எந்தக் கட்சியாவது ஏகபோக வெற்றியைப் பெறுமா?
Share
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
தமிழ் சிவில் சமூக அமையம் என்ற சிவில் அமைப்பு தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், தெனிலங்கை மையக் கட்சிகளுக்கு, குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற கோரிக்கை உண்டு. அதே சமயம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளில், கொள்கை மாறாத, கொள்கையில் உறுதியாக நிற்கின்ற, நேர்மையான கட்சிக்கு வாக்களிக்குமாறு அந்த அறிக்கை கேட்டிருந்தது.
அந்த சிவில் சமூகம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒப்பீட்டளவில் நெருக்கமானது என்று தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் பொது வேட்பாளருக்காக உருவாக்கப்பட்ட பொதுச்சபைக்குள் அந்த சிவில் சமூகம் முக்கிய ஒரு பங்கை வகித்தது. ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் என்ற தெரிவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளவில்லை. அக்கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராகவே அந்த சிவில் சமூகம் பொது வேட்பாளரை முன்னிறுத்தியது.
இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அந்த சிவில் சமூகத்தின் அறிக்கையானது எந்த ஒரு கட்சியையும் பெயர் குறிப்பிடாமல், நேர்மையான, கொள்கைகளில் வழுக்காத கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றது. அதே சமயம் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும் கொள்கைளவில் தளம்புகின்ற அல்லது மக்களை ஏமாற்றக்கூடிய வாக்குறுதிகளை வழங்குகின்ற கட்சிகளை நிராகரிக்க வேண்டும் என்று தொனி அந்த அறிக்கையில் உண்டு.
அடுத்தது, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான மக்கள் பேரியக்கம் வெளியிடப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையும் தென்னிலங்கை மையக் கட்சிகளை நிராகரிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டிருக்கிறது. குறிப்பாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இந்த அறிக்கை கேட்கின்றது. அதேசமயம் தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் தொடர்பாகவும் அதில் விமர்சனங்கள் உண்டு. அந்த அறிக்கையும் ஏறக்குறைய கொள்கை ரீதியாக தளம்பாத கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்டிருக்கின்றது.
மூன்றாவது, தாயகத்துக்கு வெளியே புலம் பெயர்ந்த தமிழ் பரப்பிலிருந்து வெளிவந்த அறிக்கை. நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்ட அந்த அறிக்கையும் தேசிய மக்கள் சக்தி போன்ற தென்னிலங்கை மையக் கட்சிகளை நிராகரிக்குமாறு கேட்டிருக்கும் அதே சமயம், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டிருக்கின்றது.
மேற்குறிப்பிட்ட மூன்று அறிக்கைகளும் ஒரு விடயத்தில் தெளிவாக இருக்கின்றன. என்னவென்றால், ஜே.வி பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்கும் அதே சமயம், தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு வாக்களிக்குமாறு கேட்பது. இது தமிழர் தாயகத்தில் தற்பொழுது காணப்படும் “அனுர அலை”யை கவனத்தில் எடுத்து கூறப்பட்ட கருத்தாக இருக்கலாம்.
அனுர அலை என்ற ஒன்று தமிழ் பகுதிகளில் பலமாக உள்ளதா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் திருமதி சந்திரிக்கா ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பலமான எதிர்பார்ப்பு இருந்தது. “சந்திரகா காப்பு“, “சந்திரிக்கா சேலை“, “சந்திரிக்கா கைப்பை” என்றெல்லாம் புது ரக உற்பத்திகள் விற்கப்படுகையில் அவற்றுக்கு சந்திரிகாவின் பெயர் வைத்து விற்கப்பட்டன. சந்திரிகா அளவுக்கு அனுரவின் பெயரால் பொருட்கள் விற்கப்படவில்லைத் தான். எனினும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக அண்மையில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் உட்பட படிப்பாளிகள் ஒரு தொகுதியினர் இணைந்து யாழ் ஊடக அமையத்தில் ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தினார்கள். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு கேட்பதுதான் அவர்களுடைய உள்நோக்கமாக இருந்தது. இதில் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அனுரவுக்கு வாக்களிக்குமாறு மறைமுகமாகக் கேட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள் என்பதனை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும்.
எனவே இதுபோன்ற விடையங்களைக் கவனத்தில் எடுத்து, தமிழ் வாக்குகள் அனுரவை நோக்கிப் போகக் கூடாது என்ற கவலை அல்லது பயம் அல்லது முன்னெச்சரிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புத்திஜீவிகள், கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள், கருத்துருவாக்கிகள், சிவில் அமைப்புகள் மத்தியில் உண்டு. இந்த முன்னெச்சரிக்கையைத் தான் மேற்சொன்ன மூன்று அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன.
சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி சந்தையில் ஒரு வியாபாரியிடம் கேட்டேன், “யாருக்கு வாக்களிப்பீர்கள்? “ என்று. அவர் சற்று முன் ஒரு கட்சி கொடுத்து விட்டுப் போன பிரச்சாரத் துண்டு பிரசுரங்களை எனக்கு காட்டினார். “ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு கட்சி அல்லது பல கட்சிகள் வருகின்றன. எத்தனை சின்னங்கள்? எத்தனை கட்சிகள்? எத்தனை சுயேச்சைகள்? எத்தனை வாக்குறுதிகள்? யாரை நம்புவது? யாருக்கு வாக்களிப்பது? குழப்பமாக இருக்கிறது. இந்த சின்னங்களை எல்லாம் பார்த்து ஒரு சின்னத்தை தெரிவு செய்வதற்கு இடையில் சீவன் போய்விடும் போலிருக்கிறது. பேசாமல் வாக்களிக்காமல் விடலாமா என்றும் யோசிக்கிறேன்” என்று அவர் சலிப்போடு சொன்னார்.
சின்னங்களைப் பார்த்து கடைசி நேரத்தில்தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிலை ஏன் தோன்றுகிறது? கட்சிகளுக்கு மக்களுக்கும் இடையில் உயிருள்ள தொடர்ச்சியான பிணைப்பு, உறவு இல்லை என்பதைத்தான் அது காட்டுகின்றது.
மக்களில் ஒரு பகுதியினர் கட்சிகளின் விசுவாசிகளாக இருப்பார்கள். அந்த விசுவாசம் சில சமயம் தலைமுறை தலைமுறையாக வரும். குடும்ப வழியாக வரும். அவர்கள் ஏற்கனவே யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானித்து விடுவார்கள். இன்னொரு தொகுதியினர் கடைசி நேரத்தில் முடிவெடுப்பார்கள். இலங்கை போன்ற நாடுகளில் பெரும்பாலும் கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்கள்தான் அதிகம் என்ற ஒரு அவதானிப்பு உண்டு. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டம்தான் முடிவுகளைப் பெரிதும் தீர்மானிக்கிறது என்ற ஒரு அவதானிப்பும் உண்டு. நான் முன்பு சொன்ன மரக்கறி வியாபாரி அவ்வாறு கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களில் ஒருவர்தான். இம்முறை அவ்வாறு கடைசி நேரத்தில் முடிவெடுக்கும் வாக்காளர்களின் தொகை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.
இதனால் தேர்தல் முடிவுகளை எதிர்வுகூற முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது மேற்கத்திய தூதரக அதிகாரி ஒருவர் சொன்னார், “எதிர்வு கூற முடியாத, ஊகிக்க முடியாத ஒரு தேர்தல் களம்” என்று. நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படித்தான் காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறாது என்ற அபிப்பிராயம் பொதுவாக உண்டு. அது அறுதிப் பெரும்பான்மை பெறுவதற்கும் சில நேரம் பேரங்களுக்கு போக வேண்டி வரலாம் என்ற ஊகங்களும் உண்டு.
அதே சமயம் தமிழர் தாயகத்தைப் பொறுத்தவரையிலும் தமிழரசுக் கட்சி அல்லது சங்கு ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களை பெறலாம் என்ற ஊகங்கள் உண்டு. இவை யாவும் ஊகங்கள்தான். யாரும் முன்கூட்டியே உகிக்க முடியாத அளவுக்கு தேர்தல் களம் சிதறிப்போய் காணப்படுகின்றது. ஆனால்,எந்த ஒரு கட்சியும் ஏகபோகமாக வெற்றிகளைப் பெறாது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. அதே சமயம் சுயேச்சைகளில் பெரும்பாலானவை ஆசனங்களை வெல்லப் போவதில்லை.
தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த கட்டுரை எழுதப்படுகிறது. எல்லாத் தமிழ் தேசிய கட்சிகளும் தங்களுக்குத் தான் அதிக ஆசனங்கள், குறைந்தது பத்து ஆசனங்கள் கிடைக்கும் என்று கூறிக் கொள்கின்றன. எல்லாமே பேராசைதான்.ஆனால் எல்லாக் கட்சிகளுக்கும் தெளிவாகத் தெரியும், எந்த ஒரு தனி கட்சிக்கும் பத்து ஆசனங்கள் கிடைக்காது என்பது.