலிருந்து வரவழைத்து, பொதிசெய்து, கடந்த ஜனவரி மாதமே வைத்தியசாலையிடம் கையளிக்கக்கூடியவகையில் தயாராக வைத்திருந்தோம். இருப்பினும் அரச நடைமுறையில் நிலவிய தாமதங்கள் ஒருபுறமிருக்க, பெருந்தொகை பணத்தை வரியாகச் செலுத்தி, தற்போது அவ்வுபகரணங்களை யாழ் வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சைப் பிரிவிடம் கையளித்திருக்கிறோம். இதனூடாக மிகக்குறுகிய காலத்தில் பெரும் எண்ணிக்கையானோருக்கு ‘கட்ரக்’ சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதையிட்டு பெருமையடைகின்றோம்.
இவ்வாறு அவரால் வழங்கப்பட்ட உதவிகள் பற்றி சுருக்கமாகவும், இந்நாட்டின் இளைஞர், யுவதிகளை வலுவூட்டவேண்டியதன் அவசியம் பற்றி விரிவாகவும் எம்மோடு பேசினார் சுகுமார்.
தான் பிறந்த நாடான இலங்கைக்கு மாத்திரமன்றி, தன்னை வாழவைத்துக்கொண்டிருக்கும் கனடாவிலும் சுகாதாரம், கல்வி, சமூக அபிவிருத்தி ஆகிய துறைகள் சார்ந்து பல மில்லியன் டொலர் பெறுமதியான உதவிகளை வழங்கிவரும் சுகுமார், அதற்கான கௌரவமாகவும், அங்கீகாரமாகவும் எலிசபெத் மகாராணியின் பெயரால் வழங்கப்படும் பதக்கங்களை மூன்று தடவைகள் பெற்றிருக்கிறார்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் வரிகளின் பொருளுணர்ந்து, சகலரையும் தன் சொந்தம் போல் அரவணைத்து உதவி வாழும் சுகுமாரை போன்ற மனிதர்களே மனிதம் மீதான நம்பிக்கையை நாளெல்லாம் தழைக்கச்செய்கிறார்கள்.