LOADING

Type to search

இலங்கை அரசியல்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளில் அரசிடமிருந்து பெற்ற மருத்துவ செலவினங்கள் எவ்வளவு தெரியுமா?

Share

நடராசா லோகதயாளன்

மக்களை நாடாளுமன்றத்தில் பிரதிநித்துவப்படும் உறுப்பினர்களின் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே, அவர்களால் மக்கள் பணிகளை நாடாளுமன்ற அவைக்கு உள்ளேயும் வெளியேயும் சிறப்பாக முன்னெடுக்க முடியும். ஆனால் இலங்கை நாடாளுமன்றத்தில் குறைந்தது 11 தமிழ் உறுப்பினர்கள் லட்சக்கணக்கான ரூபாவை அரசிடமிருந்து மருத்துவ செலவினமாகப் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சிகரமாக தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

அரசிடமிருந்து இந்த செலவினத்தை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பல தமிழ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுள்ளனர். இவர்களின் மூன்று உறுப்பினர்கள் மிகபெருந்தொகையான நிதியினை பெற்றுள்ளதும் அவதானிக்கப்பட்டுள்ளது

கடந்த 2020 முதல் 2024 வரையான நாடாளுமன்ற ஆட்சி காலத்தில் (அதாவது கடந்த நாடாளுமன்றம் கலைக்கப்படும் அதன் ஆயுட்காலத்தில்) மருத்துவச் செலவினத்தில் உச்சபட்ச தொகையினை இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்த சாள்ஸ் நிர்மலநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜெனா) ஆகியோர் பெற்றுள்ளனர்.

2020 முதல் 2024 வரையான நாடாளுமன்ற காலப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களின்கான மருத்துவக் காப்புறுதி மூலம் எவ்வளவு மருத்துவச் செலவீனத்தைப் பெற்றுள்ளனர் என்பதை கோரி, 15 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சிற்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்டது.

இவ்வாறு விண்ணப்பிக்ப்ப்பட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில் இராசமாணிக்கம் சாணக்கியன், சிவஞானம் சிறிதரன், அங்கஜன் இராமநாதன், கு.திலீபன் ஆகியோர் 5 வருட காலத்திலும் எந்தவொரு பணத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய தொகையான 9 லட்சத்து 93 ஆயிரத்து 610 ரூபாவினை சாள்ஸ் நிர்மலநாதன் பெற்றிருக்கும் அதே நேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இரண்டாவது இடத்தில் 8 லட்சம் ரூபாவினையும் கோவிந்தன் கருணாகரன் 5 லட்சத்து 91 ஆயிரத்து 275 ரூபாவினையும் பெற்றுள்ளார்.

அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா 4 லட்சம் ரூபாவும், எம்.ஏ.சுமந்திரன் 3 லட்சத்து 86 ஆயிரத்து 41 ரூபா, சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) 3 லட்சத்து 62 ஆயிரத்து 355 ரூபா, எஸ்.வியாழேந்திரன் 3 லட்சத்து 30 ஆயிரத்து 555 ரூபாவும், செல்வராஜா கஜேந்திரன் 2 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாவும் பெற்றுள்ளனர்.

செல்வம் அடைக்கலநாதன் 2 லட்சத்து 45 ஆயிரத்து 397 ரூபாவும்,
சி.வி.விக்னேஸ்வரன் 2 லட்சத்து 32 ஆயிரத்து 534 ரூபாவும், த.சித்தார்தன் 2 லட்சம் ரூபாவினையும் பெற்றுள்ளனர்.

இந்தளவிற்கு உடல்நலக் குறைபாடு அல்லது சுகயீனம் காரணமாக அரசிடமிருந்து மருத்துவ உதவியை பெற்றுள்ளவர்கள் எந்தளவிற்கு ஆரோக்கியத்துடன் இருந்து மக்கள் நல பணியை முன்னெடுக்க முடியும் என்று பொதுமக்கள் வினவுகின்றனர்.