மாவை சேனாதிராஜாவிடமிருந்து கற்றுக்கொள்வது…! | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்
Share
ஈழத்தமிழ் அரசியலில் அரசியல் நாகரீகம் குறைந்து கொண்டே போகிறது.தமிழ் அரசியலில் மூத்த கட்சியாகிய தமிழரசு கட்சியின் வயது 75. அந்தக் கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவின் வயது 62.அதாவது கட்சியின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர். ஆனால் அவரை அவருடைய வயதில் அரைவாசியை விடக் குறைவான கட்சிக்காரர்கள் அவமதித்திருக்கிறார்கள். மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவரை புண்படுத்தியிருக்கிறார்கள். அதை ஏனைய மூத்த உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார்கள்.
இந்த அவமரியாதைகளின் விளைவாகத்தான் மாவை இறந்தாரா இல்லையா என்ற பிரேத பரிசோதனைக்குள் செல்வது எனது நோக்கம் அல்ல.ஆனால் இந்த அவமரியாதைக்கு பழி வாங்குவதாகக் கூறிக்கொண்டு மாவையின் இறுதிக் கிரியையின் போது சுடலைக்குள் ஒரு பனர் கட்டப்பட்டிருந்தது. அந்த பனரில் மாவையின் சா வீட்டுக்கு யார் யார் வரக்கூடாது என்ற பொருள்பட வசனங்கள் எழுதப்பட்டு குறிப்பிட்ட நபர்களின் ஒளிப்படங்களும் அச்சிடப்பட்டிருந்தன.
தமிழ் அரசியல் நாகரீகம் சுடலைக்குள்ளும் உட்கட்சிச் சண்டையைக் கொண்டு வந்து விட்டது. எது புத்தரை ஞானி ஆக்கியதோ, அதாவது நிலையாமை,அந்த நிலையாமையை உணர்த்தும் சுடலைக்குள்ளும் கட்சியின் உட் சண்டை வந்துவிட்டது.
இது தமிழரசுக் கட்சிக்குள் மட்டும் நடக்கவில்லை. முழுச் சமூகத்திலும் நடக்கின்றது. 2009 க்கு பின்னரான ஈழத் தமிழ் கூட்டு உளவியல் என்பது அவ்வாறுதான் மாறி வருகிறது. மூத்தவர்களை மதியாமை; முதிர்ச்சியானவர்களை மதியாமை;துறைசார் ஞானமுடையவர்களை மாதியாமை; முன்னோடிகளை இகழ்வது; சமூகத்தில் ஏதோ தன்னாலியன்ற நற்காரியங்களைச் செய்யும் பிரபல்யமானவர்களை இகழ்வது; எல்லாவற்றையும் மீம்ஸ் ஆக்குவது; எல்லாவற்றையும் பகிடியாக்கிக் கடந்து போவது.. என்ற ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. இதற்கு தொழில் நுட்பம் மட்டும் காரணமல்ல. ஆயுத மோதல்களுக்கு பின்னரான கூட்டு உளவியலே பிரதான காரணம். தொழில்நுட்பம் அதில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றது. அவ்வளவுதான்.
சில மாதங்களுக்கு முன்பு மாவீரர் நாளை யொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராகிய காக்கா ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். அந்தக் காணொளிக்குக்கு கீழே ஒருவர் போட்டிருந்த குறிப்பை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும்.அவர் ஒரு நிதானமான மனிதர். எனினும் அவருடைய குறிப்பு பின்வரும் பொருள்பட அமைந்திருந்தது. “ஒரு மூத்த உறுப்பினர் என்பதைத் தவிர காக்கா வேறு என்ன செய்திருக்கிறார்?” ஒரு மூத்த உறுப்பினர் என்றால் யார்? காக்காவை விமர்சித்தவரின் தாய் தந்தையருடைய வயதுக்காரர்கள் போராட்டத்தைக் குறித்துச் சிந்திக்காத ஒரு காலச் சூழலில் போராடப் போனவர் என்று பொருள். அந்த நபரின் தாய் தந்தையருடைய வயதுக்காரர்களில் பெரும்பாலானவர்கள் சமூகத்துக்காக தங்களை அர்ப்பணிக்கத் துணியாத ஒரு காலகட்டத்தில் தன்னை அர்ப்பணிக்கத் முன்வந்த ஒருவர் என்று பொருள்.இப்போதுள்ள ஜனாதிபதி அனுரா சிங்கள மக்களுக்காகப் போராடப் போக முன்னரே தமிழ் மக்களுக்காகப் போராடப் போன ஒருவர்.இன்றைக்கு பஷீர் காக்கா கூறும் கருத்துக்கள் சில கட்சிகளுக்கோ அரசியல் செயற்பாட்டாளர்களுக்கோ பிடிக்காமல் இருக்கலாம்.ஆனால் அவருக்கென்று ஒரு பெறுமதியான இறந்த காலம் உண்டு. அதைக் கவனத்தில் எடுத்துத்தான் அடுத்த தலைமுறை கருத்து கூறலாம். இவ்வாறு சமூகத்தில் மூத்தவர்களையும் முன்னோடிகளையும் சமூகத்துக்காகத் தங்களை அர்ப்பணிக்கத் தயாராக இருந்தவர்களையும் அடுத்த தலைமுறை அவமதிக்குமாக இருந்தால் இது எங்கே கொண்டு போய்விடும்? ஒரு சமூகம் அதன் தொடர்ச்சியை இழந்து விடும்.தொடர்ச்சியை இழப்பது என்பது வரலாற்றை இழப்பதுதான்.
தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் அதுதான் நிலைமை. துவாராகவை முன்னிறுத்தி நிகழும் வாதப் பிரதி வாதங்களைப் பார்த்தால் அது தெளிவாகத் தெரிகிறது. சீமானை முன்னிறுத்தி நிகழும் வாதப் பிரதி வாதங்களும் அதைத்தான் காட்டுகின்றன. ஒரு இயக்கத்தின் ஆதரவாளர்களும் அபிமானிகளும் இரு வேறு அணிகளாக நின்று மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இயக்கத்தின் தலைவருடைய குடும்பத்துக்குள்ளேயே இரண்டு அணிகள் உருவாகிவிட்டன. இரண்டும் பொதுப் பரப்பில் மோதிக் கொள்கின்றன. ஊடகங்கள் அதை மேலும் ஊதிப் பெருப்பிக்கின்றன. தமிழ்ச் சமூகம் தானே தனக்குள் முட்டி மோதிக் கொள்ளும் ஒரு சமூகமாக, தன்னைத்தானே நம்பாத ஒரு சமூகமாக, தானே தன்னை வெறுக்கும் ஒரு சமூகமாக எப்பொழுது மாறியது?
உளவியலில் என்ற ஒரு ஆங்கில பதம் உண்டு. Pistanthrophobia “பிஸ் டாந்ரோ ஃபோபியா”. அதன் பொருள் யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பாமை. அல்லது மற்றவர்களை நம்புவதற்கு பயப்படுவது. (An irritational fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இது போன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இந்தப் பயம் தனிமனித உறவுகளுக்கு இடையிலும் வரும். சமூக உறவிலும் வரும். சமூகங்களுக்கு இடையிலான உறவிலும் வரும். நாடுகளுக்கு இடையிலான உறவிலும் வரும்.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலின் ஒரு பகுதியாக இந்தப் பயம் காணப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் மற்றவர்களைக் கடித்துக் குதறுபவர்கள், வெறுப்பர்கள், ஊடகவியலாளர்கள்..என்று சமூகத்தின் எல்லாப் பிரிவினர் மத்தியிலும் இந்தப் பயம் காணப்படுகிறது.
2009க்குப்பின் ஈழத்தமிழர் கூட்டு உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானதாக, தன் தோல்விகளுக்கு வேறு யார் மீதாவது பழியைப் போட முயற்சிக்கும் ஒன்றாக மாறிவிட்டது. அது எதிரி யார் நண்பர் யார் என்று நிதானமிழந்து தனக்குள் தானே அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அதன் விளைவு தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தேர்தல் முடிவுகள் ஆகும்.
தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி ஆகிய தமிழரசுக் கட்சி அதைப் பிரதிபலிக்கிறது. மாவை சேனாதிராஜாவும் அந்த சீரழிவுக்குப் பொறுப்பு. சம்பந்தர் கட்சியை திசை மாற்றிய பொழுது மாவையும் அதற்குச் சாட்சியாக இருந்தார். அதன் விளைவாக கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இருந்து வழுகிச் சென்றது. மாவை சேனாதிராஜாவிடமிருந்து சிறீதரன் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் தமிழரசுக் கட்சி ஒரு கட்சியாகத் தூர்ந்து கொண்டு போகிறது. அதற்குள் இரண்டு அணிகள் பலமாக எழுந்து வருகின்றன. இதில் ஒரு தெளிவான, தீர்க்கமான முடிவை எடுக்க சிறீதரன் தயங்குவாராக இருந்தால் மாவைக்கு நடந்ததுதான் எதிர்காலத்தில் அவருக்கும் நடக்கலாம்.
சம்பந்தர், மாவை ஆகிய இருவருடைய கடைசிக் காலங்களில் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இருவருமே தோல்வியுற்ற தலைவர்களாகத்தான் இறந்திருக்கிறார்கள். தமிழ்க் கட்சிகளின் மூத்த தலைவர்கள் தோல்வியுற்ற தலைவர்களாக இறப்பது என்பது ஒரு விதத்தில் தமிழ் அரசியலின் தோல்வியுந்தானே? மாவையின் உடலை சுவிகரித்து கட்சியின் ஒரு பகுதியினரை சுடலைக்கு வர வேண்டாம் என்று தடுக்கும் அரசியலை விடவும் மாவையின் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டு, கட்சிக்குள் உறுதியான கட்டிறுக்கமான ஒரு தலைமையைக் கட்டியெழுப்புவது தான் இப்பொழுது சிறீதரன் அணி செய்ய வேண்டிய வேலை. தலைமைத்துவம் எனப்படுவது வாய்ப்புகளுக்காக நசிந்து நசிந்து காத்திருப்பது அல்ல. வாய்ப்புகளை உருவாக்குவது. அல்லது கிடைக்கும் வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவது. கடந்த சுதந்திர தினத்திலன்று கிளிநொச்சியில் சிறீதரனும் கஜேந்திரக்குமாரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை அவ்வாறு கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தும் அரசியல்தான்.