கலாச்சாரப் படுகொலையின் ஆரம்பமே 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை !
Share
51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
(தமிழ் மக்கள் மீதான கலாச்சாரப் அழிப்பின் ஆரம்பமே 1974 தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும். 51வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையை 10ஜனவரி 2025 தமிழர் தாயகம் அனுஷ்டிப்பதையோட்டி இச் சிறப்புக் கட்டுரை பிரசுரமாகிறது)
ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பதே எதிரிகளின் போருயுயாபமும், தந்திரமாகும். அதற்கு ஒப்பாக, ஈழத்தில் தமிழர் கலாச்சாரப் படுகொலையின் ஆரம்பம் தான் 1974 யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும்.
சிறிமா அரசின் இனபாகுபாடு:
தமிழ் மரபையும், வரலாற்றையும் காத்து நிகழ இருந்த, தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை தமிழ் மக்களின் வரலாற்றில் என்றுமே துடைக்க முடியாத கறையாகியுள்ளது.
சிறிலங்கா அடக்குமுறை அரசுகளின் தொடர்ச்சியான 1958 ,1977 , 1983இல் நிகழ்ந்த திட்டமிடப்பட்ட இனக்கலவரங்களால் தமிழர்களின் பொருளாதார வளங்களும், அறிவியல், பண்பாட்டு நிலையங்களும் அழித்து நாசமாக்கப்பட்டன. தமிழர் கலாச்சாரத்தை அழிக்க நிகழ்ந்த பண்பாட்டுப் படுகொலை தான் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையாகும்.
ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10, 1974 இல் மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒன்பது பேர் இலங்கை காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டால் மரணம் அடைந்தனர்.
சிங்கள பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டினால் மின்கம்பிகள் அறுந்து மக்கள் திரண்டிருந்த இடத்தில் விழுந்தமை, ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனத் திரண்டிருந்த தமிழ் மக்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியமை, இரவு நேரத்தில் ஏற்பட்ட இக்குழப்பத்தினால் நிகழ்ந்த விபத்துகள், இந்தக் குழப்பங்களினால் இந்த மரணங்களுக்குக் காரணமாயின.
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, காவல்துறையினரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.
இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப்படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது.
மேயர் அல்பிரட் துரையப்பாவின் வஞ்சகம்:
யாழ்ப்பாணத்தில் தமிழராட்சி மாநாடு நடைபெறுவதை அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் விரும்பவில்லை. அரசாங்கம் இதனை ஏற்றுக்கொள்ளாது கொழும்பில் நேரடியாகவும், யாழ்ப்பாணத்தில் மாநகர மேயர் ஊடாகவும் தொடர்ச்சியான தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் மாநாடு நடைபெறுவதற்கான முக்கிய அரங்குகளின் அனுமதி இறுதி நேரம் வரை மறுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள பல வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. இவைகள் எவ்வாறு இருந்தாலும், மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்ற மனவெழுச்சி அமைப்பாளர்களிடமும், மக்களிடமும் இருந்தது. மக்கள் அலை அலையாகத் திரண்டதைக் கண்ட சிங்கள அரசாங்கம் சற்றுக் கீழிறங்கி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வெளிநாட்டு அறிஞர்களுக்கு விசா வழங்கியது.
அதேவேளை மாநாட்டுக் குழுத்தலைவர் அன்றைய நீதியாளர் தம்பையா மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு விரும்பவில்லை. ஆகையால் அவர் தலைவர் பதவியிலிருந்து விலக பேராசிரியர் சு.வித்தியானந்தன் தலைமையில் தமிழாராய்ச்சி மாநாடு மூன்றாம் திகதி ஆரம்பமாகி பத்தாம் திகதிவரை யாழ். முற்றவெளி திறந்த வெளியரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
கோலாகலம் பூண்டிருந்த யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் யாழ். நகரம் வந்தார்கள். அதுவரை நடைபெற்ற எந்தவொரு மாநாடும் இதுபோல சிறப்பாக நடைபெறவில்லை. ஜனவரி 10 ஆம் திகதி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த அறிஞர்கள் கெளரவிப்பு மற்றும் விருது வழங்கல் என்பன யாழ் திறந்த வெளி அரங்கில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அன்றைய தினம் குடாநாடு விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஆனாலும் குறித்த நிகழ்வைத் தடுக்கும் வண்ணம் அப்போது மேயராக இருந்த சிறிமாவின் ஆதரவாளர் அல்பிரட் துரையப்பா யாழ் திறந்த வெளியரங்களில் நிகழ்வுகளை நடத்தவும் அனுமதி தரமறுக்க குறித்த திறந்த வெளி அரங்கம் மூடப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனால் குறித்த நிகழ்வுகள் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகின. பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடியிருந்ததால் வீரசிங்கம் மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்ப, ஏனைய பொதுமக்கள் வீரசிங்க மண்டபத்திற்கு முன்னாலும், யாழ் முற்றவெளியிலும் தங்கியிருந்தனர்.
இறுதி நாள் நிகழ்வு:
1974ஆம் ஆண்டு ஜனவரி பத்தாம் திகதி இறுதி நாளாகக் கொண்டாடப்பட்டது. இறுதி நிகழ்வாக அறிஞர்கள் தமிழின் பெருமைகளையும், ஈழப் பண்பாட்டின் பெருமையையும் பற்றிப் பேசினார்கள்.
ஈழத் தமிழ் மக்கள் உணர்வோடு கைதட்டி உற்சாகப்படுத்தினர். இறுதியாகத் தமிழகப் பேராசிரியர் “நைனா முகமது” பேசிக் கொண்டிருக்கும் போது யாழ். உதவிக்கு காவற்துறைமா அதிபர் சந்திரசேகரா தலைமையிலான காவற்துறை மாநாட்டில் கலந்து கொண்டிருந்த மக்களைத் தாக்கியதுடன், துப்பாக்கியாலும் சுட்டார்கள்.
இச் சம்பவத்தில் ஒன்பது பொதுமக்கள் உயிரிழந்தார்கள். பல தமிழ் மக்கள் காயமடைந்தனர். நிகழ்ச்சி அரங்குகள் சேதமடைந்தன. இம்மாநாட்டினைக் குழப்பிய யாழ் உதவிக் காவற்றுறை அத்தியட்சகர் சந்திரசேகரா பின்னர் சிறீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் காவற்றுறை அத்தியட்சகராகப் பதவி உயர்த்தப்பட்டார்.
தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளான 10.01.1974 அன்று
கொல்லப்பட்ட மக்களின் விபரம் வருமாறு:வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15 – மாணவன்),பரம்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32),ஜோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52 – ஆசிரியர்),புலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவானந்தம் (வயது 21 – மாணவன்),
இராஜன் தேவரட்ணம் (வயது 26),
சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56 – ஆயுள்வேத வைத்தியர்), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14 – மாணவன்) ஆகியோர் இம் மாநாட்டில் களப்பலியாகினர்.
இந்த இறப்புகளின் பின்னர் தீவிரமாக வெளிப்பட்ட தமிழ்த் தேசியவாத போக்கினால், ஈழப் போராட்டம் பின்னர் தீவிரமாக வளர்ச்சியுறத் தொடங்கியது.
50வது ஆண்டு நினைவுகளில் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையை 10ஜனவரி 2025 அன்று தமிழர் தாயகம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கிறது. தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை தமிழ் மக்களின் வரலாற்றில் என்றுமே அழிக்க முடியாத வடுவை உருவாக்கியுள்ளது.