கிளிநொச்சி மாவட்டத்தின் மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு நியமனம்
Share
மதுபான நிலைய அனுமதிப்பத்திர அமைவிட அறிக்கை தயாரிக்க குழு ஒன்றுஇன்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் குறித்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் நகர திட்டமிடலுக்கு இடையூறாகவும், அதிகளவிலும் மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டு மக்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அர்ச்சுனா, கூட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
குறித்த விடயம் தொடர்பில் சிபாரிசு வழங்கியவர்களின் விடயத்தை வெளியிட வேண்டும் எனவும், மதுபான சாலை அனுமதிகளுக்கு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
குறித்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும், மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டால் மாத்திரமே குறித்த விடயத்தை கையாள முடியும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார்.
2010, 2012களில் இரண்டு மதுபான நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த வருடம் 16 மதுபான நிலையங்கள் புதிதாக வழங்கப்பட்டது. இந்த வருடமே அதிக மதுபான நிலையங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி திணைக்கள உத்தியோகத்தர் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குறித்த மதுபான நிலையங்களை உடனடியாக மூடுவதெனில் சட்ட சிக்கல்கள் ஏற்படும். ஆகவே அது தொடர்பில் அறிக்கை தயாரிக்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் முரளிதரன் தெரிவித்தார்.
இந்த விடயத்தை ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க தான் மும்மொழிவதாக சிறிதரன் தெரிவித்தார். அதனை அர்ச்சுனா வழி மொழிந்தார். குறித்த குழு தை மாதம் இறுதிக்கு முன்பதாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு மதுபான நிலையத்தின் அமைவிடம், பொதுமக்கள் மனநிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அதிகரித்த மதுபான சாலைக்கு சிபாரிசு கொடுத்த தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் கடந்த காலங்களில் எழுந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.