LOADING

Type to search

இலங்கை அரசியல்

2009 இற்குப் பின்னரான பதினாறாவது மாவீரர் நாள் | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்

Share

அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் தான்என்று மிலன் குந்ரோ கூறுவார். மறதிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தை அதாவது நினைவு கூர்தலை,தமிழ் மக்கள் இரண்டு தளங்களில் முன்னெடுக்க வேண்டும்.

முதலாவதாக,தமிழ் மக்களின் தேசிய இருப்பை அழிக்க முயற்சிக்கும் ஒடுக்கு முறையின் வரலாற்றையும் அந்த ஒடுக்கு முறைக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றையும் மறந்து விடாமல் இருப்பது. கூட்டுத் துக்கத்தை, கூட்டு இழப்பை கூட்டுத் தோல்வியை, நினைவு கூர்வதன் மூலம்தான் அரசற்ற ஒரு மக்கள் கூட்டம் அக்கூட்டுத் துக்கத்தை கூட்டு அரசியல் ஆக்க சக்தியாக மாற்றலாம். நினைவு கூர்தல் என்பது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. கூட்டு நினைவுகளை, கூட்டு இழப்பை, கூட்டுத் துக்கத்தை கூட்டுக் காயத்தை, கூட்டு மன வடுக்களை கூட்டு அவமானத்தை, அரசியல் ஆக்க சக்தியாக மாற்றினால் அது நீதிக்கான போராட்டத்தின் உந்து விசையாக மாறும். அதனால்தான் தமிழ் மக்கள் நினைவுகளை உயிர்ப்புடன் பேணக்கூடாது என்பதற்காக அரசாங்கம் தடைகளை விதிக்கின்றது.இம்முறை கொட்டு மழை,புயல் வீசும் என்ற பயம்,வெள்ளப் பெருக்கு,அரசங்கம் அறிவித்த தடை என்பவற்றை மீறி மக்கள் துயிலும் இல்லங்களை நோக்கிக் குவிந்தார்கள்.

தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் சின்னங்கள்,கொடிகள் போன்ற விடயங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அரசாங்கம் தடை விதித்திருந்த போதிலும்    ஆங்காங்கே தமிழ் நகரங்களில் மாவீரர் பாடல்கள் பகிரங்கமாக ஒலித்தன.எந்த நினைவுகளை அரசாங்கம்,அதாவது அதிகாரம்  தடை செய்ததோ,அந்தத் தடையைமீறி அந்த நினைவுகள் அனுஷ்டிக்கப்பட்டன. அதாவது அரசாங்கம் எதைத் தமிழ் மக்கள் மறக்க வேண்டும்  என்று  சிந்திக்கின்றதோ அதை தமிழ் மக்கள் மறக்கவில்லை. அந்தத் தளத்தில் மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டத்தை தமிழ் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறார்கள்

இரண்டாவது தளத்தில், தமிழ் மக்கள் தமது சமூகத்துக்குள்ளேயே மறதிக்கு எதிராக, அல்லது திட்டமிட்டு தெரிவு செய்யப்பட்ட மறதிக்கு எதிராக அல்லது மந்தத்தனத்துக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது. ஏனென்றால் மறதிதான் பெரும்பாலான தொழில்சார் அரசியல்வாதிகளின் அடிப்படைப் பலமாக இருக்கிறது. மக்களுடைய மறதி. வாக்காளர்களுடைய மறதி.

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் அரசியல்வாதிகள் பெரும்பாலானவர்கள் தமிழ் மக்களின் மறதியை நம்பித்தான் அரசியல் செய்கிறார்கள். ஒரு தேர்தலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் மறந்து விடுவார்கள் என்று அவர்கள் திட்டவட்டமாக நம்புகிறார்கள். ஏன் அதிகம் சொல்வான்? அரசியல்வாதிகளுக்கே தாங்கள் வழங்கிய வாக்குறுதி என்ன என்பது மறந்து விடுகிறது. மிதவாத தமிழரசியலைப் பொறுத்தவரை மறதி தான் மிகப்பெரிய முதலீடு.

நீங்கள் கடந்த தேர்தலில் இப்படி எல்லாம் வாக்களித்தீர்கள். உங்களுடைய வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை? ” என்று யாராவது ஞாபக சக்தி உள்ள ஒரு வாக்காளர் கேட்டால், தமிழ்த்  தேசிய அரசியல்வாதிகள் முழுப் பழியையும் சிங்கள பேரினவாதத்தின் மீது போடுவார்கள். இனவாதம் தங்களைச் செயற்பட விடுவதில்லை. எங்களுக்கு சக்தி இல்லை. எங்களுக்கு மேலும் பலத்தைத் தாருங்கள். எங்களை இந்த தேர்தலில் வெற்றி பெறச் செய்யுங்கள். நாங்கள் சொன்னதைச் செய்கிறோம் என்று சொல்லுவார்கள். ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக யாருமே சொன்னதைச் செய்யவில்லை.

தமிழ் மக்கள் பலவற்றை மறந்து விட்டார்கள். 2009க்கு முன்பு தமிழரசியல் என்பது தியாகம் செய்வதாக, அர்பணிப்புகள் மிகுந்ததாக, வீரம் நிறைந்ததாகக் காணப்பட்டது. அங்கே அரசியலில் ஈடுபடுவதற்கான அடிப்படைத் தகுதி தியாகத்துக்குத் தயாராக இருப்பது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு அரசியல்வாதிக்குரிய அடிப்படைத் தகுதி பிழைக்கத் தெரிந்திருப்பது. தன்னுடைய பதவிக்காலத்தில் எப்படி உழைப்பது? சொத்துச் சேகரிப்பது? என்பதுதான்.

தமிழரசு கட்சிதான் தமிழ் மக்களின் மறதியின் மீது அதிகம் வெற்றிகளைப் பெற்ற ஒரு கட்சி. சம்பந்தர் தன்னுடைய பெருநாள் செய்திகளில் எப்படி எப்படியெல்லாம் வாக்குறுதிகளை வழங்குவார்? சுயாதீன திருச்சபைகளின் போதகர்கள் அருள்வாக்கு கூறுவது போல ஒவ்வொரு பண்டிகை நாளின் போதும் சம்பந்தர் தனது வாழ்த்துச் செய்தியில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் தமிழ் மக்கள் அவற்றையெல்லாம் மறந்து இந்த முறை தமிழரசுக் கட்சிக்கே அதிகம் ஆசனங்களை கொடுத்திருக்கிறார்கள்

இந்த விடயத்தில்  தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது என்பதனை அடிக்கடி நினைவூட்டுவது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான். தமிழரசுக்  கட்சியும் உட்பட ஏனைய கட்சிகளின் உருட்டல்களையும் புரட்டல்களையும்  சுட்டிக் காட்டுவதும், தமிழ் மக்கள் அவற்றை மறந்து விடாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதும் முன்னணிதான்

அதேசமயம் தன்னை ஆயுதப் போராட்டத்தின் நேரடி  வாரிசு போல முன்னணி காட்டிக் கொள்கிறது. ஏனைய எல்லா கட்சிகளையும் விட சாகத் தயாரான கட்சி நாங்கள் மட்டும்தான் என்று முன்னணி கூறுகிறது. கடந்த பொதுத் தேர்தலின்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அவ்வாறு பேசியிருக்கிறார். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் தமிழ் தேசிய கட்சிகளில் எது சாகத் தயாரானது என்பதனை யாராவது உயிர் தியாகம் செய்துதான் நிரூபிக்கலாம். முன்னணியில் இதுவரை யாரும் தங்கள் உயிர்களைத் துறந்து போராடியிருக்கவில்லை. ஏனைய கட்சிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டுவதற்காக அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். தமிழ்த் தேசிய அரசியல் எனப்படுவது சாகத் துணிந்தவர்களுக்குத்தான் என்ற  ஒரு நிலைமை 2009க்கு முன் இருந்தது. தமிழ் மக்கள் அதை மறந்து விட்டார்கள் என்று முன்னணி நம்புகின்றதா?

எல்லா நினைவு நாட்களும் மறதிக்கு எதிரானவைதான். ஒவ்வொரு நினைவு நாளின்போதும் தமிழ் மக்கள் நினைவிடங்களில் அல்லது துயிலுமில்லங்களில் கூடுகிறார்கள். அங்கு விளக்கு ஏற்றுகிறார்கள். அழுகிறார்கள். ஆனால் அந்தக் கண்ணீரெல்லாம் எங்கே சென்று சேர்கிறது? அதன் விளைவை யார் வாக்குகளாக அறுவடை செய்வது?

தியாகிகளை நினைவு கூர்வது என்பது அந்த தியாகிகளோடு களத்தில் நின்று தமது கல்வியைத் தியாகம் செய்து, தமது எதிர்கால வாழ்வைத் தியாகம் செய்து, உறுப்புகளைத் தியாகம் செய்து, உறவுகளைத் தியாகம் செய்து, இளமையைத் தியாகம் செய்து, ஆசா பாசங்களைத் தியாகம் செய்து, ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தபின் புனர்வாழ்வு பெற்று, இன்று இலங்கைத் தீவில் அதிகம் ஆபத்துக்குள்ளாகக் கூடிய ஒரு தரப்பாக காணப்படும் முன்னாள் இயக்கத்தவர்களையும் மறந்து விடாமல் இருப்பதுதான். அவர்களின் பலர் இப்பொழுதும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களின் பலர் இப்பொழுதும் பிறர் உதவியில் தங்கியிருக்கிறார்கள். அவர்களின் சிலர் அண்மையில் நடந்த தேர்தலில் போட்டியிட்டார்கள்.அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் தெரிந்திருக்கிறது. நிர்வாகம் தெரிந்திருக்கிறது. ஆனால் தேர்தல் அரசியலில் கள்ளச் சூத்திரங்கள் தெரிந்திருக்கவில்லை. ஆனால் யாருமே வெற்றி பெறவில்லை.

அப்படித்தான் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்ற முண்டியடிக்கும் ஒவ்வொரு அரசியல்வாதியும் அங்கே உறங்கிக் கொண்டிருக்கும் தியாகிகளின் வீடுகளில் அடுப்பெரிகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய தமது கடமையை மறந்து விடாமல் இருக்க வேண்டும். அதாவது தியாகிகளை நினைவு கூர்வது என்பது அவர்களுடைய தியாகத்தால் எந்தக் குடும்பத்தில் வெற்றிடம் ஏற்பட்டதோ, அது எந்த குடும்பத்திற்கு தனிப்பட்ட பேரிழப்பாக மாறியதோ, அந்தக குடும்பத்தை மறந்துவிடாமல் இருப்பதுதான். அந்த குடும்பத்தைப் பாதுகாப்பதுதான். தியாகிகளின் விதவை மனைவியர் இப்பொழுது என்ன செய்கிறார்கள்? தியாகிகளின் பிள்ளைகளை யார் பராமரிக்கிறார்கள்? போன்ற விடயங்களையும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்காக போராடப் போய் காணாமல் ஆக்கப்பட்டவர்களையும், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களையும், எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமலேயே தொலைந்து போனவர்களையும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும்.

எனவே நினைவு கூர்தல் என்பது அதாவது மறதிக்கு எதிரான போராட்டம் அல்லது அதிகாரத்துக்கு எதிரான போராட்டம் என்பது, தமிழ் மக்களைப் பொறுத்தவரை இறந்த காலத்தை நினைவு கூர்வது மட்டுமல்ல. அதற்குமப்பால் ஆழமான பொருளில், அது இறந்த காலத்தில் இருந்து கற்றுக் கொள்வது. மகத்தான தியாகங்களும் மகத்தான வீரமும் எங்கே தோற்கடிக்கப்பட்டன? எதனால் தோற்கடிக்கப்பட்டன? என்பதைக் கற்றுக் கொள்வது. காயங்களில் இருந்து, கூட்டு மனவடுக்களில் இருந்து, கூட்டுத் துக்கத்திலிருந்து கற்றுக் கொள்வது. கூட்டுத் துக்கத்தை ஆக்க சக்தியாக மாற்றுவது. கூட்டுக் கோபத்தை ஆக்க சக்தியாக மாற்றுவது