“எமது மொழியினதும் பண்பாட்டுக் கோலங்களினதும் தொன்மையை ஆசிரியப் பெருந்தகைகளோடு இணைந்து கொண்டாடுவதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்”
Share

ஒன்றாரியோ தமிழாசிரியர்கள் சங்கத்தினர் நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ நிகழ்வில் உரையாற்றிய ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம்
ஈழத்தமிழர்களாகிய நாம் மாத்திரமல்ல, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் அனைவருமே தங்கள் ஆசிரியர்களையும் பெற்றோரையும் மதிக்கின்றவர்களாக விளங்குகின்றார்கள். எனவே இன்றைய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கின்ற ஒன்றாரியோ தமிழாசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரோடு இணைந்து கொண்டாடுவது மிகவும் உகந்ததான காரணமாக விளங்குகின்றது. இவ்வாறான விழாவில். எமது மொழியினதும் பண்பாட்டுக் கோலங்களினதும் தொன்மையையும் இன்று வரையிலுமான தொடர்ச்சியையும் ஆசிரியப் பெருந்தகைகளோடு இணைந்து கொண்டாடுவதில் நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டும்”
இவ்வாறு கடந்த ஒன்றாரியோ தமிழாசிரியர்கள் சங்கத்தினர் நடத்திய ‘தமிழர் மரபுரிமை மாதம்’ நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய ‘கனடா உதயன்’ பிரதம ஆசிரியரும் கனடா- பல்லினப் பத்திரிகையாளர்கள் கழகத்தின் சிரேஸ்ட உபு தலைவருமான ஆர். என் லோகேந்திரலிங்கம் புகழாரம் புகழாரம் சூட்டினார்.
ஸ்காபுறோவில் அமைந்துள்ள Wexford Collegiate School for Arts உயர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ரொறன்ரோ கல்விச் சபையின் தலைவரும் அரசியல் பிரமுகருமான நீதன் சண் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் அழைக்கப்பெற்றிருந்தார்.
ஒன்றாரியோ தமிழாசிரியர்கள் சங்கத்தின் தலைவி திருமதி ஹனிசியா கொட்வின் தலைமை தாங்கினார். சக ஆசிரியப் பெருந்தகைகளும் மேடையில் பல பணிகளுக்காக அழைக்கப்பெற்றார்கள்.
ஆரம்பத்திலிருந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் உரைகளும் இடம்பெற்றன. அவற்றை சபையில் அமர்ந்திருந்த பெற்றோர் மற்றும் சக ஆசிரியைகள் ஆகியோர் உணர்ந்து ரசித்த வண்ணம் இருந்தனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம்
“இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் வெளியே புலம் பெயர்ந்த தமிழர்கள் அதிகளவில் வாழ்ந்து வரும் கனடாவில் மூன்று வகையான அரசாங்கங்களும் ஏற்றுக் கொண்டு அங்கீகரித்த தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டங்கள் தற்போது உலகின் பல நாடுகளின் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பெற்று ஒவ்வொரு வருமும் ஜனவரி மாதத்தை தமிழர் பெருவிழாவாக கொண்டாடும் பெரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளோம்.
இதன் அடிப்படையில் எமது மொழி சார்ந்த மற்றும் பண்பாடு சார்ந்த சாதனைகளும் அடையாளங்களும் பாதுகாக்கப்படுவது காலத்தின் தேவையாக உள்ள விடயமாகும்.
அதனடிப்படையில் தற்போதிருக்கும் எமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவிகளாக இளம் சமூகத்தினர் மத்தியில் இவ்வாறான விழாக்கள் நடத்தப்பெறுவது அவசியமாகும் . ஒன்றாரியோ தமிழாசிரியர் சங்கத்தினரும் இந்த விழாவை நடத்துவதன் மூலம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இயங்கிவருவது பாராட்டுக்குரியது” என்றார்
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீதன் சாண் அவர்கள் தனது உரையில் எமது மொழியையும் அதன் வழிவந்த கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டின் விழுமியங்களை கொண்டாடவும் அதற்காக நாம் வாழும் கனடாவின் அரச மட்டத்தில் பெற்றுக்கொண்ட உயரிய அங்கீகாரமும் எமது மொழியின் பெருமையை தக்க வைத்து;க்; கொள்ளும் வீரியம் கொண்டவையாக விளங்குவதை நாம் பெருமையோடு பார்க்க வேண்டும்”என்றார்.
தொடர்ந்து. ஆசிரியப் பெருந்தகைகள் நீதன் சாண் அவர்களால் கேடயங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பெற்றார்கள்.
ஒரு முழுமையான தமிழ்ப் பண்பாட்டு விழாவாக அன்றைய நாளில் ஒன்றாரியோ தமிழாசிரியர் சங்கத்தினர் நடத்தியமை பாராட்டுக்குரியது.