இரண்டு வருடங்களுக்கு முன்னர் மருந்து கேட்டு வீதியில் இறங்கியதற்காக பயங்கரவாத பொலிஸார் விசாரணை
Share
இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டில் ஏற்பட்டிருந்த மருந்துப் பற்றாக்குறைக்கு தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுத்த கிழக்கு மாகாண மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் (CTID) இந்த வருடத்தில் இரண்டு தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
திருகோணமலை நாராயணபுரத்தைச் சேர்ந்த அறுபது வயதுடைய நவரத்தினராசா அஞ்சலிதேவியிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் திருகோணமலைப் பிரிவினர் டிசம்பர் 4ஆம் திகதி காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பிட்ட காரணத்தைக் கூறாத, அழைப்பாணைக்கு அமைய, பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் திருகோணமலைப் பிரிவிற்குச் சென்ற அவரிடம், நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்ட 2022ஆம் ஆண்டு, திருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியமை தொடர்பாக வாக்குமூலத்தை பதிவு செய்ய அழைக்கப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருந்தபோது, 2024 பெப்ரவரி 7ஆம் திகதியும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்திருந்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான காரணம் குறித்து, நவரத்தினராசா அஞ்சலிதேவிடம் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வினவியபோது, விவசாயிகள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுப்பது போல, ஏனைய மக்களும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரி போராட்டங்களை முன்னெடுப்பது போல, மருந்து பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மக்களுக்காக தானும் போராட்டம் நடத்தியதாக அஞசலிதேவி குறிப்பிட்டுள்ளார்.
நவரத்தினராசா அஞ்சலிதேவியின் கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் அவரது தனிப்பட்ட விபரங்களை வைத்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் திருகோணமலைப் பிரிவு அதிகாரிகள், அவர் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பிலும் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணைக்காக பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் திருகோணமலை பிரிவில் டிசம்பர் 4ஆம் திகதி முன்னிலையாகுமாறு, டிசம்பர் 2ஆம் திகதி, நிலைய பொறுப்பதிகாரியினால் கையொப்பமிடப்பட்டு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொலிஸ் படிவம் 256 சமூக வலைதளங்களில் பகிரப்பட்டமை குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பான சட்ட ஆலோசனையை பெறுவதற்காக தனது சட்டத்தரணிக்கு மாத்திரமே அதனை தான் அனுப்பியதாக தெரிவித்துள்ள நவரத்தினராசா அஞ்சலிதேவி, அது எவ்வாறு சமூக ஊடகங்களுக்கு பகிரப்பட்டது என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது எனவும் அதிகாரிகளிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் திருகோணமலைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான மேலதிக வாக்குமூலத்தை வழங்குவதற்காக எதிர்வரும் நாட்களில் அவர் மீண்டும் அழைக்கப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரச சார்பற்ற நிறுவனமொன்றின் முன்னாள் செயற்பாட்டாளரான நவரத்தினராசா அஞ்சலிதேவி பிரதேசத்தில் பெண்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வருவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.