LOADING

Type to search

இலங்கை அரசியல்

வவுனியா பல்கலையில். தொழில்வாய்ப்பிற்கான தலைமைத்துவப் பயிற்சி

Share

இரட்ணம் பவுண்டேஷன் மற்றும் விசன்ஸ் குளோபல் எம்பவர்மென்ட் நிறுவனங்களினால், வவுனியா பல்கலைக்கழகத்தில் தொழில் வழிகாட்டல் அலகின் ஒருங்கிணைப்புடன், ஐந்து நாட்கள் தொழில்வாய்ப்பிற்கான தலைமைத்துவப் பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது. ஆங்கில மொழி மூலம் நடாத்தப்பட்ட இப்பயிற்சிப்பட்டறையில் வவுனியா பல்கலைக்கழகத்தின் வணிகக் கல்விப் பீடத்தைச் சார்ந்த சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் மாணவர்கள் உள்ளடங்கலாக மொத்தம் 35 மாணவர்கள் பங்குபற்றி தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை திறன்கள் தொடர்பில் பங்கேற்றல் முறையில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

இந்தப் பயிற்சி பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கை தொடர்பான ஊக்குவிப்பிற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது எனலாம். பயிலுனர்கள் இப்பயிற்சியில் தங்களது வாண்மைத்துவத்தை மேம்படுத்துவது தொடர்பிலும், தொழில்ரீதியாக தயார்படுத்துவதிலும் ஊக்கமெடுத்து, தலைமைத்துவம் சார்ந்த துலங்கல்களை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்கள். ஒவ்வொரு பயிலுனரும் தமது வாழ்வின் அர்த்தம் (இகிகாய் – ஜப்பானிய சொல்) பற்றி சிந்தித்து, சுயவிருத்தி திட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்.

நீண்ட கால அடிப்படையில் தொடர் கண்காணிப்புடன் ஒரு வருட நிகழ்ச்சித்திட்டமாக செயற்படுத்தப்பட்டு, மாணவர்களை சிறந்த திறன் கொண்டவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் பயிற்சியில், பயிலுனர்கள் ஐந்து குழுக்களாக செயல்பட்டு சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதை நோக்கமாகக் கொண்ட செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளனர். தொழில் முயற்சியாண்மை, மரம் நடுதல், தொழில்நுட்பம் தொடர்பான விழிப்பூட்டல் மற்றும் கழிவு முகாமைத்துவம் போன்ற சமூக செயல் திட்டங்களை எதிர் வரும் ஒரு மாத காலப் பகுதியில், தொழில் வழிகாட்டல் அலகின் ஆலோசனையில் வெவ்வேறு தளங்களில் அமுலாக்கம் செய்ய உள்ளனர். இவ்வாறு, இந்தப் பயிற்சியின் மூலம், சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வினையூக்கியாக பயிலுனர்கள் செயல்பட்டு, சிறந்த தலைவர்களாகவும், சமூகத்திற்குப் பயனுள்ள நற்பிரஜைகளாகவும் தங்களை வெளிப்படுத்த உள்ளனர்.

பயிற்சி பட்டறையின் இறுதி நாளில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் வைபவத்தில், பல்கலைக்கழக உபவேந்தரும் சிரேஷ்ட பேராசிரியருமான மதிப்பிற்குரிய. அற்புதராஜா அவர்களின் கரங்களால் அனைத்து பயிலுனர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பின்னூட்டலின் போது, முவின மாணவர்களும் உட்படுத்தப்பட்டு ஆங்கில மொழியில் இப்பயிற்சி வழங்கப்பட்டதை பயிலுனர்கள் பெரிதும் வரவேற்று பாராட்டினர்.