புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் சவாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனைவருக்கும் நினைவூட்டுகிறது
Share
இறுதிப் போரின் இறுதிப் காலப்பகுதியில் பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதினைந்து வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில், புதிய அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சியொன்று நினைவுபடுத்தியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான உயிர்கள் அழிக்கப்பட்ட இரத்தம் தோய்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வடக்கின் தமிழ் கட்சியொன்று உறுதியளித்துள்ளது.
“மக்களுடைய முழு பலத்தையும் அணிதிரட்டி ஒரு சர்வதேச குற்றவியல் விசாரணையை நடத்துவதற்கு விசேடமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்குரிய அழுத்தங்களையும் வேறு சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய அரங்குகளுக்கு இலங்கையை கொண்டு செல்வதற்குரிய எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும்.”
அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 15,135 வாக்குகளைப் பெற்று மீண்டும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற ஆணையைப் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ் தேசத்தினுடைய இன அழிப்பின் அடையாளமாக இருக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் மண்ணில் உரிமை பயணத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சத்தியபிரமாணம் எடுத்த பின்னர் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்டகட்சியின் ஆதரவாளர்கள் குழுவுடன் நவம்பர் 19 முள்ளிவாய்க்காலுக்கு வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
முன்னதாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு 11,215 வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய துரைராசா ரவிகரன் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் தூபியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவு கூர்ந்தார்.
கடந்த 15 வருடங்களாக தமது அரசியல் இயக்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய தமிழின படுகொலைக்கு, ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதியாக வலியுறுத்தி வந்துள்ளதாகவும, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடைய பலவீனங்களை தமது கட்சி மக்களுக்கும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துக்காட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரைக்கும் தமிழ் மக்களுடைய இனப்படுகொலைக்குரிய குற்றவியல் விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் இலங்கை அரசாங்கத்துக்கும் அதனுடைய இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் 15 வருடங்களாக கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளதகாவும், இந்த விடயத்தில் மிகத்தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒற்றையாட்சியை நிராகரித்து சுயாட்சி உரிமையை தேசிய அங்கீகாரத்துடன் முழுமையாக அனுபவிக்கக் கூடிய சமஷ்டித் தீர்விற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்காலத்தில் மிகத் தீவிரமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழ் தேசத்துடைய இருப்பை உறுதிப்படுத்தக் கூடிய தேச அங்கீகாரத்துடன் சுயநிர்ணய சமஷ்டி தீர்வை நோக்கி மாத்திரமே நாங்கள் நகர முடியும் என்ற செய்தியை உலகத்திற்கு காட்டக்கூடிய வகையிலே எங்களது இயக்கம் மிகத் தீவிரமான வகையில் இனிவரும் காலங்களில் இயங்கும்.”
பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் அரசியலமைப்பை மாற்றும் அதிகாரத்தை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆளும் கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களுக்குத் தெரிவிக்கையில், மாகாண சபைகளை விட நியாயமான தீர்வொன்று முன்வைக்கப்படும் வரை மாகாண சபைகள் ஒழிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்தார்.