அடக்குமுறைக்குட்படுவோர் இல்லாதிருக்க வேண்டுமென்றால், அடக்குமுறையாளர்கள் இருக்கக்கூடாது….!
Share
இலங்கைப் பாராளுமன்றில் சிறீதரன். எம்.பி..!!!
இலங்கைத்தீவில் அடக்குமுறைக்கு உட்படுகின்ற இனமொன்று இருக்க முடியாதெனில், அடக்குமுறையை மேற்கொள்பவர்களாக பெருந்தேசிய இனமும் இருக்கக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் 4ம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகியிருந்த நிலையில், சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் இனவாதத்தை எவரும் பேசக் கூடாது என ஆளுங்கட்சியினர் வலியுறுத்துவது எமக்குப் புதிய நம்பிக்கையைத் தந்திருக்கிறது. எண்பது ஆண்டுகளின் முன்பிருந்த இலங்கையின் ஆட்சியாளர்களிடம் இத்தகைய மனநிலை இருந்திருந்தால், தமிழினம் அடக்கப்பட்ட இனமாக, இனவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட இனமாக இத்தனை துயரங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது.
கடந்தகாலங்களில் தமிழர் தரப்பால் அரசாங்கங்களோடு மேற்கொள்ளப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தைகளும் எமக்கு சாதகமாக அமையவில்லை என்ற நம்பிக்கையீனங்களைக் கடந்து, புதிய அரசின் ஆட்சிக்காலத்தில் இனவாதமற்ற இலங்கை நாட்டில் தமிழர்களது சுயநிர்ணய உரித்துகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகுமானால், நாங்கள் உங்களோடு இணைப்பங்காளர்களாக பயணிக்கத் தயாராக இருக்கிறோம்.
இடதுசாரிக் கொள்கை அடிப்படையில் வளர்ச்சிகண்ட ஜே.வி.பியினரிடத்தே அடக்குமுறை இருக்காதென்றும், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற மார்க்சிசமும், லெனினிசமும், சேகுவேரா, மாவோ சேதுங் போன்ற புரட்சியாளர்களின் சிந்தனைப் போக்கும் மேலோங்கியிருக்க வேண்டும் என்றுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நீங்கள் சிந்திய இரத்தமும், செய்த தியாகமும் இன்று உங்களை இந்த சிம்மாசனத்தில் ஏற்றியிருப்பதைப் போல, ஈழவிடுதலைப் போராட்டத்தில் எமது மாவீரர்களும், மக்களும் செய்த உயிர்த்தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் எங்கள் இனத்தின் இருப்பை உறுதிசெய்யும் நிலையை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் – என்றார்