Canada Saivite Council for Spiritual Support in Healthcare | சுகாதார சேவையில் கனடா சைவ ஆன்மீக ஆதரவுச்சபை
Share

நாம் பிறந்தது முதல் வாழ்வின் முதுமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். முதுமையிலும் சிலர் இயலாமை நிலையை அடைகிறோம். அந்நிலையில் நாம் வைத்தியசாலைகளிலும், நீண்ட கால பராமரிப்பு நிலையங்களிலும் எமது வாழ்வின் இறுதி நாட்களைக் கழிக்க நேரிடும். இந்நிலைக்குத் தள்ளபடும்போது, ஆதரவை இழந்து சமுதாயத்ததிலிருந்தும் அகற்றப்பட்ட விரக்திநிலை உருவாகலாம். இன்று சுகவாழ்வை அனுபவிக்கும் எவருக்கும் இந்நிலை ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு உண்டென்பதை மறுக்க முடியாது. இந்நாட்டில் முதற்குடியேறிய தமிழ் மக்களில் பலர் தற்போது வயது முதிர்ந்தவர்களாய் நீண்டகால பராமரிப்பு நிலையங்களிலும், வைத்தியசாலைகளில் வாழ்வின் இறுதி நிலையை நோக்கியவர்களாக இருக்கிறார்கள்
இந்நிலையில் இருக்கும் எமது மூத்த சகோதர, சகோதரிகளை எமது தமிழ் சமுதாயம் கருத்திற் கொள்ளல் வேண்டும். கடும் நோய், அல்லது தீராதநோய் ஏற்படும்போது ஆன்மீக சிந்தனை அதிகமாக எழுவது சகஜம். அப்படியானவர்களுக்கு வைத்தியசாலைகளிலும், நீண்டகால பராமரிப்பு நிலையங்களிலும் ஒத்தாசையும் ஆதரவும் வழங்கவதற்காக சைவ ஆன்மீக ஆதரவுச்சபை 2008ம் ஆண்டில் புரோவிடன்ஸ் ஹெல்த்கியாரின் (Providence Healthcare) தமிழ்பராமரிப்பாளர் திட்டதினால் நிறுவப்;பட்டது.
அன்றைய நடைமுறையிலான அவசர தேவை கருதி இதைத் துவக்கி வைப்பதில் வண. பிதா ஜோசப் சந்திரகாந்தன் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவரது உந்துதலின் பேரிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஆன்மீக ஆதரவு வழங்கக்கூடிய சைவநெறியாளர்களைத் தேர்ந்தெடுத்து விசேட பயிற்சிக்கான பாடத்திட்டத்தை சைவசமயப் பெரியார்களின் ஒத்துழைப்புடன் உருவாக்கியதுடன், அநேக விரிவுரையாளர்களையும் தெரிந்து பயிற்சித்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். அன்று முதல் இன்று வரை டாக்டர் சண் சண்முகவடிவேல் தலைமையில் இத்திட்டம் தொடர்ந்து இயங்கிக்கொண்டு வருகிறது. இது அரசு அங்கீகாரம் பெற்ற அறக்கட்டளை நிறுவனமாகும். (Approved Charity)
சேவைகள்
பதின்மர் இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்து தற்பொழுது ஸ்காபரோ ஜெனரல், சென்றினரி வைத்தியசாலைகளிலும், எக்ஸ்ரெண்டி கியர், செவன் ஓக்ஸ், ரொக்கிளிப் ஆகிய நீண்ட நாள் பராமரிப்பு நிலையங்களிலும் நோயாளரைச் சந்தித்து அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் வழங்குவதுடன் சைவசமய வழிபாட்டு சமயாசாரங்களையும் நடாத்தி வருகிறார்கள். இன்னும் அநேக வைத்தியசாலைகளும், நீண்ட நாள் பராமரிப்பு நிலையங்களும் இப்பணிக்காகக் காத்திருக்கின்றன.
ஆன்மீக ஆதரவு அளிப்பதே இச்சபையின் முக்கிய நோக்கமாய் உள்ளது. இதற்காக செவன்ஓக்ஸ் நீண்டநாள் பராமரிப்பு நிலையத்திலும், எக்ஸ்டென்டிக்கியர் நீண்ட நாள் பராமரிப்பு நிலையத்திலும் சைவ பூசைக்கூடம் நிரந்தரமாக நிறுவியுள்ளோம். தமிழர் வதியும் மற்றைய நீண்டநாள் பராமரிப்பு நிலையங்களிலும் சைவ பூசைக்கூடம் அமைக்கக்க வேண்டியது அவசியம்..
கூட்டு நிகழ்ச்சியாக தேவாரம் பாடுதல், சைவபூசை நடாத்துதல், விபூதி கொடுத்தல் என்பதுடன், சில தமிழ் கலைநிகழ்ச்சிகளையும் நடாத்தி அவர்களை ஆற்றுப்படுத்துகிறோம். படுத்த படுக்கையாக இருக்கும் சிலரைத் தனிப்பட்ட முறையில் சந்தித்து, தேவாரம் பாடி விபூதி அளிக்கிறோம். வாழ்வின் இறுதித் தருணத்திலிருப்போர் ஆன்மீக சேவையை விரும்பினால், நிலைய முகாமையாளர் எங்களுடன் தொடர்பு கொள்வார்கள். அப்போது சேவையாளர் அங்கு சென்று விசேட சமயாசார நிகழ்ச்சி நடாத்துவதுடன், குடும்பத்தினருக்கும் ஆதரவு வழங்குகின்றனர். மேலும், பொங்கல், தீபாவளி, சித்திரை வருடப்பிறப்பு போன்ற விசேட தினங்களை கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுவோம்.
வெகு விமரிசையாக நடந்துகொண்டுவந்த நிகழ்வுகள் கோவிட் 19 காரணமாக தடைப்பட்டது. நேர்முகமாக அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாவிடினும், சூம் (Zoom) முலமாக அவர்களுடன் தொடர்பு கொண்டு எங்கள் சேவைகளை நடாத்தி வந்தோம். சூம் சேவையை துவக்கி வைத்தவர் டாக்டர் லம்போதரன் அவர்களாகும். தற்பொழுது திருமதி யோகா பத்மநாதன் இச்சேவையை நடாத்தி வருகிறார். இந்நிகழ்வில் அநேக இளம் பிள்ளைகள் பங்கு கொள்கின்றனர். இச்சேவை தொடர்ந்து நடைபெற்றாலும், முன் போன்று நேர்முக சேவை வேண்டுமென எங்களுடன் கேட்டுக்கொண்டனர்;. ஆதலினால் நேர்முக சேவையை மீண்டும் துவக்கியுள்ளோம்.
வருங்காலத் திட்டம்
- கூடிய சைவநெறியாளர்களைத் தெரிந்து அவர்களைப் பயிற்றுவித்து இச்சேவையில் ஈடுபடுத்தல்
- இணையத்தளம் உருவாக்குதல்
- கலைத்திறன் கொண்ட தொண்டர் குழு உருவாக்குதல்
- சைவ ஆன்மீக ஆதரவுச் சேவையை தமிழ் சைவர் வதியும் மற்றைய நீண்ட நாள் பாராமரிப்பு நிலையங்களுக்கும் வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தல்
- இச்சேவையை நடைமுறைப்படுத்த நிதி சேகரித்தல்
இப்பணி தொடர, வைத்தியசாலைகளிலும் நீண்டநாள் பராமரிப்பு நிலையங்களிலும் அல்லலுரும் எம்மவர் ஆதரவு பெற கனடாவிலுள்ள தமிழ் சமூகம் எமக்கு தொடர்ச்சியான அடிப்படையில் ஆதரவளிப்பீர்களென எதிர் பார்க்கிறோம். எம்முடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் saivitecouncil@gmail.com எனும் இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம். நிதியுதவி அளிக்க விரும்புவோர், மேற்கூறிய இணையத்தளம் மூலம் நிதி அளிக்கலாம்.
ஜெயசிங் டேவிட்
இணைப்பாளர்