LOADING

Type to search

இலங்கை அரசியல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழ்க் கட்சிகள்

Share

– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு சந்திப்பில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கூட்டை உருவாக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இக்கூட்டுக்குள் ஏற்கனவே சங்குச் சின்னத்தின் கீழ் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளும் உள்ளிட்ட மொத்தம் ஒன்பது கட்சிகள் ஒன்றிணைந்திருப்பதாகக் கூறப்பட்டது. ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்பட்ட தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம், விக்னேஸ்வரனின் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளோடு கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியும் இந்தக் கூட்டுக்குள் அடங்கும் என்று கூறப்பட்டது.மேலும், முன்பு தமிழரசுக் கட்சிக்குள் இருந்த சரவணபவன், தவராசா ஆகியோரின் சுயேச்சைக் குழுவும் இந்த கூட்டுக்குள் வருவதாகக் கூறப்பட்டது.

கூட்டுக்கான சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பொழுது அதில் கலந்து கொண்ட விக்னேஸ்வரனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டுக்குள் சந்திரகுமாரை இணைப்பது தொடர்பாக கட்சியின் தலைவராகிய விக்னேஸ்வரனோடு கதைத்து முடிவெடுக்க வேண்டும் என்று கூறி கூட்டத்துக்கு வெளியே போய் அலைபேசியில் கதைத்திருக்கிறார்கள்.

மேலும் சந்திப்பில் கலந்து கொண்ட ஒரு கட்சியைச் சேர்ந்தவர் வேறு ஒரு விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். இக்கூட்டில் இப்பொழுது சந்திரகுமார் இருக்கிறார். எதிர்காலத்தில் சிறீதரன் தமிழரசு கட்சிக்குள் இருந்து வெளியேறி இக்கூட்டுக்குள் வர விரும்பினால் அவர் சந்திரகுமார் இருக்கும் கூட்டுக்குள் இணையத் தயாராக இருப்பாரா? என்று.அப்பொழுது சந்திரகுமார் கூறினாராம், பிரச்சினை இல்லை தமிழரசுக் கட்சிக்குள் இருந்து சிறீதரன் வெளியேறினால் நாங்கள் தமிழரசுக் கட்சியோடு இணைந்து விடுகிறோம் என்று.

இக்கூட்டின் பிரதான நோக்கம்,தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதைத் தடுப்பதுதான் என்று சிறீகாந்தா சுட்டிக்காட்டியிருக்கிறார். இதில் எந்தக் கட்சி முன்பு யாரோடு நின்றது என்ற விவாதங்களுக்கு இடமில்லை.தேசிய மக்கள் சக்தியை உள்ளூராட்சி சபைகளில் எப்படித் தோற்கடிப்பது என்றுதான் யோசிக்க வேண்டும் என்ற பொருள்பட அவர் உரை நிகழ்த்தியுள்ளார். முடிவில் கூட்டுத் தொடர்பான விவரங்களை சுரேஷ் பிரம்மச்சந்திரன் ஊடகங்களுக்கு வழங்கினார்.

ஆனால் அடுத்த நாள் அதாவது திங்கட்கிழமை அதை மறுத்து ஐங்கரநேசனின் தமிழ்த்தேசிய பசுமை இயக்கம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்டிராத கட்சிகளோடு இணைந்து செயல்படுவதில் தமக்குள்ள விருப்பமின்மையை வெளிப்படுத்திய அந்த அறிக்கையில்,புதிய கூட்டுத் தொடர்பாக தாம்  இன்னமும் முடிவெடுக்கவில்லை என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது. விக்னேஷ்வரனின் கட்சியிடமும் அவ்வாறான குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது. கடந்த புதன்கிழமை நடந்த கட்சிகளின் சந்திப்பின்போது மணிவண்ணன் ஊடகங்களுக்குக் கூறியது அதைத்தான் காட்டுகிறது.குறிப்பாக சந்திரகுமாரை கூட்டுக்குள் உள்வாங்குவது தொடர்பாக இந்த இரண்டு கட்சிகளிடமும் தயக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

தொடக்கத்திலேயே பிரச்சினை.அதை விடப் பிரச்சினை, இந்தக் கூட்டு தேசிய மக்கள் சக்திக்கு எதிரானதா?அல்லது சிறீதரனுக்கு எதிரானதா? என்ற கேள்வி. ஏனென்றால் சந்திரக்குமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான பகை அதிகம்.அது உள்ளூர்த் தன்மை மிக்கது.முன்பொரு காலம் விடுதலைப் புலிகளின் ஆட்சிக்குள் கிளிநொச்சி இருந்த பொழுது, அந்த அமைப்புக்கு ஆதரவாக இருந்தவர்கள் அல்லது அந்த அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வகித்த, பின்னர் புனர்வாழ்வு பெற்று வந்த, ஒரு தொகுதியினர் சந்திரகுமாரோடு நின்றார்கள். இப்பொழுதும் நிற்கிறார்கள்.அதேசமயம் இன்னொரு தொகுதியினர் சிறீதரனுடன் நிற்கிறார்கள்.இங்கே பிரச்சனை இதுதான். 2009க்கு முன் ஒரு அமைப்போடு நின்றவர்கள் இப்பொழுது இரண்டு கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். இந்த மாவட்ட மட்டப் பகை ஒப்பீட்டளவில் கூர்மையானதாகக் காணப்படுகிறது.சந்திரகுமார் டக்ளஸ் தேவானந்தாவிடமிருந்து விலகி சில ஆண்டுகள் ஆகிவிட்டன.எனினும் சிறீதரனுக்கும் அவருக்கும் இடையிலான மோதல் தணிவதாகத் தெரியவில்லை.

இந்நிலையில் அந்தக் கூட்டுக்குள் சந்திரகுமார் இருக்கும்வரை சிறீதரன் அந்த கூட்டுக்குள் வரப்போவதில்லை.அதுமட்டுமல்ல,சந்திரகுமாருக்கும் சுமந்திரனுக்கும் இடையே ஏற்கனவே உரையாடல் நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் உண்டு. இந்நிலையில் சிறீரனுக்கு எதிராக, அந்த கூட்டுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான இணக்கம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் கிளிநொச்சியில் சந்திரகுமாருக்கு ஆதரவானவர்கள் சுதந்திரனுக்கும் ஆதரவாகக் காணப்படுகிறார்கள்.

சந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையில் உள்ள விரோதத்தைப் போன்றதுதான் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான விரோதமும்.இரண்டு பேருமே பொது எதிரியை விடவும் ஒருவர் மற்றவரைத்தான் அதிகம் விரோதமாகப் பார்க்கின்றார்கள்.அதனை அவர்களுடைய ஆதரவாளர்கள் முகநூலில் போடும் குறிப்புகளில் காண முடியும்.சிறீதரனை எப்படிக் கட்சியை விட்டு அகற்றுவது என்று சுமந்திரன் சிந்திக்கிறார். கட்சியை விட்டு நீங்காமல் கட்சிக்குள் இருந்தபடியே எப்படி சுமந்திரனை வெற்றி கொள்வது என்று சிறீதரன் சிந்திக்கின்றார். சிறீதரனாக கட்சியை விட்டுப் போகமாட்டார் என்பது இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது. அதே சமயம் சுமந்திரன் அணியும் அவரை பலவந்தமாக நீக்காது என்று தெரிகிறது.இந்த நிலைமை தொடரும் வரை கட்சி இரண்டு அணிகளாகப் பிளவுண்டே காணப்படும்.

அதைப் போலவே கஜேந்திரக்குமாருக்கும் மணிவண்ணனுக்கும் இடையிலான விரோதமும் கூர்மையானது. விக்னேஸ்வரனின் கட்சியின் பிரதிநிதியாக இது போன்ற சந்திப்புகளில் மணிவண்ணன் பங்குபற்றுவதுண்டு. இவ்வாறு மணிவண்ணன் அந்த கூட்டுக்குள் காணப்பட்டால் கஜேந்திரக்குமார் அந்த கூட்டை எதிர் நிலையில் வைத்தே பார்ப்பார்.

இவ்வாறு கட்சிகளுக்குள் காணப்படும் பிளவுகள், ஒரு மாவட்டத்தில் காணப்படும் பிளவுகள், போன்ற பல அம்சங்களினது பிரதிபலிப்பாக ஒரு புதிய கூட்டு உருவாகியிருக்கிறது. இக்கூட்டானது தமிழ்த் தேசிய வாக்குகளை ஒன்றிணைக்குமா ?

ஏற்கனவே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஓர் ஒன்றிணைவு முயற்சியை முன்னெடுத்தது.ஆனால் அது தேர்தலுக்கானது அல்ல என்று அந்தக் கட்சி கூறிக்கொள்கிறது. அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்க முயற்சித்தால் அதை நோக்கித் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே முன்னணியின் நோக்கம்.அந்த அடிப்படையில் முன்னணியானது ஏற்கனவே சிறீதரனோடு சந்திப்புகளை நடத்தியிருக்கிறது.செல்வம் அடைக்கல நாதனோடும் சந்திப்புகளை நடத்தியிருக்கிறது.

இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியிடம் உத்தியோகபூர்வமான ஒரு முடிவை கேட்டு கஜேந்திரகுமார் உத்தியோகபூர்வமாக ஒரு கடிதத்தை எழுதியிருந்தார்.அதற்குப் பதில் கடந்த வாரம் தமிழரசுக் கட்சியால் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தப் பதிலின்படி தமிழரசுக் கட்சி மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக இல்லை என்று தெரிகிறது.ஆனால் சிறீதரன் தொடர்ந்தும் அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஒத்துழைப்பார் என்று கருதத்தக்கதாக அவருடைய கருத்துக்கள் காணப்படுகின்றன. அப்படியென்றால் அவர் கட்சியின் மத்திய குழுவை மீறித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்க போகின்றாரா ?

இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் தொடர்பாக கஜேந்திரகுமார், செல்வம் அடைக்கலநாதனோடும் ஏற்கனவே உரையாடியிருக்கிறார். செல்வம் அங்கம் வகிக்கும் சங்குக் கூட்டணியானது அது தொடர்பாக உத்தியோபூர்வமான கருத்து எதையும் தெரிவித்திராத ஒரு பின்னணியில், கடந்த வாரம் ஒரு புதிய கூட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இப்பொழுது இரண்டு ஒருங்கிணைப்பு முயற்சிகள் தமிழ்த் தேசியப் பரப்பில் உண்டு. முதலாவது ஒருங்கிணைப்பு முயற்சி, ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைவது. இரண்டாவது ஒருங்கிணைப்பு முயற்சி விரைவில் வரக்கூடிய தேர்தல்களை நோக்கி ஐக்கியப்படுவது. முதலாவது முயற்சி தேர்தல் நோக்கத்துக்கானது அல்ல என்று கூறப்படுகிறது.

ஆனால் இந்த இரண்டு முயற்சிகளும் ஒன்று மற்றதற்கு ஆதரவாக இல்லை என்று கருதத்தக்க விதத்தில்தான் நிலைமைகள் காணப்படுகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவாகிய கூட்டு தேசிய மக்கள் சக்திக்கு எதிரானது மட்டுமல்ல கஜேந்திரகுமாருக்கும் சிறீதரனுக்கும் இடையிலான உறவிற்கும் எதிரானதா என்ற கேள்விக்கு விடை மிக முக்கியம்.

எனவே இரண்டு கூட்டுக்களையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தமிழ்த் தேசிய வாக்குகளை அவர்கள் ஒன்று திரட்டுவார்களா அல்லது சிதறடிக்கப் போகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

இதேசமயம் கிடைக்கும் தகவல்களின்படி, தென்மராட்சியில் உள்ளூராட்சித் தேர்தலில் அருந்தவபாலன் சுயேச்சையாக ஒரு அணியை இறக்கப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அனந்தி சசிதரனும் அவ்வாறு ஒரு திட்டத்தோடு இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் அவர் இப்பொழுது ஜெனிவா கூட்டத் தொடருக்காக ஸ்விட்சர்லாந்துக்கு வந்து விட்டார். மேற்படி அணிக்குள் மன்னாரைச் சேர்ந்த சிவகரனும் காணப்படுகிறார். இவர்கள் மூவரும் ஏற்கனவே இது தொடர்பாகச் சந்தித்துப் பேசியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் சுமந்திரன் இவர்களை விரைவில் சந்திக்கப் போவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

அருந்தவபாலன் கூட்டமைப்புக்குள் இருந்தபொழுது சுமந்திரனால் அவமதிக்கப்பட்டு அதிலிருந்து வெளியேறியவர்.அவருக்கென்று தென் மாராட்சியில் வாக்கு வங்கி ஒன்று உண்டு. ஆனால் அவர் பெருமளவுக்குத் துடிப்பாகச் செயல்படாத ஒரு பின்னணியில், அவருடைய வாக்கு வங்கி தொடர்ந்து பலமாக உள்ளதா இல்லையா என்ற சந்தேகங்கள் உண்டு. அப்படித்தான் சிவகரனின் விடயத்திலும். அனந்திக்கு அப்படிப்பட்ட வாக்கு வங்கியே கிடையாது. அவருடைய கட்சிக்குள்ளும் அவரை விட வேறு யாரையும் பார்க்க முடியவில்லை. அது ஒரு தனிநபர் கட்சி.இந்த மூன்று பேர்களையும் சுமந்திரன் சந்திப்பதன் நோக்கம் அவர்களை மீண்டும் தமிழரசுக் கட்சிக்குள் உள்வாங்குவதை இலக்காகக் கொண்டது என்று ஒரு கதை உண்டு.

இப்படிப் பார்த்தால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்க் கட்சிகள் புதிய ஒருங்கிணைப்புக்களை நோக்கிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இந்த விடயத்தில் சற்று முன்கூட்டியே தமிழ்க் கட்சிகள் சிந்தித்திருப்பது சாதகமானது. ஆனால் மேற்படி ஒருங்கிணைப்பு முயற்சிகளும் சந்திப்புகளும் எதைக் காட்டுகின்றனவென்றால், தமிழ்த் தேசிய வாக்குகளை ஒன்றிணைப்பதற்கு கட்சிகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதைத்தான்