தமிழ் தேசியத்தை நாறடிக்கும் ”மதுபானசாலை” அரசியல்
Share
”தமிழரசுக்கட்சிக்குள் சர்வாதிகாரிகள்போல் செயற்பட்ட சுமந்திரன் அணி தமது சக போட்டியாளர்களை வீழ்த்த ”தமிழரசுக்கட்சிக்குள் மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்கள் ”என்று முன்னெடுத்த திட்டமிட்ட பிரசாரமே ”பூமராங்”காக மாறி தமிழரசுக்கட்சியை வடக்கு மாகாணத்தில் பதம் பார்த்துள்ளது. தமிழ் தேசியத்தை எதிர்த்துக்கொண்டு மதுபானசாலை அரசியலை கையில் எடுத்ததன் விளைவை சுமந்திரன் அனுபவிக்கின்றார். தமிழரசுக்கட்சிக்குள் தமிழ் தேசியம் மறைந்து ”மதுபானம்” முதன்மை பெற்றதன் விளைவை தமிழரசுக்கட்சி அனுபவிக்கின்றது. ”குடி” குடியைக் கெடுக்கும்,மதுபானம் ”வீட்டைக்”கெடுக்கும் என்பதனை தமிழரசுக்கட்சி அரசியல்வாதிகள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.”
கே.பாலா
நடைபெற்று முடிந்த இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் தமிழரசு கட்சி பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது . அதற்கு காரணம் என்னவென அக்குவேறு, ஆணிவேறாக, ஆராய்ந்து பார்த்தால் அந்த இடத்தில் வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக எமது கட்சியின் சில முக்கியமான நபர்கள் அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறியமையே உள்ளதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.அத்துடன் மக்கள் எங்களுக்கு பாடத்தை கற்பிக்கின்றார்கள். இவ்வாறு கற்பித்த பாடங்களை படிப்பினையாக கொண்டு நாங்கள் திருந்த வேண்டும். இல்லையெனில் நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரண்டுபிடிப்போமாக இருந்தால் நிச்சயமாக மீண்டும் மீண்டும் தமிழரசுக்கட்சி சறுக்கல்களையும் சரிவுகளையும் சந்திக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
வேட்பாளர் தெரிவில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக எமது கட்சியின் சில முக்கியமான நபர்கள் அதிருப்தியினால் கட்சியை விட்டு வெளியேறியமையே தோல்விக்கு காரணமென சிறிநேசன் கூறியுள்ளமை ஒரு காரணமாக இருந்தாலும் தமிழரசுக்கட்சியின் தலைவர் பதவிக்கு எதிராக மேற்கொண்ட சதிகள் ,வழக்குத் தாக்கல்கள்,ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு எதிரான நிலைப்பாடு, ,மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் என்ற கீழ்த்தரமான பிரசாரம் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் தலைகுனியவைத்த செயற்பாடு போன்றவற்றால் சுமந்திரன் அணி மீது வடக்குத் தமிழர்களுக்கிருந்த கடும் கோபமே வடக்கில் தமிழரசுக்கட்சியின் வாக்கு வங்கியை உடைத்தது.
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணி உரிமைகள் .அரசியல் கைதிகள் விடுதலை,காணாமலாக்கப்பட்டோர், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோர் பிரச்சினைகளை முன்வைத்து தேர்தல் பிரசாரங்களை முன் எடுக்காது தமது கட்சிக்குள்ளேயே பதவி மோகங்களில் குத்து வெட்டுக்கள், குழிபறிப்புக்களில் ஈடுபட்டு கட்சியை உடைத்து பலரை வெளியேற்றியதுடன் கட்சி விசுவாசிகளை தேர்தலில் தோற்கடிக்க மிகவும் கீழ்த்தரமாக மதுபான சாலை அனுமதிகள் என்ற பிரசாரத்தை கையில் எடுத்து ஏனைய சமூகத்தினர் தமிழர்களை அதிலும் வடக்குத் தமிழர்களை குடிகாரர்களாக,மதுபான வெறியர்களாக பார்த்து சிரிக்கும் நிலையை சுமந்திரன் அணி ஏற்படுத்தியதே தமிழரசிலிருந்து தமிழ் மக்களை பிரித்தது.
தமிழரசுக்கட்சிக்குள் சர்வாதிகாரிகள்போல் செயற்பட்ட சுமந்திரன் அணி தமது சக போட்டியாளர்களை வீழ்த்த,முன்னெடுத்த ”தமிழரசுக்கட்சிக்குள் மதுபான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்கள் ”என்ற திட்டமிட்ட பிரசாரமே முக்கியமான காரணமாக ”பூமராங்”காக மாறி தமிழரசுக்கட்சியை வடக்கு மாகாணத்தில் பதம் பார்த்துள்ளது. ஆனாலும் விடாக்கொண்டர்கள், கொடாக் கொண்டர்கள் தமது தலைக்கன நிலைப்பாட்டிலிருந்து இன்னும் மாறியதாகத் தெரியவில்லை.தொடர்ந்து மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் என்ற மது மயக்கத்தில் தமிழ் தேசிய அரசியலை நாறடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டினால் பாராளுமன்றத் தேர்தலில் தமது வெற்றி கேள்விக்குறியாகும் என்பதனை உணர்ந்த சுமந்திரன் அணி தமக்கு பெரும் போட்டியாளராக கருதிய சிறீதரனை மதுபான அனுமதிப்பத்திரங்களுடன் தொடர்புபடுத்தி பாரிய பிரசாரத்தின் மூலம் அவரை தோற்கடிக்கும் சதியை முன்னெடுத்தது. அதற்காக தனது விசுவாசிகள், அடிவருடிகள் மூலம் சிறீதரன் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மதுபான சாலை அனுமதிப்பத்திரம் கோரி அனுப்பிய கடிதம் போன்ற போலிக் கடிதத் தலைப்புக்களுடனான கடிதங்களைக்கூட சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியிட்டு சேறு பூசினர்.
அத்துடன் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடுமாறு ஜனாதிபதியாக தெரிவாகியிருந்த அநுர குமார திசாநாயக்ககவை நேரில் சந்தித்து சுமந்திரன் வலியுறுத்தினார்.சுமந்திரனும் அவரது வலதுகரமான சாணக்கியனும் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்கள் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கின்றார்கள். அவ்வாறானவர்களை தோற்கடிக்க வேண்டும் என்றே தமது பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் வலியுறுத்தினர். ஊடாக மாநாடுகளை நடத்தியும் இதனையே வலியுறுத்தினர்
எதனை ஆதாரமாக வைத்து மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திர விடயத்தில் தமிழரசுக்கட்சியில் தமக்கு சவாலாகவிருந்தவர்களை தொடர்புபடுத்தினார்களோ தெரியவில்லை அதனை மட்டுமே தமது பிரசார ஆயுதமாக பயன்படுத்தி அதிலேயே தொங்கிக்கொண்டிருந்தார்கள் ஆனால் இறுதிவரையில் சுமந்திரனாலோ சாணக்கியனாலோ மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்களையோ அல்லது சிபாரிசு செய்தவர்களையோ நிரூபிக்க முடியவில்லை.
தமிழ் மக்களின் தாய்கட்சியான தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பாராளுமன்றத்தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காக வைத்து இவ்வாறாக மதுபானசாலை அரசியலை முதன்மைப்படுத்தி பிரசாரங்களை முன்னெடுத்து தமிழ் மக்களின் விசனத்தையும் விமர்சனத்தையும் சம்பாதித்ததன் விளைவாக தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் சிறீதரன் மட்டும் வெற்ற பெற்றதுடன் வன்னிமாவட்டத்தில் ரவிகரன் மட்டும் வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 58,043 வாக்குகளையும் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 27,834 வாக்குகளையும் பெற்று வெற்றிபெற்றிருந்த சுமந்திரன் இந்தத்தேர்தலில் 15039 வாக்குகளைமட்டும் பெற்று படுதோல்வியடைந்தார். சுமந்திரன் தோல்வியடைந்தது மட்டுமன்றி அவர் சிறீதரன் மீது முன்வைத்த மதுபானசாலை அனுமதிப்பத்திர குற்றச்சாட்டும் பொய் என்பதும் வெளிப்பட்டது.
சுமந்திரனின் வலியுறுத்தலுக்கமையை ரணில் அரசில் அரசியல் இலஞ்சமாக மதுபானசாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் விபரங்களை அநுர அரசு பாராளும்னர்த்தேர்தல் முடிந்த பின்னர் பாராளுமன்றத்தில் வெளியிட்டது. ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கடந்த அரசாங்க காலத்தில் நாட்டில் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்னாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததுடன் அது தொடர்பிலான முழு விபரங்களையும் அவர் சபையில் சமர்ப்பித்தார்.
கடந்த அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்துக்கு 32 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் கிழக்கு மாகாணத்துக்கு 22 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 361 மதுபான சாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் நாடு முழுவதிலும் வழங்கப்பட்டிருந்தது.அதாவது மேல் மாகாணத்தில் 110 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் தென் மாகாணத்தில் 48, வட மாகாணத்தில் 32, கிழக்கு மாகாணத்தில் 22, மத்திய மாகாணத்தில் 45, வட மத்திய மாகாணத்தில் 14, ஊவா மாகாணத்தில் 30, வடமேல் மாகாணத்தில் 30 சப்ரகமுவ மாகாணத்தில் 30 என 361 மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் அரசியல் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளன.அதேபோன்று சில்லறை மதுபான விற்பனைக்கான அனுமதிகளாக கொழும்பு 2, கம்பஹா 8, களுத்துறை 8, காலி 9, மாத்தறை 5, அம்பாந்தோட்டை 5, யாழ்ப்பாணம் 5, கிளிநொச்சி 16, வவுனியா 2, மன்னார் 2, திருகோணமலை 4, மட்டக்களப்பு 1, அம்பாறை 5, கண்டி 11, மாத்தளை 6, நுவரெலியா 8, அனுராதபுரம் 4, பொலன்னறுவை 3, புத்தளம் 6, குருநாகல் 8, பதுளை 9, மொனராகலை 7, இரத்தினபுரி 6, கேகாலை 2 என 172 அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவுக்கு இவ்வாறு அனுமதிப்பத்திரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் சமர்ப்பித்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பட்டியலில் மதுபானசாலை அனுமதிகள் பெற்றவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் சிறீதரனின் பெயரோ தமிழரசுக்கட்சியில் குற்றம்சாட்டப்பட்ட ஏனைய எவரினது பெயரோ இடம்பெற்றிருக்கவில்லை .இதனால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளான சுமந்திரன்-சாணக்கியன் அணி மதுபானசாலைகளுக்கான அனுமதிக்கு சிபாரிசு செய்தவர்களின் பெயர்,விபரங்களை வெளியிடுமாறு தற்போது தொனியை மாற்றியுள்ளது. இந்நிலையில் கிளிநொச்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபானசாலைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதன் பின்னணியிலும் இவர்களே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் மதுபானசாலை அனுமதிப்பத்திர பிரசாரத்தில் சுமந்திரனுடன் தீவிரமாக செயற்பட்டவரான இரா.சாணக்கியனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மதுபானசாலையில் ஒரு சிலதினங்களுக்கு முன்னர் மதுபானம் அருந்திய குழுக்களிடையில் ஏற்பட்டமோதலினால் மதுபானசாலை சேதமாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.தனது சகோதரரே மதுபானசாலை நடத்தும் நிலையில் சாணக்கியன் மதுபானசாலைகளுக்கு எதிராகத் தெரிவித்த ”ஊருக்குத்தான் உபதேசம் எங்களுக்கு இல்லை” என்றவாறான கருத்துக்கள் சிரிப்பைத்தான் ஏற்படுத்துகின்றன.
மதுபானசாலைகள் வடக்கு,கிழக்கில் அதிகரிப்பது ஆரோக்கியமான விடயமல்ல. இளம் சந்ததியினரின் எதிர்காலத்தையே அழித்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் சுமந்திரன் -சாணக்கியன் அணி அதனை தமது சக போட்டியாளரை வீழ்த்தமட்டும் பயன்படுத்த நினைத்ததே தமிழரசுக்கட்சியை வடக்கு மாகாணத்தில் வீழ்த்தியுள்ளது. தமிழ் தேசியத்தை எதிர்த்துக்கொண்டு மதுபானத்தை கையில் எடுத்ததன் விளைவை சுமந்திரன் அனுபவிக்கின்றார். தமிழரசுக்கட்சிக்குள் மதுபானம் வந்ததன் விளைவை தமிழரசுக்கட்சி அனுபவிக்கின்றது. தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போது மதுபான அரசியலை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளதன் விளைவை தமிழினம் அனுபவிக்கப் போகின்றது.