யாழ்ப்பாணத்தில் பொறியியலாளர் ஒருவரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன்!
Share

பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் பொறியியலாளரின் தன்னிச்சையான செயற்பாட்டால் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன்!
மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் அந்த கடற்பகுதியில் மீனவரின் படகு ஒன்று விபத்துக்குள்ளாகி அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மீனவர்கள் செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கையில்,
கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. எட்டு இலட்சம் ரூபா வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டனர்.
இதனால் ஆபத்து என்றும் நாங்கள் கூறினோம். ஆனால், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளரான கெங்காதரன் தர்சன் என்பவர் எமது திட்டவரைபை புறந்தள்ளிவிட்டு பழிவாங்கும் நோக்குடன் தனது விருப்பப்படி அபிவிருத்தியில் ஈடுபட்டார். நாங்கள் கேள்வி கேட்டதன் காரணத்தால் அபிவிருத்தி பணிகளை 5 மீற்றர்கள் தூரம் குறைத்து செய்யுமாறும் வேலையை செய்பவர்களுக்கு கூறினார்
இந்நிலையில் 26ம் திகதி அன்று புதன்கிழமை காலை இருவர் படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றுவிட்டு திரும்பினர். இதன்போது அந்த அபிவிருத்தி செய்த இடத்தில் படகு மோதியதில் படகில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் 20 வயது இளைஞன் படுகாயமடைந்த நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு பிறகும் உரிய அதிகாரிகள் எமது கருத்து கேட்காவிட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர்.