LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு தமிழ் தேசியம் ”திசை”மாறியதா…?

Share

சிங்களக் கட்சியான தேசிய மக்கள் சக்தி வடக்கில் 5 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளதனால் வடக்கில் தமிழ் தேசியம் மரணித்து விட்டதாகவும், திசைமாறி விட்டதாகவும் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் உண்மையுள்ளதா? தமிழ் மக்கள் தமிழ்தேசியக்கட்சிகளை புறக்கணித்து விட்டனரா ?தேசிய மக்கள் சக்திக்கு சென்ற வாக்குகள் யாருடையவை? வடக்கில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது எவ்வாறு?

கே.பாலா

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்காக நடந்து முடிந்த தேர்தலில் ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் 5 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றுள்ளமை மூலம் தமிழ் தேசியக் கொள்கையிலிருந்து வடக்குத் தமிழர் ”திசை”மாறிவிட்டதாகவும் ”தடம்”புரண்டு விட்டதாகவும் தமிழ் தரப்பினரால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில், வடக்கு தமிழர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்ததன் மூலம், “இனிமேல் சிங்கள அரசுகள் தமிழர்களை புறக்கணிப்பதாக உள்நாட்டிலோ சர்வதேசத்திலோ கூற முடியாது”,”சிங்களக்கட்சி ஒன்று தமிழர்களின் நம்பிக்கையை வென்று வடக்கை கைப்பற்றியுள்ளதன் மூலம் நாட்டில் இனவாதம் இல்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” ”தமிழர் தனி நாட்டையோ ,சமஷ்டியையோ ,வடக்கு,கிழக்கு இணைப்பையோ கேட்கவில்லை.அவர்கள் கேட்பது ஒருமித்த ஊழல் மோசடியற்ற நாடு.அதனையே வடக்கு தமிழர் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து வெளிப்படுத்தியுள்ளனர்”என சிங்களத் தரப்புகளினாலும் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.

எனவே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு மாகாணத்தில் உள்ள 12 ஆசனங்களில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியதன் மூலம் வடக்கு தமிழரிடம் ”தமிழ் தேசியம்”மரணித்து விட்டதா?வடக்கு தமிழர் தமிழ் தேசியத்தை கைவிட்டு சிங்களக்கட்சிக்கு பின்னால் அணிதிரண்டனரா என்பது தொடர்பில் இந்தத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.

வடக்கு மாகாணத்திலுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8,99,268. இதில் யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் 5,93,187 வாக்காளர்களை கொண்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் 3,58,079 பேர் வாக்களித்த நிலையில் 2,35,108 பேர் வாக்களிக்கவில்லை. அதேநேரம் வாக்களித்த 3,58,079 பேரில் 32,767 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன இதற்கமைய 3,25,312 பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோன்று, வன்னி மாவட்டம் 3,06,081 வாக்காளர்களை கொண்டுள்ள நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் 2,11,140 பேர் வாக்களித்த அதேநேரம் 94,941 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்த 2,11,140 பேரில் 15,254 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 1,95,886பேரின் வாக்குகளே செல்லுபடியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் 3,30,049 பேர் வாக்களிக்காத நிலையில் 48,021 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய 6 ஆசனங்களைக் கொண்ட யாழ்.-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளைப்பெற்று 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக்கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் ஊசி சின்னத்தைக் கொண்ட சுயேச்சைக்குழு 27,855 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின. இந்த தேர்தல் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட 3,25,312 வாக்குகளில் 1,99,998 வாக்குகளை இந்த 4 தரப்புக்களும் பெற்றுக்கொள்ள, மிகுதி 1,25,314 வாக்குகளை 19 கட்சிகளும் 20 சுயேட்சைக் குழுக்களும் பங்கு போட்டுக்கொண்டன.

அதேபோன்று வன்னி தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக்கட்சி 29,711 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் அகில ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி 21,102 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் இலங்கை தொழிலாளர் கட்சி 17,710 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றின. இந்த தேர்தல் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட195,886 வாக்குகளில் 1,40,649 வாக்குகளை இந்த 5 தரப்புக்களும் பெற்றுக்கொள்ள, மிகுதி 52,237 வாக்குகளை 15 கட்சிகளும் 26 சுயேட்சைக் குழுக்களும் பங்கு போட்டுக்கொண்டன.

வடக்கு மாகாணத்திலுள்ள மொத்த வாக்காளர்களான 8,99,268 பேரில் 5,69,219 பேர் வாக்களித்த நிலையில், 3,30,049 பேர் வாக்களிக்கவில்லை. வாக்களித்தவர்களிலும் 48,021 பேரின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய வடக்கு மாகாணத்தில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 5,21,198.

இந்த 5,21,198 வாக்குகளில் தமிழ் தேசியக்கட்சிகளான இலங்கை தமிழரசுக்கட்சி 93,038 வாக்குகளையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 43,615 வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 35,478 வாக்குகளையும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி

13,295 வாக்குகளையும் ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு 7496 வாக்குகளையும் பெற்றிருந்தன.

அதேபோன்று, ஈ.பி.டி.பி.24,300 வாக்குகளையும் ஜனநாயக தேசிய கூட்டணி 22,370 வாக்குகளையும் பெற்றிருந்தன. இதற்கமைய தமிழ் தலைமைகளைக் கொண்ட இந்த 7 கட்சிகளும் 5,21,198 வாக்குகளில் 2,39,592 வாக்குகளை தமதாக்கிக்கொண்டன. அதுமட்டுமன்றி ஏனைய சிறுகட்சிகளும் சுயேச்சைக்குழுக்களும் 95,664 வாக்குகளை பெற்றுக்கொண்டன. ஆக 5,21,198 வாக்குகளில் தமிழ் தேசியக் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் 3,35,286வாக்குகளை கைப்பற்றிக் கொண்டன.

மிகுதியாகவுள்ள 1,85,912 வாக்குகளில் சிங்களத் தலைமையைக் கொண்ட தேசிய மக்கள் சக்தி 1,20,724 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 47,508 வாக்குகளையும் முஸ்லிம் தலைமையைக் கொண்ட இலங்கை தொழில் கட்சி 17,710 வாக்குகளையும் பெற்றுக்கொண்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கில் சிங்களத் தலைமையைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி 51,447 வாக்குகளைப் பெற்ற நிலையில், இம்முறை 47,508 வாக்குகளையும் 2020 ஆம் ஆண்டு வடக்கில் 42,524 வாக்குகளைப் பெற்ற பொதுஜன பெரமுன இம்முறை 1387 வாக்குகளையும் 2020 ஆம் ஆண்டில் 7838 வாக்குகளைப்பெற்ற ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை 1562 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டு வடக்கில் 1515 வாக்குகளைப்பெற்ற தேசிய மக்கள் சக்தி இம்முறை 1,20,724 வாக்குகளை பெற்றமைதான் தமிழ்தேசியத்தை கேள்விக்குட்படுத்தியது.

தேசிய மக்கள் சக்தி கடந்த முறையை விடவும் இம்முறை அதிகமாகப் பெற்ற வாக்குகள் தமிழ் தேசியக்கட்சிகளின் வாக்குகள் அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 1,82,883 வாக்குகளைப் பெற்ற இலங்கை தமிழரசுக்கட்சி, இம்முறை 93,038 வாக்குகளைப்பெற்று இழந்த 89,845 வாக்குகள், 2020 ஆம் ஆண்டு தேர்தலில் 63,535 வாக்குகளைப் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இம்முறை 35,478 வாக்குகளைப் பெற்று இழந்த 28, 057வாக்குகள்,2020 ஆம் ஆண்டு தேர்தலில் 44,716 வாக்குகளைப் பெற்ற தமிழ் மக்கள் தேசிய கூட்டணி இம்முறை 13,295 வாக்குகளைப் பெற்று இழந்த 31,421 வாக்குகள் என 1,82,130 வாக்குகளும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணிக்கு 43,615 வாக்குகள், ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்புக்கு 7,496 வாக்குகள், ஜனநாயக தேசியக் கூட்டணிக்கு 22,370 வாக்குகள் ,சுயேச்சைக்குழு 17 க்கு 27,855 வாக்குகள் என 1.01.336 வாக்குகள் சென்ற நிலையில் மிகுதி ஏனைய சிறு தமிழ் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் சென்றுள்ளன.

கடந்தமுறை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு 49,373 வாக்குகளைப்பெற்ற அங்கஜன், இம்முறை 12,427 வாக்குகளைப் பெற்று இழந்த 36,946 வாக்குகள்,கடந்த முறை 57107 வாக்குகளைப்பெற்ற டக்ளஸ் தேவானந்தா இம்முறை 24300 வாக்குகளைப்பெற்று இழந்த 32,807 வாக்குகள், கடந்த முறை 42,524 வாக்குகளைப்பெற்ற பொதுஜன பெரமுன இம்முறை 1387 வாக்குகளைப்பெற்று இழந்த 41,137 வாக்குகள் என 1.10.890 வாக்குகளுடன் மேலதிகமாக 10,000 வரையிலான வாக்குகள் மட்டுமே தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளன. இந்த வாக்குகள் தமிழ் தேசியத்துடன் தொடர்பபட்ட வாக்குகள் அல்ல.

எனவே இலங்கை தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுப்பிளவுகளினால் வெறுப்படைந்தவர்களும், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டு தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த தமிழ் மக்களும் ,சிவில் அமைப்புக்களும் முயன்றபோது ஜனாதிபதித்தேர்தலை பகிஷ்கரிக்கக்கோரி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்ட தீவிர பிரசாரத்தினால் கொதிப்படைந்தவர்களும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் ”பார் பொர்மிட் ”சர்ச்சையால் மனமுடைந்தவர்களும் தமது வாக்குகளை”சங்கு”,”மாம்பழம்” , ”ஊசி” சின்னங்களுக்கு வழங்கியுள்ளனர்.

ஈ.பி.டி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ,பொதுஜன பெரமுன .ஐ,தே .க.ஆகிய கட்சிகளுக்கு கடந்த முறை வாக்களித்தோரே இம் முறை தமது வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கியுள்ளனர். அதனால்தான் கடந்த முறை வெற்றி பெற்ற ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தாவோ ,அங்கயன் இராமநாதனோ அல்லது பொதுஜன பெரமுன கட்சியோ இம்முறை ஒரு ஆசனத்தை கூடப் பெறவில்லை.இவர்கள் கடந்த முறை பெற்ற 3 ஆசனங்கள்தான் இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு சென்றுள்ளன.

இதன்மூலம் வடக்கு தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வு மரணிக்கவில்லை.அவர்கள் ”திசை”மாறவோ ”தடம்”மாறவோ இல்லை. அவர்களின் வாக்குகள் தமிழ் தேசியத்திற்கே அளிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு தாராளமாக வரமுடியும்.