LOADING

Type to search

இலங்கை அரசியல்

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பம்!

Share

இருபக்க அணிகளுக்கும் தலைமை தாங்கும் ‘மதுஷன்’ கள்

பு.கஜிந்தன்

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும் பங்குனி 01 (வியாழன், வெள்ளி, சனி) ஆகிய மூன்று தினங்களிலும் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சென் பற்றிக்ஸ் கல்லூரி 175வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வாண்டு பொன் அணிகள் போரின் வரலாற்றில் முதன் முறையாக மூன்று தின போட்டியாக இது நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத் தொடரின் தொடர்ச்சியாக 32வது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி 08/03/2025 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கும், அருட் திரு G.A. பிரான்சிஸ் யோசப் வெற்றிக் கிண்ணத்துக்கான 5வது இருபதுக்கு இருபது (T-20) கிரிக்கெட் போட்டி மார்ச் 12 புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கும் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதுவரை காலமும் நடைபெற்ற போட்டிகளில் இரு நாள் போட்டிகளில் சென் பற்றிக்ஸ் கல்லூரி 35 தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி 16 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளன. 31 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

ஒரு நாள் போட்டியில் (மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள்) 23 தடவைகள் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் 7 தடவைகள் யாழ்ப்பாணக்கல்லூரியும் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி இடைநிறுத்தப்பட்டது.

T-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தடவைகளும் யாழ்ப்பாணக் கல்லூரி ஒரு தடவையும் வெற்றி பெற்றுள்ளன.

இவ்வருடம் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணிக்கு செல்வன் பற்குணம் மதுஷன் அவர்களும் யாழ்ப்பாண கல்லூரி அணிக்கு செல்வன் சிதம்பரலிங்கம் மதுஷன் அவர்களும் தலைமை தாங்குகின்றனர்.