புதிய சுதந்திரன் இணைய வழி பத்திரிகையின் வெளியீட்டாளர் அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரன் தொடுத்த வழக்கு ஏப்ரல் 29 அன்று விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது
Share

‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் 12ம் திகதி புதன்கிழமை முடிவு செய்தது.
தமிழரசுக் கட்சி தொடர்பான வழக்கு 12ம் திகதி நீதிபதி பயாஸ் ரஸாக் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டது.
இந்த வழக்கின் எதிராளிகளில் ஒருவரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தொடர்பில் அகிலன் முத்துக்குமாரசாமி புதிய சுதந்திரன் பத்திரிகையில் பிரசுரம் செய்த செய்திக் கட்டுரையானது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும் என வழக்கின் எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அந்த விடயம் குறித்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம் அன்று திகதி நிர்ணயம் செய்திருந்தது.
இந்த விடயத்துக்காக வழக்கின் எதிராளியாக குறிப்பிடப்பட்டுள்ள திரு அகிலன் முத்துக்குமாரசாமி சத்திரசிகிச்சை ஒன்றினை கனடாவில் மேற்கொண்டமையால் நீதிமன்ற விசாரணைக்கு சமுகம் தரவில்லை. ஆயினும், அவர் சார்பில் சட்டத்தரணி பிரசன்னமாகி இருந்தார்.
எனினும், அவர் வெளிநாட்டில் இருக்கிறார் எனவும், அவர் பயணம் செய்வதற்கேற்ற நிலையில் உடல்நிலை இல்லை என்று தெரிவிக்கும் மருத்துவச் சான்றிதழை அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் அவருக்கு 12ம் திகதி நீதிமன்றத்தில் பிரசன்னமாக இல்லாமல் இருக்க அனுமதிப்பது என நீதிமன்றம் முடிவு செய்து ஏப்ரல் 29 ஆம் திகதிக்கு அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது