அநுர அரசாங்கத்தின் கெடுபிடிகள் இல்லாததால் சாத்தியமான வல்வெட்டித்துறைப் பெருவிழா
Share
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்த தினம் 26ம் திகதி அன்று செவ்வாய்க்கிழமை வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் விமர்சையாக கொண்டாடப்பெற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து லோகதயாளன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் நடைபெற்றது.இராணுவம் மற்றும் பொலிஸாரின் கெடுபிடிகள் அற்ற நிலையில் இந்தக் கொண்டாட்டம் சாத்தியமானது என மக்களால் பேசப்பெற்றது.
முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் மற்றும் ஊர் மக்கள் ஒன்று திரண்டு வே.பிரபாகரன் அவர்களுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கண்டுகள் வழங்கியும் எழுச்சியான முறையில் இப் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பெற்றன.
அவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வல்வெட்டித்துறை வே.பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் வே.பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநான் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் அவரின் பிறந்த நாள் நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும் இந் நிகழ்வின் சிறப்பம்சமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீடு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நாட்டப்பட்டன.
இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள், 70 தென்னை மரக் கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது