மார்க்கம் மாநகரசபை வளாகத்தில் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்பெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா
Share
கனடாவில் தற்போது மத்திய அரசாங்கம். மாகாண அரசுகள் சில மற்றும் பல நகர சபைகள் ஆகியன ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தை ‘தமிழ் மரபுத் திங்கள்’ என்னும் அழகிய பெயரில் கொண்டாடி வருகின்றன.
மேற்படி விழாக்கள் நடைபெற ஒவ்வொரு பிரதேசங்களிலும் இயங்கிவரும் தமிழர் அமைப்புக்கள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றன.
எவ்வாறாயினும். கனடாவில் மாத்திரமல்ல உலகில் முதன் முதலாக மார்க்கம் நகரசபையின் உறுப்பினராக 14 வருடங்களுக்கு முன்னர் பதவி வகித்த லோகன் கணபதி அவர்களின் முயற்சியினால் மார்க்கம் நகர சபை மற்றும் மார்க்கம் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் அளித்த ஆதரவோடு மார்க்கம் நகரசபையினால் ஜனவரி மாதத்தை ‘ தமிழ் மரபுத் திங்கள்’ என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 12-01-2025 , அன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கம் மாநகரசபை வளாகத்தில் அமைந்துள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் தற்போதைய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்பெற்ற ‘தமிழ் மரபுத் திங்கள்’ விழா வழமைபோல ‘களைகட்டியது’ என்றால் அது மிகையாகாது.
மாகாண சபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் தனது தலைமை உரையில் தமிழ் மரபுத் திங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றது என்பதை தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாகத் தெரிவித்தார்.
தொடர்ச்சியாக இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட ஒன்றாரியோ மாகாணத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கியுபா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சார்பாக ரொறன்ரோவில் உதவித் தூதுவர்களாகப் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிறப்புப் பேச்சாளர்கள் என மேடையில் இயல் இசை நாடகம் என முத்தமிழும் இடையில் ஆங்கிலத்திலான உரைகள் ஆகியனவும் இடம்பெற்றன.
கனடா உதயன் பத்திரிகையின் சார்பில் அதன் பிரதம ஆசிரியரும் அங்கு கலந்து கொண்டார்.