LOADING

Type to search

இலங்கை அரசியல்

முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைக்க இலங்கை நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது

Share

தமிழ் மக்களுக்கு எதிரான வரலாற்றின் மிகப்பெரிய இனப்படுகொலையில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் மண்ணில் அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார்.

இவ்வாறான அங்கீகரிக்கப்பட்ட நினைவுச்சின்னம் போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களால் கோரப்படுவதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 17ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“உறவுகளை இழந்து தற்போது வாழ்ந்து வரும் மக்கள் தமது உறவுகளை நினைவு கூறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதத்தில் உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் உயர் நாகரீக பண்பாடுகளை கொண்டுள்ளது. எமது இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த எம் உறவுகளை நினைவுகூற ஒரு நினைவாலயம் ஒன்றை அமைப்பது அவசியமான ஒரு விடயம்.”

இவ்வாறான நினைவுச் சின்னம் அமைப்பதில் உயிரிழந்தவர்களின் பெயர்களை பதிவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து துரைராசா ரவிகரன் இதன்போது தெளிவுபடுத்தினார்.