வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு
Share
– யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை
எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
வானிலை நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த காற்றுச் சுழற்சியை பொறுத்தவரையில், உருவாகியதன் பின்னர் மிக மெதுவாக மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், அதாவது 10ஆம் திகதி அல்லது 11 ஆம் திகதி அளவில் இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக எதிர்வரும் 10ஆம் திகதியில் இருந்து 15 ஆம் திகதி வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி அளவில் சுமத்திரா தீவுகளுக்கு அண்மித்து காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி அந்தக் காற்றழுத்த தாழ்வு நிலையும் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
19ஆம் தேதி உருவாகின்ற காற்றழுத்த தாழ்வு நிலையை பொறுத்தவரையில் தற்போது சில மாதிரிகள் இது ஒரு தீவிரமான காற்றழுத்த தாழ்நிலையாக மாறும் எனவும், சில மாதிரிகள் இது ஒரு புயலாக மாறும் எனவும் வெளிப்படுத்துகின்றன. ஆகவே 19ஆம் திகதி ஏற்படக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பான இறுதியான முடிவுகளை அடுத்த சில நாட்களின் பின்னரே உறுதியாக வெளிப்படுத்த முடியும்.
எதிர்வரும் ஏழாம் திகதி ஏற்படுகின்ற காற்றுச் சுழற்சியினால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படாது விட்டாலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் உடைய சில பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படுகிறது.
எனினும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு காணப்படுகின்றது. அதேவேளை எதிர்வரும் பத்தொன்பதாம் திகதி சுமத்திரா தீவுகளுக்கு அண்மதித்து உருவாகக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று அது ஒரு தீவிரமான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு வளிமண்டல அமைப்பாக மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆயினும் இதனை எதிர்வரும் நாட்களிலேயே உறுதிப்படுத்த முடியும்.
அந்த வகையில் எதிர்வரும் ஒன்பதாம் திகதியில் இருந்து வடக்கு – கிழக்கு கடற் பகுதிகள், வங்காள விரிகுடாவில் ஏற்படும் காற்றுச் சுழற்சி காரணமாக ஒரு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடைத் தொழிலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறப்பானதாக அமையும்.
அதேவேளை விவசாய நடவடிக்கைகளை பொறுத்தவரையில், இந்த பெங்கால் புயலால் விவசாய நடவடிக்கைகள் பாதிப்படைந்தவர்கள் மீண்டும் விவசாய விதைப்பு நடவடிக்கைகளை செய்யக்கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. ஆனாலும் தொடர்ச்சியாக 20ஆம் திகதியில் இருந்து 25ஆம் திகதி வரைக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தினுடைய பல பகுதிகளுக்கு மிதமானது முதல் கனமானது வரையான மழை வீழ்ச்சி கிடைக்க சந்தர்ப்பம் இருப்பதால் இக்காலப் பகுதியில் மீண்டும் விதைத்தல் செயற்பாடுகளை செய்கின்றமையால் மீண்டும் பாதிப்படையக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது என்றார்.