அநுர அரசின் ஆட்சி ”மாற்றமா, ஏமாற்றமா?”
Share
”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்கவில்லை .அமைச்சரவையில் இரு தமிழர் என படம் காட்டப்பட்டவர்களில் இராமலிங்கம் சந்திரசேகர் மலையகத்தமிழர் .அடுத்தவரான மாத்தறை தமிழ் பெண்ணான சரோஜா சாவித்ரி போல் ராஜ் தன்னை ஒரு தமிழராக ,தமிழச்சியாக காண்பிக்க விரும்பாதவர். தனிச்சிங்கள கலாசாரத்தில் வாழ்பவர். அவரின் கணவர் சிங்களவரான மருத்துவர்.தமிழ் ஊடகங்கள் இவரை தமிழராக பெருமைப்படுத்த முயன்றபோது தன்னை தமிழராகக் காண்பிக்க வேண்டாம் என ”அன்புக் கட்டளை’இட்டவர். 29 பேர் கொண்ட பிரதியமைச்சர்களில் தமிழ் .முஸ்லிம்,மலையகத் தமிழர் என ஒவ்வொருவர் மட்டுமே நியமனம்”
கே.பாலா
இலங்கையில் ஒரு அரசியல் ”மாற்றம்”வேண்டுமென எதிர்பார்த்து ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி,ஜே .வி.பி.ஆகியவற்றின் தலைவரான அநுரகுமார திசாநாயக்காவுக்கு 56,34,915 வாக்குகளை வழங்கி ஜனாதிபதியாக்கி பெருமைப்பட்டதுடன் அவரது கட்சி நாட்டை ஆள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் 68,63,186 வாக்குகள் மூலம் 159 பாராளுமன்ற ஆசனங்களை வழங்கி அழகுபார்த்த மக்களில் வழக்கம்போலவே சிறுபான்மையினத்தவர்களான தமிழ்,முஸ்லிம் மக்கள் ,நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கு புதிய திசைகாட்ட வந்த அநுரகுமார அரசால் ஏமாற்றப்படும் நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சிக்கு வர தமது சமூக கட்சிகளை புறக்கணித்து அண்ணளவாக சுமார் 10 இலட்சம் வாக்குகள் வரை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய முஸ்லிம்களே அநுரகுமார அரசிடம் மாற்றத்தை எதிர் பார்த்து பெரும் ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.அதேபோன்றே புதிய திசையில் பயணிக்கப்போகின்றோம் எனக்கூறி தடம் மாறி தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அண்ணளவாக 7 இலட்சம் வாக்குகள் வரை வழங்கி தமது தேசியக் கட்சிகளைப் புறக்கணித்த தமிழர்களுக்கும் அநுர அரசில் ஏமாற்றமே கிடைத்து வருகின்றது.
ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதலில் இடம்பெற்ற மாகாண ஆளுநர்கள் நியமனத்தில் வடக்கு மாகாணத்திற்கு தமிழ் ஆளுநரையும் மேல் மாகாணத்திற்கு முஸ்லிம் ஆளுநரையும் நியமித்த அநுரகுமார, தமிழ் அல்லது முஸ்லிம் ஆளுநர் ஒருவரையே கிழக்கு மாகாணத்திற்கு நியமிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்ட நிலையில் கிழக்கிற்கு சிங்கள ஆளுநரை நியமித்து தமிழ், முஸ்லிம்களுக்கு முதலாவது அதிர்ச்சி கொடுத்தார்.
அப்படி இருந்தும் அநுரகுமார மீது நம்பிக்கையிழக்காத தமிழ் ,முஸ்லிம் மக்கள் பாராளுமன்றத்தேர்தலிலும் அநுரகுமாரவின் தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.அதிலும் வடக்குத் தமிழர்கள் வரலாற்றில் முதல் தடவையாக சிங்களக்கட்சி ஒன்றுக்கு பெரும்பான்மைப் பலத்தை கொடுத்த வரலாற்றுத் தவறை செய்தனர்.அதே போன்றே கிழக்கிலும் முஸ்லிம்கள் தமது சமூகக் கட்சிகளை தோற்கடித்து தேசிய மக்கள் சக்தியை வெற்றி பெற வைத்தனர்.
இவ்வாறு தமிழ் ,முஸ்லிம் .மக்களின் பேராதரவுடன் பாராளுமன்றத்தேர்தலில் நேரடியாக 141 ஆசனங்களையும் தேசியப்பட்டியல் மூலம் 18 ஆசனங்களையுமாக மொத்தம் 159 ஆசனங்களைப்பெற்று வரலாற்று வெற்றிபெற்ற அநுரகுமாரவின் தேசிய மக்கள்சக்தி அரசின் புதிய அமைச்சரவை அண்மையில் பதவியேற்றபோது மீண்டும் தமிழ், முஸ்லிம், மக்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர்.ஏமாற்றப்பட்டனர். ஏளனப்படுத்தப்பட்டனர்.
அநுர அரசின் அமைச்சரவை அமைச்சர்களாக 21 பேர் நியமிக்கப்பட்ட நிலையில் இந்த அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முற்றாக புறக்கணிக்கப்பட்டு இராமலிங்கம் சந்திரசேகர் என்ற மலையகத்தமிழர் ஒருவரும் சரோஜா சாவித்ரி போல் ராஜ் என மாத்தறைத் தமிழ் பெண் ஒருவரும் மட்டுமே சிறுபான்மையினத்தவர்கள் சார்பில் உள்வாங்கப்பட்டு அநுர அரசின் அமைச்சரவையில் இரு தமிழர்களுக்கு இடம் என்ற படம் காண்பிக்கப்பட்டது.
இதில் இராமலிங்கம் சந்திரசேகர் என்ற மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அமைப்பாளராக செயற்பட்டு வந்தது மட்டுமே அவருக்கும் வடக்கிற்கும் உள்ள தொடர்பு. அடுத்தவரான மாத்தறை தமிழ் பெண்ணான சரோஜா சாவித்ரி போல் ராஜ் தன்னை ஒரு தமிழராக ,தமிழச்சியாக காண்பிக்க விரும்பாதவர். தனிச்சிங்கள கலாசாரத்தில் வாழ்பவர். அவரின் கணவர் சிங்களவரான மருத்துவர். தமிழ் ஊடகங்கள் இவரை தமிழராக பெருமைப்படுத்த முயன்றபோது தன்னை தமிழராகக் காண்பிக்க வேண்டாம் என ”அன்புக் கட்டளை’இட்டவர் தான் இந்த சரோஜா சாவித்ரி போல் ராஜ்.
இவ்வாறாக தமிழர் என்ற போர்வையில் இருவர் அமைச்சர்களாக இருந்தபோதும் இலங்கை அமைச்சரவை வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் இடம்பெறாத அமைச்சரவை என்ற வரலாற்று பதிவையும் அநுர அரசு தனக்குரியதாக்கியது.முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக்கி, சிறைகளில் அடைத்து, வன்முறைகளைத்தூண்டி முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்த கோத்தபாய ராஜபக்ச அரசின் முதல் அமைச்சரவையில் கூட முஸ்லிம் ஒருவரே பிரதான அமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட நிலையில் கோத்தபாய அரசில் பழிவாங்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்குவோம் என முழங்கி முஸ்லிம்களின் வாக்குகளைப்பெற்று ஆட்சிக்கு வந்த அநுர குமார அரசு தனது அமைச்சரவையில் முஸ்லிம்களை ஏமாற்றியது. புறக்கணித்தது.
வடக்கில் பெரும்பான்மை வெற்றியை பெற்றுக்கொடுத்த தமிழ் மக்களுக்காக வடக்கிலிருந்து ஒரு தமிழ் பிரதிநிதியையாவது அமைச்சரவைக்கு உள்வாங்காது இனவாதம் காட்டியதால் தமிழர்களும் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கியும் ஒரு முஸ்லிமைக் கூட அமைச்சரவையில் இணைக்காததால் முஸ்லிம்களும் அநுர அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்தபோது,சபாநாயகர், ,பிரதியமைச்சர்கள் நியமனங்களின்போது தமிழ், முஸ்லிம்களின் விமர்சனங்களுக்கு தீர்வு கிடைக்கும் என தேசிய மக்கள் சக்தியினரால் சாக்கு போக்குகள் கூறப்பட்டு வந்தன.
இந்நிலையில் சபாநாயகர் நியமனத்தில் போது பெண் ஒருவர் அல்லது முஸ்லிம் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அசோக சபுமல் ரன்வல என்பவர் நியமிக்கப்பட்டதோடு பிரதி சபாநாயகராகவே முஸ்லிமான ரிஸ்வி சாலி நியமிக்கப்பட்டார். பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவராக ஒரு சிங்கள பெண்மணியே நியமிக்கப்பட்டார்.இதிலும் தமிழ்,முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர்.
இதனையடுத்து அநுர அரசில் 29 பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் வெளிவிவகார பிரதி அமைச்சராக அருண் ஹேமச்சந்திரா என்ற திருகோணமலைத் தமிழரும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதிஅமைச்சராக மொஹமட் முனீர் என்ற முஸ்லிமும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் என்ற மலையகத் தமிழரும் மட்டுமே நியமிக்கப்பட்டனர். அதாவது அடையாளத்திற்காக சிறுபான்மையினங்களிலிருந்து ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டனர். இதிலும் தேசிய மக்கள் சக்திக்கு 5 பிரதிநிதிகளை கொடுத்த வடக்கு மாகாணம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது.
இந் நியமனங்களினால் தமிழ், முஸ்லிம்களிடையில் மீண்டும் அதிருப்தியும் விமர்சனங்களும் எழுந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி என்ற முகமூடியுடன் இருக்கும் ஜே .வி.பி.யின் சிறுபான்மையினங்களுக்கு எதிரான உண்மை முகம் அமைச்சர் விஜித ஹேரத்தின் கருத்துக்கள் மூலம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியில் வெற்றி பெற்ற தமிழ், முஸ்லிம்களுக்கு அனுபவம் போதாது.அனுபவமற்றவர்களை அமைச்சர்களாக நியமிக்க முடியாது என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ள கருத்தே தமிழ், முஸ்லிம்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அநுர அரசில் நியமிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் தவிர ஏனையவர்களுக்கு அரசியல் அனுபவம் உள்ளதா?இவர்கள் முன்னர் எம்.பி.க்களாகவேனும் இருந்தவர்களா? அல்லது பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட 29 பேரில் எத்தனை பேருக்கு அரசியல் அனுபவம் உள்ளது? இவர்களில் எத்தனை பேர் முன்னர் எம்.பி.க்களாகவேனும் இருந்தவர்கள் ? இவர்களின் பட்டங்கள்தான் இவர்களின் தகுதி என்றால் தமிழ் ,முஸ்லிம்களிலும் பலரும் அவ்வாறான பட்டங்களுடன் இருக்கின்றார்கள்தானே?அவர்களை ஏன் நியமிக்க முடியாது என்பதே தமிழ்.முஸ்லிம்களின் கேள்வி.
”அனைவரும் சமம் ”என்ற கோஷத்தை பெரிதாக பிரசாரப்படுத்திய அநுரகுமார அரசு 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தமிழ், முஸ்லிம் எவரையும் உள்வாங்காதது, 29 பேர் கொண்ட பிரதியமைச்சர்களில் கிழக்கு தமிழர் ஒருவரையும் மாத்தறை முஸ்லிம் ஒருவரையும் மட்டும் நியமித்து தமிழ்,முஸ்லிம்களின் தாயகமான வடக்கு,கிழக்கை முற்றாக புறக்கணித்தது தான் ”அனைவரும் சமம்” என்ற கோஷத்தின் அர்த்தமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
அதுமட்டுமன்றி அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிகழ்த்திய தனது அரசின் கொள்கைப் பிரகடன உரையும் தமிழ் ,முஸ்லிம் மக்களை குறிப்பாக தமிழ் மக்களை பெரும் ஏமாற்றமடைய வைத்துள்ளது. இன,மதவாதத்திற்கு இடமில்லை என்ற உறுதி மொழியைத் தவிர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்,பிரசாரங்களில் வழங்கிய உறுதிமொழிகள் எதுவுமே உள்ளடக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் , தமிழர்களின் இனப்பிரச்சினையை கையாளப்போகும் விதம், அரசியல் கைதிகள் விடுவிப்பு,காணிகள் விடுவிப்பு,இராணுவ முகாம்க்கள் அகற்றம் போன்ற எந்த விடயங்கள் தொடர்பிலும் தமது அரசிடம் கொள்கை இல்லை என்பதையே ஜனாதிபதியின் உரை வெளிப்படுத்தி நின்றது.
இவ்வாறு அநுரகுமார அரசு மீது அதிருப்தியும் விசனமும் அடைந்துள்ள தமிழர்களை சிறிதளவேனும் திருப்திப்படுத்தவே பாதுகாப்புத்தரப்பினரின் கெடுபிடிகளின்றி மாவீரர் நாள் அனுஷ்டிக்க அனுமதியளிக்கப்பட்டதுடன் அமைச்சின்செயலாளர் ஒருவராக முஸ்லிம் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்திரிகா-ரணில் அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையிலான நோர்வே தலைமையிலான போர் நிறுத்த உடன்பாட்டை முறித்து மீண்டும் போரை ஏற்படுத்தி இலட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் ஜே .வி.பி.யினர்.அரசுக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தியவர்கள் ஜே .வி.பி.யினர். இலங்கை -இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்டு தமிழர்களுக்கு பலத்தைக்கொடுத்த வடக்கு-கிழக்கு இணைப்பை நீதிமன்றத்தின் மூலம் துண்டித்து தமிழர்களை பலமிழக்கச் செய்து தமிழர் தயக்கத்தை பிரித்தவர்கள் ஜே .வி.பி.யினர்.
இவர்கள்தான் .ஜே .வி.பி. என்ற தமிழர் விரோத உண்மை முகத்தை மறைத்து தேசிய மக்கள் சக்தி என்ற ”அனைவரும் சமம்” என்ற போலி முகத்துடன் வருகின்றார்கள் தமிழர்களே , முஸ்லிம்களே இவர்களை நம்பாதீர்கள், இவர்களின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள் சிறுபான்மை இளைஞர் ,யுவதிகளே ”மாற்றம் ”என்ற மாயைக்குள் சிக்கிக்கொள்ளாதீர்கள் இவர்கள் உங்களுக்கு திசை காட்ட மாட்டார்கள் ,உங்கள் திசையை மாற்றுவார்கள் என அனுபவசாலிகள் ,அரசியல் தெரிந்தவர்கள் , ஜே .வி.பி.யின் உண்மை முகம் தெரிந்தவர்கள் கூறியபோதெல்லாம் அதனை நிராகரித்து மாற்றத்திற்கு வாக்களிக்கின்றோம் என புரட்சி செய்துவிட்டு இன்று தேசிய மக்கள் சக்தி சிறுபான்மையினத்தவர்களை புறக்கணிக்கின்றது. மாற்றம் என்று விட்டு ஏமாற்றுகின்றது என ஒப்பாரி வைப்பதால் நடக்கப்போவது ஒன்றும் இல்லை. அடுத்த மாற்றத்திற்காக 5 வருடங்களுக்கு சிறுபான்மையினத்தவர்கள் பொறுத்திருக்கத்தான் வேண்டும்.அதுவரை ஜே .வி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியின் இதுபோன்ற இன்னும் பல புறக்கணிப்புக்களை .ஏமாற்றங்களை சந்திக்கத்தான் வேண்டும்.
ஜே .வி.பி. என்ற தேசிய மக்கள் சக்தியிடம் பெரிதாக மாற்றத்தை, தமது எதிர்காலம் குறித்த புதிய திசையை எதிர்பார்த்தது தமிழ்,முஸ்லிம்களின் தவறே தவிர அது அநுரகுமார அரசின் தவறல்ல.ஏனெனில் அவர்களின் கொள்கை சிறுபான்மையினங்களுக்கு எதிரானது என்பது வரலாறு . எனவே சிங்களக் கட்சியான அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் தமிழ், முஸ்லிம் மக்கள் நெருங்க ,இணைய விரும்பிய வரலாற்று மாற்றம் ஒன்று நிகழ்ந்த நிலையில் தனது இனவாதம் என்ற மாறாத கொள்கையால் தமக்கு வரலாற்று வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததில் பெரும்பங்கு வகித்த தமிழ், முஸ்லிம் மக்களை தூரத்தில் வைத்து அநுரகுமார அரசும் கட்சியும் வரலாற்றுத் தவறிழைக்கின்றனர்.